தனது தந்தை யோக்ராஜ் சிங், இந்திய அணியின் தலைவர் டோனியை கடுமையாக விமர்சித்துள்ளமை தொடர்பில் தனக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது எனவும், டோனியை தான் சந்திக்க ஆர்வமாக உள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் , இந்திய அணியின் தலைவர் டோனியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
உலகக் கிண்ண அணியில் யுவராஜ் சிங் உள்ளடக்கப்படாமைக்கு ஏற்கனவே தனது கடும் எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளியிட்டிருந்த அவர் மீண்டும் டோனியை மிகவும் மோசமாக விமர்சித்திருந்தார்.
இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்திருந்த யுவராஜ் தந்தை,
டோனி என்பவர் ஒன்றும் இல்லை, ஊடகங்களினாலேயே அவர் கிரிக்கெட் கடவுள் ஆகியுள்ளார். ஊடகங்களே அவருக்கு இந்த மகுடத்தை சூட்டியுள்ளன. எனினும் அவர் அதற்கு தகுதியற்றவர்.
அவர் ஒன்றும் இல்லாத ஒருவராக இருந்த நேரமொன்று இருந்தது ஆனால் இன்று அவர் ஊடகங்களின் முன் அமர்ந்து அவர்களை ஏமாற்றுகிறார். அவரை மிகைப்படுத்திக் காட்டிய ஊடகங்களையும் , அவர் ஓட்டங்களைப் பெறும் போது கைதட்டும் இந்திய மக்களையும் பார்த்து சிரிக்கிறார்.
உண்மையில் நானொரு ஊடகவியலாளனாக இருந்திருந்தால் அவரது கன்னத்தில் அறைந்திருப்பேன்.
டோனி , இராமாயணத்தில் வரும் இராவணனுக்கு ஒப்பானவர். அவர் அகங்காரம் பிடித்தவர். இராவணனின் இறுமாப்பு முடிவுக்கு வந்தது போது டோனியும் ஒருநாள் வீழ்வார்.
இதுமட்டுமன்றி டோனி ஒருநாள் பிச்சையெடுக்கும் நிலைக்கும் செல்வார், அவரிடம் ஒரு ரூபா கூட இருக்காது எனவும் எவ்வித உதவியும் அவருக்கு கிடைக்காது எனவும் டோனியை சபித்துள்ளார் யோக்ராஜ் சிங்.
இந்நிலையில் யுவராஜ் சிங் இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கு முன் மகிழ்ச்சியுடன் விளையாடியது போல் டோனியின் தலைமையின் கீழ் விளையாட எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவராக இருக்கும் டோனியை சந்திக்க ஆர்வமாக இருப்பதாகவும் அவரது தந்தையானதற்கு வாழ்த்து சொல்ல ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


0 Comments