வடமாகாண சபை உருவாக்கப்பட்ட பின்னர் கடந்த இரண்டு
வருடங்களாகவே வடக்கில் வாழ்ந்து வரும் முஸ்லீம்கள் கல்வி தொழில் வேலை வாய்ப்பு
வீட்டு வசதி காணி நிர்வாகம் போன்ற இன்னோரன்ன துறைகளில் ஓரங்கட்டப்பட்டு வருவதாக
வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைவர் மெளலவி ஏ எஸ் எச் எம் முபாரக் அவர்கள்
தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது:
வட மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லீம்களும் பன்னெடுங்காலமாக ஒற்றுமையாக
வாழ்ந்துவரும் சூழ்நிலையில் தமிழ் கூட்டமைப்பினர் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை
சீர்குலைக்கும் வகையில் இனவாத செயற்பாடுகளை முன்னேடுத்து வருவதானது கவலை
தரக்கூடியது என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், சில தினங்களுக்கு முன்பு, வடமாகாணப்
போக்குவரத்து சபையின் வடமாகாண பிராந்திய முகாமையாளராக பணிபுரிகின்ற முஸ்லிம்
அதிகாரியையும் எந்தவித நியாயமான காரணமும் இன்றி உடனடியாக அவரை அந்த பதவியில்
இருந்து அகற்ற வேண்டும் என்று இதற்கு பொறுப்பான அமைச்சரிடத்தில் சென்று தமிழ்
தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரதி நிதிகள் அழுத்தத்தை கொடுத்துள்ளனர்.அதனால் அந்த
அதிகாரி வன்னி மாவட்டத்துக்கு இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளது முஸ்லீம்களது வளர்ச்சியை முற்றாக ஒழித்துக்கட்டும் ஒரு நடவடிக்கையாகும்.
முஸ்லீம்களுக்கெதிராக இனவாதத்தை தூண்டும் இச்செயலானது கண்டிக்கத்தக்கதும்
எற்றுக்கொள்ள முடியாததுமாகும்.அவ்வாறு அந்த பதவிக்கு புதியவர் நியமிக்கப்பட வேண்டும்
என்றால் அதனது தகுதி சேவை மூப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதே நியாயமானது
என்பதை சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணிபுரிகின்ற வடமாகாண
போக்குவரத்து சபையில் வடமாகாணத்தை சேர்ந்த ஒரே ஒரு முஸ்லிம் அதிகாரியும் ஒரு சிங்கள
அதிகாரியுமே பணிபுரிந்து வருகின்ற நிலையில் ஒரே ஒரு முஸ்லிம் அதிகாரியையும் தேவையற்ற முறையில் இடமாற்றம் செய்திருப்பதானது
இன ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகும் என எம்மால் ஊகிக்க முடிகின்றது.
மேற்படி முஸ்லிம் அதிகாரி ஏதேனும் குற்றமிழைத்திருப்பின்
அல்லது தகைமைகள் போதாமை என்ற காரனங்களுக்காக அவ்வாறு செய்யப்பட்டிருப்பின் அது நியாயமானதாகும்.
ஆனால் அத்தகைய ஏதேனும் காரணம் இன்றி முஸ்லிம் என்ற காரணத்துக்காக வடமாகாண
போக்குவரத்து சபை சேவையிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருப்பதானது தமிழ்பேசும் மக்கள்
மத்தியில் சிக்கல்களை தோற்றுவிக்கவே வழிகோலும். ஒரே மொழி பேசுகின்ற இரு சமூகங்கள்
வாழுகின்ற ஒரு மாகாணத்தில் இத்தகைய பாகுபாடுகளை வளர்ப்பது விரும்பத்தக்கதல்ல,இதே
மண்ணில் பிறந்த முஸ்லிம்களுக்கு இந்த மண்ணில் நியாயமான உரிமைகள்
மறுக்கப்படுகின்றது என்றால்,இந்த மாகாணத்தில் முஸ்லிம்களின் ஏனைய முன்னேற்றம்
தொடர்பில் எந்த நிலை எதிர்காலத்தில் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
கேட்க நேரிட்டுள்ளது. அனைவருக்குமான சம அந்தஸ்து, தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும் என்பதை எமத
அமைப்பு சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரவிரும்பவதாகவும் தனது அறிக்கையில் அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வண்ணம்
ஏ எஸ் எச் எம் முபாரக் (றஷாதி)
தலைவர்
வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழுவின்
2015-04-25


0 Comments