ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
நல்லாட்சி அரசின் நூறு நாள் வேலைத் திட்டம் என்ற கால எல்லை முடிவடையும்
நிலையில் அந்த திட்டத்தின் கீழ் தொடங்கிய சில பணிகளை புதிய அரசு
முனைப்புடன் முன்னெடுத்துச் செல்கிறது. பொதுமக்கள் நலன் தேசிய அபிவிருத்தி,
அரசியல் என்று இன்னோரன்ன விடயங்கள் அந்த திட்டத்தில் அடங்கப் பெற்றுள்ளன.
ஆட்சியமைப்பதற்கு உறுதுணையாக நின்ற கட்சிகள் விசேடமாக, சிறுபான்மை இனக்
கட்சிகள் முன்வைத்த சில கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்ட நிலையில் அவற்றின்
சிலவற்றையும் புதிய அரசு நூறுநாட்கள் திட்டத்தின் கீழ் நிறைவேற்றிக்
கொடுக்கவும் தவறவில்லை.
இந்த அடிப்படையில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பான தமிழர் சமுதாயம் சார்பாக முன்வைத்த பல கோரிக்கைகளில்
சிலவற்றினை அதாவது, கையளவேனும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளது புதிய அரசு.
வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த
நிலையில் அவற்றில் சில நூறு ஏக்கர்களேனும் விடுவிக்கப்பட்டு
உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை, வடக்கு, கிழக்கில் இராணுவ
சேவையிலிருந்த ஆளுநர்களுக்குப் பதிலாக சிவில் அதிகாரிகள் இருவரை இரு
மாகாணங்களுக்கும் நியமித்தமை, வடக்கில் தொழில்வாய்ப்புகளை வழங்கியமை என்று
சில விடயங்களைச் சிறிதாகவேனும் இன்றைய அரசு நிறைவேற்றிக் கொடுத்துள்ளது.
இதற்கான காரணம் தமிழர்கள் மீதான அரசின் அக்கறை அல்ல. அவர்களை வழிநடத்திச்
செல்லும் சிறந்த தலைமைத்துவம் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
சாணக்கியமும் அழுத்தங்களுமேயாகும். அரசு “வா.. வா” என அழைத்தும் “போ..
போ..” வரமுடியாது என அமைச்சுப் பொறுப்புகளை நிராகரித்து தான் சார்ந்த
சமூகத்தின் நலன்களுக்காக அவர்களின் உரிமைக்காகவும் போராடி கிடைப்பவற்றினைப்
பெற்றுக் கொண்டிருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
ஆனால், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடோ வித்தியாசமானவை. இந்த விடயத்தில் விசேடமாக, முஸ்லிம் காங்கிரஸினையே நேரடியாகக் குற்றஞ்சாட்ட வேண்டியுள்ளது.
ஆனால், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடோ வித்தியாசமானவை. இந்த விடயத்தில் விசேடமாக, முஸ்லிம் காங்கிரஸினையே நேரடியாகக் குற்றஞ்சாட்ட வேண்டியுள்ளது.
இந்த நாட்டின் முழு முஸ்லிம் சமூகத்தினதும் குரல் முஸ்லிம் காங்கிரஸ் என
கூறிக் கொள்வோர் அதன் பாதக, சாதகங்களையும் தாங்களே ஏற்றுக் கொள்ள
வேண்டும்.
முன்னைய அரசாங்கத்தில் சலிப்புற்று, வெறுப்புற்று வெளியேறிய போது, அதற்கு அவர்கள் கூறிய காரணம் மஹிந்த அரசு முஸ்லிம்களுக்கு விரோதமானது என்பதே ஆகும். ஆனால் இது உள்ளார்த்தமாக நூறு சதவீத உண்மையைக் கொண்ட காரணம் அல்ல. அன்றைய அரசில் அமைச்சர்களாக இருந்த போதும் எதனையும் செய்ய முடியாத நிலையில் கைவிலங்கு மாட்டப்பட்டவர்கள் போன்றே அவர்கள் செயற்பட்டனர். வெறும் அமைச்சுப் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருந்த போது அவர்களுக்கு ஏற்பட்ட விரக்தியும் அதிருப்தியுமே அவர்கள் மஹிந்த அரசிலிருந்து வெளியேறக் காரணமாகின என்பதே பிரதான விடயமாகும். தவிர, மஹிந்த அரசு முஸ்லிம்களுக்கு எதிரானது என்று கூறியது சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறான அரைவாசியான போலிச்சாட்டு.
