(ஜே.ஜி. ஸ்டீபன்)
பாரதத்தின் பிரதமராம் நரேந்திரமோடியின் விஜயம் தொடர்பில் இலங்கையின் அனைத்து தமிழ் ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு முக்கியத்துவம் கொடு த்து முன்னிலைப்படுத்தி புகழ்ந்து பாரா ட்டி புளகாங்கிதம் கொண்டிருந்தன.
ஆனாலும் சிங்கள ஊடகங்களோ சிங்கள சமூகத்தையே மருவி நிற்கின்ற ஆங்கில ஊடகங்களோ மோடியின் வருகை தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை.
சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் எவ்வாறு மோடியின் இலங்கை விஜயத்தை அலட்டிக்கொள்ளாது புறக்கணித்த போக்கில் செயலாற்றியிருந்தனவோ அதே போக்கில் பிரதமர் மோடியின் செயற்றிட்டங்களும் அமைந்து விட்டன. இது மறுக்க முடியாது அத்துடன் தாளாத செயற்பாடாகவும் அமைந்து விட்டது.
தொப்புள்கொடி உறவு என்று பேசப்படுகிறது. கட்டுரைகளிலும் கவிதைகளிலும் வழங்கப்படுகின்றன. அதாவது இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளான மலையக சமூகம் விளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விளிக்கப்படுவதில் அர்த்தம் இல்லாமலுமில்லை. தோட்டத் தொழிலாளர்கள் எனும் கீழ் நிலை அந்தஸ்துக்குள் மட்டுமே வரையறுத்து நோக்கப்படுகின்ற மலையக சமூகம் இந்திய வம்சாவளியினர் என்று அழைக்கப்பட்டு வருவதன் அர்த்தமானது அந்த சமூகம் இந்திய நாட்டுக்கு சொந்தமானவர்கள் என்பதையே கோடிட்டுத் தொட்டுக் காட்டி நிற்கின்றது.
இவ்வாறு இந்தியாவுக்கு சொந்தமான வர்கள் என்றதொரு சமூகத்தின்பால் சிந்திக்கத் தவறியிருப்பது சகித்துக்கொள்ள முடியாத பாதகமான செயல் என்றே கூறத் தோன்றுகிறது. இந்தியாவின் நோக்கில் இலங்கைத் தமிழர் என்றதொரு பார்வை யே இருந்து வருகின்றது. எனினும் இங்கு வடக்கு, கிழக்குப்பிரச்சினைகளை மையப்படுத்திய விவகாரம் இன்று சர்வதேசத்தின் முன்னிலையில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதன் காரணத்தால் இல ங்கைத் தமிழர் என்றதும் வடக்கு, கிழக் கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நெருக்குவாரங்களுக்கு உட்பட்ட இடம்பெயர்ந்த மக்களை மட்டுமே குறித்து நிற்கின்றது.
எனினும் மலையகத்திலும் தமிழ் மக்கள்தான் வாழ்ந்து வருகின்றனர் என்ற விடயம் இங்கு பேசப்படுவதாகவோ அல்லது அலட்டிக்கொள்ளப்படுவதாகவோ இல்லை. வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினை வேறு மலையகத்தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு இந்த இரு பகுதியினரதும் பிரச்சினைகள் தேவைப்பாடு கள் அபிலாஷைகள் எதிர்பார்ப்புக்கள் உள்ளிட்டவற்றை ஒன்றுபடுத்தி பேசுவது ஏற்கத்தகாத, முடியாத விடயமாகும்.
இருந்த போதிலும் தமிழ் மக்கள் எனும் பதத்தோடு இணைத்து அணுகும் போது இவ்விரு சாராரும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவர்களேயன்றி ஒரு பகுதியினரை ஏற்று மறு பகுதியினரை புறக்கணித்து செயற்படுவது நேர்மைத்தன்மை வாய்ந்ததாக அமையாது.
வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்ப ட்ட அப்பாவித் தமிழ் மக்களின் அவசர அவசிய தேவைப்பாடுகளை கண்ட றிந்து அவற்றுக்குத் தீர்வினைக்காண்பதை முதற்படியாக செயற்படுத்துவதை விடுத்து பசி த்திருப்பவனைக் கொண்டு பொதி சுமக்க வைத்த கதையாக இன்று அந்த மக்களின் நிலைமை மாறியிருக்கின்றது.
வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல்வாதி கள் அரசியல் செய்வதற்கு அந்த மக்கள் பயன்படுத்தப்படுவது போன்று மலையக த்தலைமைகள் தமது அரசியலை செய்வதற்கு தோட்டத் தொழிலாளர்களை பயன்படுத்தி வருகின்றன. இதனை இன்னும் ஆழமாக சொல்ல வேண்டிய தேவை இங்கில்லை.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தி ற்கு முன்பதாக இங்கு வாழ் தமிழ் மக்களிடத்திலும் தமிழ் அரசியல் வாதிகளிடத்திலும் எதிர்பார்ப்புக்கள் நூறு மடங்காக அதிகரித்திருந்தன. எனினும் மலையகமே முகம் மலர்ந்து பூரித்து மோடியின் வரவு க்காய் காத்திருந்ததை எப்படித்தான் வர்ணித்துக் கூறுவது என்பது புரியவில்லை.
இலங்கை மண்ணில் காலடி வைத்த மோடி வடக்கு, தெற்கு என்று பறந்தார். ஆனாலும் இயற்கையின் எழிலோடு கலந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் மலையகத்துக்கு சென்று திரும்புவதற்கோ அல்லது அத்தனை எழிலுக்கு மத்தியிலும் நெற்றி வியர்வை சிந்தி உழைத்துக் கொண்டிருக்கும் உண்மையான தொழிலாளர் வர்க்கம் என அழைக்கப்படுகின்ற ஒரு சமூகத்தை நேரில் பார்ப்பதற்கோ ஒரு மணி நேரத்தை ஒதுக்கித்தர முடியாதவராக மோடி ஆகி விட்டார்.
மோடியின் இலங்கை விஜயத்தின் போது அவர் மலையகத்தை மறந்தரா? மலையகத்தை மறுத்தாரா? அல்லது மலையகம் அவருக்கு மறுக்கப்பட்டதா? என்றதான கேள்விகளும் எழாமல் இல் லை.
கிராமம் ஒன்றே இல்லாது போன மீரியபெத்தைக்கும், இந்திய உதவியோடு நிர்மாணிக்கப்பட்டு வரும் கிளங்கன் வைத்தியசாலைக்கும், மாத்தளைக்கும் மோடி விஜயம் மேற்கொள்வார் என்றிருந்த வேளையில், இறுதியில் வெறுமையானது. மலையக சமூகத்தை பரிதாபத்துக்குள் ஆழ் த்திவிட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கே சவாலாக விளங்கும் ஆசியாவின் ஒரேயொரு நாடா ன இந்தியாவின் பிரதமர் என்ற அரச தலைவர் அண்டை நாட்டுக்கு உத்தி யோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வாரேயானால் அது வரலாற்று முக்கியத்துவம் மிக்கதான ஒரு பகுதியாகும். அப்படியொரு விஜயத்தை மேற்கொண்ட மோடியின் வருகைக்கு முன்பதாகவே முன்னோடி செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்பட்டு விடுகின்றன.
அந்த வகையில்தான் மோடியின் இல ங்கை விஜயத்துக்கு முன்பதாக அந்நாட் டின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு வருகை தந்தது டன் மோடியின் வருகைக்கான ஏற்பாடுகளையும் ஒழுங்குபடுத்தல்களையும் மேற் கொண்டிருந்தார்.
இலங்கை வந்த மோடி தனது நாட்டு டன் தொடர்பும் உறவும் கொண்டுள்ள ஒரு சமூகத்தை பார்க்காது புறக்கணித்து சென்றுள்ளார் என்றால் அது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். புதிய அரசாங்கத்தின் மீதான இந்தியாவின் நல்லெண்ணத்தை விரிவுபடுத்தி கொள்வதற்கும் அதேநேரம் இந்தியாவின் மேலாதிக்கத்தை இலங்கையில் நிலைநிறுத்திக் கொள்வதற்குமான ஒரு விஜயமாக இவ்விஜயம் அமைந்திருக்கின்றது. இதில் பொதிந்துள்ள உள்நோக்கங்கள் குறித்து நாம் இந்த கட்டுரையுடன் அலட்டிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இருக்காது.
இருந்த போதிலும் நல்லதொரு சந்தர்ப் பம் இங்கு கைநழுவி போயுள்ளமைக்கு அரசியல்வாதிகளையும் நொந்து கொள்ள வேண்டியுள்ளது.அரசாங்கத்தின் நோக்கமானது வடக்கையும் தெற்கையும் இணைத்திருப்பதாக வும் தமிழ் மக்களுடனான உறவு பேணப்பட்டு வருவதாகவும் வெளியுலகுக்கு காட்டிக்கொள்ள வேண்டும் என்ற தேவையுடன் செயற்பட்டு சாதித்துக் கொண்டது.
