Subscribe Us

header ads

உலக கோப்பை: கால்இறுதிக்கு நுழைய திண்டாடும் முன்னணி அணிகள்...


உலககோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 14–ந்தேதி தொடங்கியது. இதில் 14 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துவிட்டன.
இதுவரை ‘ஏ’ பிரிவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா ஆகிய 3 அணிகளும் கால் இறுதிக்கு தகுதி பெற்று உள்ளன.

ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து (‘ஏ’ பிரிவு), ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (‘பி’ பிரிவு) ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேற்றப்பட்டன.
‘ஏ’ பிரிவில் இருந்து 2 அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து 3 அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெற வேண்டும்.
‘நியூசிலாந்து அணி ‘ஏ’ பிரிவில் 10 புள்ளியுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடைசி ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் தோற்றாலும் முதலிடம் பறிபோகாது. அந்த அணி கால் இறுதியில் ‘பி’ பிரிவில் 4–வது இடத்தை பிடிக்கும் அணியுடன் மோதும். இந்த கால் இறுதி ஆட்டம் வருகிற 21–ந்தேதி வெலிங்டனில் நடக்கிறது.

ஆஸ்திரேலியா 7 புள்ளியுடன் 2–வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை சந்திக்கிறது. இதில் வெல்லும் பட்சத்தில் அந்த அணி தொடர்ந்து 2–வது இடத்தில் இருக்கும். ஆஸ்திரேலியா கால் இறுதியில் ‘பி’ பிரிவில் 3–வது இடத்தை பிடிக்கும் அணியுடன் விளையாடும். இந்த ஆட்டம் வருகிற 20–ந்தேதி அடிலெய்டுவில் நடைபெறலாம்.

‘ஏ’ பிரிவில் இலங்கை அணி 6 புள்ளியுடன் 3–வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்த வாய்ப்பு உள்ளது. இதனால் தொடர்ந்து 3–வது இடத்தை பிடித்து அந்த அணி கால் இறுதியில் நுழைகிறது.
4–வது இடத்துக்கு வங்காளதேசம், இங்கிலாந்து இடையே போட்டி நிலவுகிறது. வங்காளதேசம் 5 புள்ளியுடனும், இங்கிலாந்து 2 புள்ளியுடனும் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றால் கால்இறுதிக்கு நுழைந்துவிடும். இங்கிலாந்து வெளியேற்றப்படும்.

இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்திலும், கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் கண்டிப்பாக வென்றால் மட்டுமே வாய்ப்பை பெற இயலும். அதே நேரத்தில் வங்காளதேச அணி நியூசிலாந்திடம் தோற்க வேண்டும். வங்காளதேச அணி இன்றைய ஆட்டத்தில் தோற்று கடைசி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தினால் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
‘பி’ பிரிவில் இந்தியா 8 புள்ளியுடன் உள்ளது. அயர்லாந்து, ஜிம்பாப்வேயுடன் மோத வேண்டும். இதிலும் வென்று இந்தியா அணி தொடர்ந்து முதல் இடத்தை பிடிக்கும் நிலையில் இருக்கிறது. இந்திய அணி கால் இறுதியில் இங்கிலாந்து அல்லது வங்காளதேசத்தை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், அயர்லாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 4 அணிகளில் 3 அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

தென்ஆப்பிரிக்கா 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளி பெற்று ரன்ரேட் முன்னிலை காரணமாக 2–வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் பெறும். 2–வது இடத்திலேயே நீடித்து அந்த அணி கால்இறுதியில் நுழையும்.

6 புள்ளியுடன் இருக்கும் பாகிஸ்தான் கடைசி ஆட்டத்தில் அயர்லாந்தை சந்திக்கிறது. இதில் வெல்லும் பட்சத்தில் அந்த அணி 8 புள்ளிகள் பெற்று கால்இறுதிக்கு தகுதி பெறும். 2007 உலககோப்பையில் பாகிஸ்தான் அணி அயர்லாந்திடம் தோற்றது. இதனால் இந்த ஆட்டம் அந்த அணியின் கால் இறுதியை நிர்ணயம் செய்யும். அயர்லாந்திடம் தோற்றால் ‘ரன்ரேட்டை’ பொறுத்து முடிவு தெரியும். அயர்லாந்து அணி 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளி பெற்றுள்ளது. இந்தியா, பாகிஸ்தானுடன் மோத வேண்டும். இதில் ஒரு ஆட்டத்தில் வென்றாலே அயர்லாந்து கால் இறுதிக்கு தகுதி நுழைந்துவிடும்.
இரண்டு ஆட்டத்திலும் தோற்றாலும் அந்த அணிக்கு வெஸ்ட்இண்டீசுக்கும் இடையே ரன்ரேட் ஒப்பீடு செய்யப்படும். வெஸ்ட்இண்டீசை விட அயர்லாந்தே தற்போது ரன்ரேட்டில் முன்னிலையில் உள்ளது.

4 புள்ளியுடன் இருக்கும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு சிக்கல் அதிகமாகவே இருக்கிறது. அயர்லாந்து அணி இந்தியா, பாகிஸ்தானிடம் தோற்க வேண்டும் என்ற பிரார்த்தனையில் உள்ளது. அந்த அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.
வெஸ்ட்இண்டீஸ்– ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மோதும் ஆட்டம் 15–ந்தேதி நடக்கிறது. அதே தினத்தில் தான் பாகிஸ்தான்– அயர்லாந்து ஆட்டம் நடக்கிறது. ஆனால் வெஸ்ட்இண்டீஸ் மோதும் ஆட்டத்தின் முடிவுக்கு தகுந்தவாறு விளையாட அயர்லாந்துக்கு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் வெஸ்ட்இண்டீஸ் போட்டி தொடங்கிய 5½ மணி நேத்துக்கு பிறகே அயர்லாந்து விளையாடும் ஆட்டம் நடக்கிறது.

Post a Comment

0 Comments