முன்னைய அரசாங்கத்தில் சலிப்புற்று, வெறுப்புற்று வெளியேறிய போது, அதற்கு அவர்கள் கூறிய காரணம் மஹிந்த அரசு முஸ்லிம்களுக்கு விரோதமானது என்பதே ஆகும். ஆனால் இது உள்ளார்த்தமாக நூறு சதவீத உண்மையைக் கொண்ட காரணம் அல்ல. அன்றைய அரசில் அமைச்சர்களாக இருந்த போதும் எதனையும் செய்ய முடியாத நிலையில் கைவிலங்கு மாட்டப்பட்டவர்கள் போன்றே அவர்கள் செயற்பட்டனர். வெறும் அமைச்சுப் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருந்த போது அவர்களுக்கு ஏற்பட்ட விரக்தியும் அதிருப்தியுமே அவர்கள் மஹிந்த அரசிலிருந்து வெளியேறக் காரணமாகின என்பதே பிரதான விடயமாகும். தவிர, மஹிந்த அரசு முஸ்லிம்களுக்கு எதிரானது என்று கூறியது சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறான அரைவாசியான போலிச்சாட்டு.
மைத்திரி ஆட்சிக்கு வந்தால் தங்களது நிலைமைகள்
ஸ்திரப்படும், அதிகாரங்களுக்கு விலங்கிடப்படமாட்டா என்ற ஒரேயொரு
நோக்கத்தில் இன்றைய அரசுக்குள் உள்நுழைந்த முஸ்லிம் காங்கிரஸ் மக்களை
திருப்திபடுத்திக் கொள்ள சில கோரிக்கைகளையும் முன்வைத்துக் கொண்டது என்பதே
யாதார்த்தம். மேற்கில் சூரியன் மறைய வேண்டுமென்றால் அது கிழக்கில் உதித்தே
ஆக வேண்டுமல்லவா? அவ்வாறான இயற்கை நியதியில்தான் முஸ்லிம் காங்கிரஸின்
அரசியல் செயற்பாடுகளும் அமைந்துள்ளன.
வெளியில் தெரிந்தவரை அவர்களால்
பெரிதாகப் பேசப்பட்ட விடயம் கிழக்கில் முஸ்லிம்களிடமிருந்து
பலதரப்பபினராலும் பறிக்கப்பட்ட காணிகளை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டுமென்பதே ஆகும். இந்த விடயத்தை அவர்கள் இன்றைய அரசின் நூறு
திட்டத்துக்குள் பூர்த்தி செய்து கொள்ளலாமென எதிர்பார்த்திருந்தனர். ஆனால்
ஒன்றுமே நடக்கவில்லை.
இந்த விடயம் தொடர்பில் கட்சியின் செயலாளர்
நாயகமான சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹஸன் அலி, பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவைச் சந்தித்து பல தடவைகள் பேசியிருந்தார். இது தொடர்பில்
ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு செயலணியை தான் நியமிக்கப் போவதாக
பிரதமர் உறுதியளித்திருந்தார். அத்தோடு கதை தொக்கி நிற்கிறதே தவிர இதுவரை
எந்த ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இதற்கு
காரணம் பிரதமரோ அரசாங்கமோ அல்ல.. பொறுப்பேற்க வேண்டியது முஸ்லிம் காங்கிரஸ்
தலைமையே! இந்த விடயத்தில் கவனம் செலுத்த இன்று கட்சி தலைமைக்கு
நேரமில்லாமல் அமைச்சுக் கடமைகளில் மிக்க அக்கறை காட்டுவதில்தான் நாட்கள்
கழிகின்ற நிலைதான் காணப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது
சமூகம் சார்ந்த விடயங்களை எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு கையளவேனும்
சாதித்துக் கொண்டுள்ள நிலையில் ஆளுங்கட்சியுடன் இணைந்து அமைச்சு
பொறுப்புகளை தாராளமாகப் பெற்றுக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தனது சமூகம்
சார்ந்த விடயங்களில் கடுகளவேனும் சாதிக்க முடியாத நிலைமையானது காட்டில்
காயும் நிலவுக்கும் கடலில் பெய்யும் மழைக்கும் ஒப்பானதொரு விடயம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயிரக் கணக்கில் இல்லாவிட்டாலும் நூற்றுக்
கணக்கான ஏக்கர்கள் நிலத்தையேனும் மீளப் பெற்று உரிமையாளர்களிடம்
ஒப்படைக்கச் செய்துள்ளது. ஆனால். முஸ்லிம் காங்கிரஸோ முஸ்லிம் மக்களின் ஒரு
பேர்ச் காணியைக் கூட பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. வடக்கு,
கிழக்கில் சிவில் அதிகாரிகளை ஆளுநர்களாக நியமிக்கும் முயற்சியில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு வெற்றி கொண்டுள்ளது. ஆனால், கல்முனை பிரதேச
செயலகத்தின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பிரதேச செயலரை மாற்ற முடியாத
முடியாது வங்குரோத்தான அரசியல் நிலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
உள்ளது.