அரசாங்கத்தின் இத்தகைய போக்குடன் முரண்டு பிடித்த வடக்கு அரசியல் காய்நகர்த்தலானது தமது சமூகத்தின் நிலைமைகளை எடுத்துரைப்பதற்கும் அரசியல் ரீதியிலான அபிலாஷைகளை எவ்வாறு அடைந்து கொள்வது என்பது தொடர்பி லும் மிகத்தெளிவாகவும் அதேநேரம் மிக இலகுவாகவும் அணுகி சாதித்து கொண்டுள்ளதை இங்கு கூறியாக வேண்டும்.
மோடி மலையகத்தை புறக்கணித்தாரா? மறந்தாரா ?அல்லது மறுக்கப்பட்டரா? என்றெல்லாம் எழுகின்ற கேள்விகளுக்கு நாம் விடை தேட முனைவோமானால் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் எமது தலைமைகள் மீதே சுமத்த வேண்டியுள்ளது.
முக்கியத்துவம் மிக்க அரச தலைவ ரின் விஜயத்தின் போது மலையகத்தின் மீதான இந்தியாவின் வகிபாகம் தொட ர்பில் எடுத்துரைப்பதற்கும் அதனூடாக அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்வதற்கும் தவறியுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
பிரித்தானியாவின் இளவரசர் சாள்ஸ் இலங்கை வந்திருந்த போது மலையக த்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவரு க்கு மலையக மக்களின் உண்மையான வாழ்க்கை நிலை மறைக்கப்பட்டது. விய ர்த்துக்கொட்டும் வெயிலிலும் உடல் முழுவதும் ஊறி நனையும் மழையிலும் மலையகத்தின் பெண் தொழிலாளிகள் பட்டுப்புடவை உடுத்தி நகை நட்டுக்களை மாட்டிக்கொண்டு தான் தொழில்செய்கின்றனர் என்றதொரு மாயத்தோற்றத்தை படம்பிடித்துக்காட்டியிருந்தனர்.
அப்படியாகிலும் அவர் மலையக மக்களை சந்தித்தாரே என்றதொரு நிம்மதியை அடைந்தாலும் இந்திய பிரதமர் மோடியிடம் மலையகமே மறைக்கப்பட்டு விட்டது என்பதுதான் கொடூரமான வேதனையாகவுள்ளது.
இதுதான் அவ்வாறு ஆகிவிட்டது என்றாலும் மலையகத்தலைமைகள் மோடியு டன் ஏற்படுத்திக்கொண்ட சந்திப்பையேனும் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். எல்லாமே பழைய குருடியின் கதையாகி போயுள்ளதை காண முடிகின் றது.மலையகம் தொடர்பிலும் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் மூன்றாவது தரப்பிடம் எடுத்துக்கூறும் விடயத்திலாவது மலையகத் தலைமை தமது விதண்டாவாதக் கொள்கைகளை சற்று புறத்தே வைத்து விட்டு செயற்படுவதற்கு தவறி விடுகின்றன.
சமூகப்பிரச்சினை எனும் போது முஸ்லி ம்கள் அணி திரண்டு ஒருமனதாய் குரல் கொடுத்து வெற்றி காண்பவர்களாய் திக ழ்ந்து வருகின்றனர். அப்படியானால் சமூ கம் என்ற ரீதியில் ஏன் சில விடயங்களில் மலையக தலைமைகளால் சில விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ள முடியாதிருக்கின்றது என்பது புரியாதுள்ளது.
மோடியின் வருகைக்கு முன்பதாக இல ங்கை வந்த சுஷ்மா சுவராஜை மலையக தலைமைகள் முறையாக அணுகியிருந் தால் மோடியின் விஜயம் மலையகத்து க்கு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துக்கூறியிருந்தால் நிச்சயமாய் அது பரிசீலிக்கப்பட்டிருக்குமே தவிர பாதுகாப்பு பிரச்சினை என்று சாக்கு ப்போக்கு கூறி மலையக மக்களை சந்திப்பதற்கான காரியம் தடைப்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்காது.
மேலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது அமைச்சுப் பதவிகளை வகித்த காலத்தில் ஏனைய மலையக கட் சிகளை பொருட்டாகவே கொண்டது கிடையாது. முக்கிய தலைவர்களை சந்திக்கும் விடயத்திலும் சரி மலையக மக்களின் விவகாரம் தொடர்பான விடயங்களிலும் சரி அது தனித்தே முடிவெடுத்து செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேபோன்றதொரு நிலைமை இன் றும் காணப்பட்டு வருகின்றது. மோடி யை சந்தித்த முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தில் அமைச்சுப்பொறுப்புக்களில் உள்ளவர்களே பங்கேற்றிருந்தனர். இதில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் இணைந்திருந்தார்.
