1)உண்மை விதி -1 : ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒருபொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது.
அரசியல் விதி -1 : பலரை , சிலர் தூண்டி செயல்படும் வரை , அந்தப்பலரும் கண்ணை மூடியோ அல்லது மூளையை ஓய்வு நிலையிலோ வைத்துக்கொண்டு ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் இயக்க நிலையை மாற்றிக் கொள்ளாது.
2) உண்மை விதி -2 : ஒரு விசையானது ஒரு பொருளின் மீது செலுத்தப்படும் பொழுது, அப்பொருளின் நகர்ச்சியில் ஏற்படும் முடுக்கம் அல்லது ஆர்முடுகல் என்பது அவ்விசையின் திசையிலேயே இருப்பதுடன் அவ்விசைக்கு நேர் சார்புடையதும் ஆகும்.
அரசியல் விதி -2 : ஒரு அரசியல் ஆசை ஒரு நபரின் மீது, ஒரு சமூகத்தால் செலுத்தப்படும் பொழுது, அந்த அரசியல் உணர்ச்சியில் ஏற்படும் மாற்றம் /அல்லது எழுச்சி என்பது அந்த சமூகத்தின் திசையிலேயே இருப்பதுடன் அந்த ஆசைக்கு சார்புடையதும் ஆகவும் இருக்கும். இதை சற்று விரிவாக விளக்கினால், ஒரு கட்சி அசையாமல் நின்று கொண்டிருக்கின்றது.
இப்போது அந்த கட்சியை பின்னால் இருந்து உணர்ச்சி மேலோங்கிய சமூகம் /போராளிகள் தூண்டுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்த தூண்டலின் காரணமாக நிற்கும் கட்சியின் செயற்பாடு மாறுபடும் தானே? அந்த தூண்டல் மாற்றமும் கட்சியின் செயற்பாடும் எவ்வாறு இருக்கும் என்பதே இரண்டாவது அரசியல் விதி.
அந்த தூண்டலானது தூண்டிய உணர்வின் நேர் தகவில் (direct proportion) இருக்கும். அதாவது சமூகம்/போராளிகள் மிக சரியாக தூண்டினால், நின்று கொண்டிருந்த கட்சியின் திசையும் சரியாக இருக்கும் . தூண்டிய உணர்வு பிழையாக இருந்தால் , நின்று கொண்டிருக்கும் கட்சியும் பிழையான திசையிலேயே நகரும். திசை (direction) செயல்படும் விசை எந்தத் முறையில் இருக்கின்றதோ அதே முறையில் இருக்கும். அதாவது உணர்வு எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கின்றதோ அதே திசையில் தான் கட்சியும் நகர ஆரம்பிக்கும்.
அதே சமயத்தில், நின்று கொண்டிருக்கும் கட்சியின் கொள்கையும் முக்கியமானது ஆகும். கொள்கை , சரியாக சரியாக அதன் மேல் அதிக நம்பிக்கையோ அல்லது தூண்டப்படும் உணர்வும் உண்மையாக இருந்தாலோ மட்டுமே நின்று கொண்டிருக்கும் கட்சியின் வெற்றியின் மீது பாதிப்பு ஏற்படும்.
இதை தான் “ஒரு கட்சியின் கொள்கைகள் மீது இருக்கும் உண்மைகள் சமன் செய்யப்படாத பொழுது” என்னும் வார்த்தைகள் குறிக்கின்றன. அதாவது கட்சிகளின் செயற்பாடு /வெற்றி நிகர உண்மை கொள்கையால் ஏற்படும். (net real policy ), சுருக்கமாகச் சொன்னால், நின்று கொண்டிருப்பது ஒரு கட்சி என்றும், வந்து மோதுவது பொய் கொள்கைகள் என்றும் வைத்துக் கொண்டால், அதனால் கட்சியின் வெற்றியில் ஏதும் மாற்றம் ஏற்படாது.
காரணம், கட்சியின் மீது செயல்படும் கொள்கை விசை யாவும் கட்சியின் அதிகப்படியான பொய்யால் சமன்செய்யப்பட்டு விட்டன! இதுவே மிகவும் பிரபலமான சமன்பாடான வெற்றி = கொள்கை x பொய் (V=PxL) similar to ( F=ma)
3) உண்மை விதி – 3 : ஒவ்வொரு தாக்கத்திற்கு சமனும் எதிருமான தாக்கம் உண்டு. அரசியல் விதி -3 : ஒவ்வொரு தேர்தல் வெற்றிக்கும், சமனும் எதிருமான தோல்வி உண்டு.
நன்றி – ஹுசைன்.


0 Comments