மாலை உணவு தொண்டையில் சிக்கி அதிலிருந்த ஊறுகாய் வெங்காயத் தோல் சுவாசக்குழாயில் உட்பிரவேசித்த நிலையில் உயிருக்காகப் போராடிய எஜமானரை அவரது நாய் காப்பாற்றிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
கிழக்கு யோர்க் ஷியரைச் சேர்ந்த அலன் ஸ்பென்சர் (67 வயது) என்ற மேற்படி நபர் சம்பவ தினம் மாலை உணவு அருந்திக் கொண்டிருந்த போதே உணவு அவரது தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனையடுத்து, அவர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகிய நிலையில் தரையில் சரிந்து விழுந்துள்ளார்.
இந்நிலையில் அவரது நாயான லெக்ஸி, உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த தனது எஜமானரது முதுகில் பாய்ந்து நிபுணத்துவம் பெற்ற முதலுதவிச் சிகிச்சையாளர் போன்று புத்திசாலித்தனமான முறையில் செயற்பட்டு முதுகை அழுத்தி அவரது தொண்டையில் அடைபட்டிருந்த உணவு வெளியேற வழிவகை செய்துள்ளது.
இதனையடுத்து, அலனின் சுவாசக் குழாயில் பிரவேசித்திருந்த வெங்காயத் தோல் வெளியேறவும் அவரது சுவாச செயற்கிரமம் இயல்பு நிலைக்குத் திரும்பி யுள்ளது.


0 Comments