இதற்கு மேலாக, இன்னொரு பிரச்சினையும் உள்ளது.
சாய்ந்தமருதுவுக்கு தனியான பிரதேச சபையை உருவாக்க கூட முடியாத கையாலாக
நிலைமையிலே இந்தக் காங்கிரஸ் இன்றுள்ளது. இந்த விடயத்தில் முஸ்லிம்
காங்கிரஸ் மீது நம்பிக்கையற்றுப் போன அந்தப் பிரதேச மக்கள், தங்களது
கோரிக்கையை நேரடியாகவே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மகஜர் மூலம் தெரிவிக்க
வேண்டிய நிலையில் உள்ளனர். வாக்களித்து அரசை உருவாக்கி அமைச்சு
பதவிகளையும் பெற காரணமாக இருந்த முஸ்லிம் மக்கள் இன்று தங்கள் தேவைகளுக்காக
ஜனாதிபதியையும் பிரதமரையும் நாடவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அண்மையில் வடமாகாண முதலமைச்சரால் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்,
யுவதிகளுக்கு தொழில் வழங்கப்பட்டது. இவ்வறான விடயத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைமையும் செய்கிறதுதான். ஆனால், ஒரு வித்தியாசம்.. கட்சியின்
முக்கியஸ்தர்களுக்கு அவரது அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களில் அதிகாரிகள்
தரத்திலான பதவிகளை வழங்குவதனையே அது செய்கிறது. மக்களுக்கு ஒன்றும் இல்லை.
இந்த நல்லாட்சியை நாட்டிற்கு கொண்டு வந்தது முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த
பத்துப் பேரா? அல்லது இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்களா? நெல்லுக்கு இறைத்த
நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பார்கள்.
ஆனால், இப்போது நல்லாட்சியில் இறைக்கப்படும் நீரானது, “புல்“ என்ற
முஸ்லிம் மக்களுக்குப் பொசியாமல் “நெல்“ என்ற முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளே
கட்டுப்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தவிர, மிக முக்கிய
அமைச்சுப் பதவிகளை அரசாங்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கியும்
அதனை மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவதாகவும் தெரியவில்லை. அண்மையில்
அம்பாறைக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு கருத்தினை
வெளியிட்டிருந்தார். அதாவது, கல்முனை நகரத்தை தான் அபிவிருத்தி செய்ய
விரும்புவதாகவும் இது தொடர்பில் அமைச்சர் ஹக்கீமுடன் கலந்தாலோசிப்பதாகவும்
கூறினார்.
நகர அபிவிருத்துக்கும் பொறுப்பான அமைச்சரான ரவூப்
ஹக்கீம், தானாகவே கல்முனை அபிவிருத்தியில் அக்கறை காட்டாத நிலைமையில்
பிரதமரே அவரிடம் கூறி அக்கறை கொள்ளச் செய்ய வேண்டிய நிலை இன்று
ஏற்பட்டுள்ளமை வேதனைக்குரியதே!
”மரம்போல் மனிதன் வளருகிறான் என்பது
பெருமையல்ல...., மரம்போல் அவன் பயன்படுகிறானா என்பதே பெருமை” என கவியரசு
கண்ணதாசன் அரசியல்வாதிகளையும் சேர்த்துத்தான் அன்று சொல்லி வைத்தார்
அல்லவா?


0 Comments