‘‘கொழும்பு சுகததாச விளையாட்டரங்கின் ஓடுபாதையை நேரில் பார்வையிட்டபோது எனது இதயம் கனத்தது. இந்த ஓடுபாதையை அமைக்கும் விடயத்தில் எவ்வளவு ஊழல் இடம்பெற்றுள்ளது என்பது ஓடுபாதையின் செயற்கை விரிப்புகளில் காணப்படும் சேதங்கள் தெட்டத்தெ ளிவாக எடுத்துக்காட்டுகின்றன’’ என சுற்றுலாத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.
சுகததாச உள்ளக அரங்குஇ வெளி அரங்கு ஆகியவற்றை நேற்றுக் காலை நேரடியாகப் பார்வையிட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்கஇ வெளியரங்கில் அமைக்கப்பட்டுள்ள பண்டகசாலையையும் வைபவரீதியாக திறந்துவைத்தார்.
சுகததாச விளையாட்டுத் தொகுதியில் உள்ள விடுதியின் புனரமைப்புப் பணிகளையும் பார்வையிட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்கஇ ஊடகவியலாளர்களிடம் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
‘‘கொழும்பு சுகததாச விளையாட்டரங்கின் செயற்கை விரிப்பு ஓடுபாதை இந்த அளவு சேதமாகியிருக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த செயற்கை விரிப்பில் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்த்தபோது என் இதயம் கனத்தது. இதில் எவ்வளவு ஊழல் இடம்பெற்றுள்ளது என்பதை இந்த செயற்கை விரிப்பில் காணப்படும் சேதங்கள் காட்டுகின்றன. இந்த செயற்கை விரிப்பு சிறுவர்களின் சொத்து. இந்த ஓடுபாதை சேதமடைந்துள்ளமை என்னை கவலை அடையச் செய்கின்றது. புதிய செயற்கை விரிப்பு ஒன்று மிக விரைவில் பதிக்கப்படும்’’ என சுகததாச அரங்கில் உள்ள தீப மேடைக்கு அருகில் வைத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டார்.
‘‘இந்த செயற்கை விரிப்பை பொருத்திய கஹாகொல என்ற நிறுவனம் தற்போது விலாசமற்றுப் போயுள்ளது. அந்த நிறுவனத்தின் தொலைபேசி செயலிழந்துள்ளது. இந்த ஆடுகளத்திற்கு 9 வருட உத்தரவாத சான்றிதழ் உள்ளது. ஆனால்கூட ஒன்றரை வருடங்கள் ஆகாத நிலையில் இந்த ஓடுபாதை சேதமடைந்துள்ளது. இதில் எந்தளவு ஊழல் இடம்பெற்றுள்ளது என்பது நன்கு புலப்படுகின்றது. இது குறித்து விசாரணை நடத்துவதற்கு குழு ஒன்றை நியமித்துள்ளேன்’’ என தொடர்ந்து பேசிய அமைச்சர் குறிப்பிட்டார்.
‘‘சுகததாச விளையாட்டுத் தொகுதி விடுதி 40 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது. சில தனியார் நிறுவனங்கள் 3 நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளன. அது குறித்து விரைவில் ஒரு முடிவுக்கு வருவோம். மேலும் டொரிங்டன் மைதானத்திலும் றீட் அவென்யூ மைதானத்திலும் செயற்கை விரிப்பு ஓடுபாதைகள் போடப்படும்’’ என அவர் கூறினார்.
சுகததாச விளையாட்டரங்கு கால்பந்தாட்டத்திற்கு 60 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டுள்ளபோதிலும் கடந்த பல வருடங்களாக கால்பந்தாட்டப் போட்டிகள் முறையாக நடத்தப்படவில்லை. இதன் காரணமாக கால்பந்தாட்டத்தின் தரம் பின்னடைந்துள்ளது. இதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என அமைச்சரிடம் கேட்டபோது,
‘‘இலங்கை கால்பந்தாட்ட அணி பூட்டானிடம் அடைந்த தோல்வி அதன் வீழ்ச்சியை எடுத்துக்காட்டுகின்றது. சுகததாச விளையாட்டரங்கில் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்துவதற்கு அறவிடப்படும் கட்டணம் அதிகமானது. இது கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு கட்டுப்படியாகாது என்பதை நான் அறிவேன். மேலும் கால்பந்தாட்ட நிர்வாகத்திற்குள்ளும் சில சிக்கல்கள் இருக்கின்றன. இவை எல்லாம் விரைவில் தீர்த்துவைக்கப்படும்’’ என அமைச்சர் நவீன் திசாநாயக்க பதிலளித்தார்.


0 Comments