வட கிழக்கு கென்யாவிலுள்ள பல்கலைக்கழகமொன்றின் மீது அல்-- ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 147 பேர் பலியானதுடன் 79 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
கரிஸா பல்கலைக்கழகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலின் போது தாக்குதலை நடத்திய 4 தாக்குதல்தாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் 587 மாணவர்கள் தப்பி வந்துள்ளனர்.
அந்தப் பல்கலைக்கழகத்தின் மீது ஏகே 47 துப்பாக்கிகள் சகிதம் தற்கொலை மேலங்கி அணிந்து வந்த துப்பாக்கிதாரிகள் வியாழக்கிழமை தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் முகமூடிகளை அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி பல்கலைக்கழகத்தை ஆக்கிரமித்து அங்கிருந்தவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த தற்கொலை குண்டுதாரிகள், இறுதியில் பொலிஸார் முற்றுகையிட்டதும் குண்டுகள் போன்று வெடித்துச் சிதறியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜோசப் நகெய்ஸெரி தெரிவித்தார்.
பொலிஸார் தம்மை அணுகிய போது தற்கொலைக் குண்டுதாரிகள் திட்டமிட்டு குண்டுகளை வெடிக்க வைத்தார்களா அல்லது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் தன்னியக்க ரீதியில் குண்டுகள் வெடித்தனவா என்பது அறியப்படவில்லை.
இதனையடுத்து குறிப்பிட்ட பல்கலைக்கழகம் பாதுகாப்புப் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.தொடர்ந்து கென்ய, சோமாலிய எல்லை யிலுள்ள கரிஸ்ஸா, வஜிர், மன்டெரா மற் றும் தனா றிவர் ஆகிய 3 பிராந்தியங்களில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதல் ஒரு தீவிரவாத தாக் குதல் என குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், வன்முறை மிக்க தீவிரவாதத்தை தடுப்பதற்கு கென்யாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவத் தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.



0 Comments