மலையகத் தலைமைகள் எல்லோருமே மலையக மக்கள் குறித்தே பேசப்போகின்றனர். அவர்களது பிரச்சினைகள், அரசியல் ரீதியிலான தாக்கங்கள்,இழப்புக்கள் தேவைகள், குறை நிறைகள் குறித்தே பேசுவது வழக்கமாகும். இவ்வாறு தமது சமூகம் தொடர்பில் பிறிதொரு நாட்டு த்தலைவருடன் பேசுவதற்கு முற்படுகையில் ஏன் மலையக பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயற்படக்கூடாது என்பது கேள்வியாக உள்ளது.
அரசாங்கத்தோடு இல்லாத இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனியாகவும் அரசாங்கத்தோடு இருக்கின்ற அமைச்சர்கள் அடங்கிய தலைவர்கள் தனியாகவும் மோடியை சந்தித்தது அவரிடத்தில் எத்தகைய எண்ணங்களைத் தோற்றுவித்தன என்பது தெரியாது.
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய தலைமைகள் இவ்வாறு பிரிந்து நின்று தனித்தனியே ஒரே சமூகத்தின் பணி செய்த அதேசமயம் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர். யோகராஜன் மற்றும் பி. இராஜதுரை ஆகியோரை இணைந்துக்கொள்ளாதது ஒரு பெருங்குறைபாடாகும்.
இன்றைய சூழ்நிலையில் மலையகத்தை பொறுத்தவரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் உள்ள போது மோடியுடனான சந்திப்பின் போது இருவர் கழட்டி விடப்பட்டவர்களாகி விட்டனர். பொது நோக்கு கொண்ட ஒரு வேலைத்திட்டத்தில் கட்சி ரீதியான கொள்கைக்கு இடமளிப்பதை விட சமூகத்தின் பாலான கொள்கைக்கு முன்னுரிமையளிப்பதே சிறந்தது.
மலையக தலைவர்கள் அனைவருமே காலத்துக்கு காலம் ஏதோவொரு விடய த்தை முன்னிலைப்படுத்தி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றனர். ஆனால் யார் யாரோடு ஒன்றிணைவது என்றதொரு ஏற்றத்தாழ்வுடனான போட்டித் தன்மை யொன்றும் அகலாது நிலைத்து நிற்கின்றது.
அந்த வகையில் நோக்கினால் மோடியு டனான சந்திப்பினை கூட அனைத்து மலையக கட்சி தலைமைகளும் இணைந்து மேற்கொண்டிருந்தால் அது பலமானதாகவும் அதேநேரம் வெற்றியானதாகவும் அமைந்திருக்கும். இருப்பினும் இவ்விடயத்தில் தவறு இழைக்கப்பட்டாகி விட்டது.
தமது அரசியல் இருப்புக்கள், போட்டி கள், பொறாமைகள், ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் ஒருமிக்கதாய் பயன்படுத்தி அப்பாவி மக்களை சிதறடிப்பதும் அவர்களை சீரழிப்பதும் ஏற்கத்தகாத காரியமாகும்.இன்று மலையகத்தில் அரசியல் போட்டி பொறாமைகள் தலைவிரித்தாடுகின்றன. அடுத்தவரை வீழ்த்தி அரியாசனம் ஏறவேண்டும் என்ற நிலைப்பாடு காலூன்றியுள்ளது. இதன் வெளிப்படைத்தன்மையை இன்று மக்கள் அறிந்து புரிந்து வருகின்றனர். தோட்ட தொழிலாளர்கள் இன்று மிகவும் ஆழமாக சிந்திக்க தொடங்கி விட்டனர். அதன் விளைவுகளேயே தேர்தல்களில் எடுத்துக்காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் அடுத்து வரும் தேர்தல்களின் போது இனிவரும் அனைத்து செயற்பாடுகளிலும் தோட் டத் தொழிலாளர்கள் சிந்தித்தே செயற் படுவார்கள் என்பதை எவரும் மறந்து செயற்படக்கூடாது.
மலையக சமூகத்தின் பிரச்சினைகளை உண்மைத்தன்மையாக எடுத்துரைப்பதில் மலையக தலைமைகளிடத்தில் இராஜ தந்திர ரீதியிலான அணுகு முறை அவ சியமே தவிர அதனை விடுத்து பகட் டுக்காக செயற்படுவதோ தம்மால் மாத் திரமே அனைத்தும் முடியும் என்ற ரீதி யில் ஏகாதிபத்திய வாத முடிவுகளை மேற்கொள்வதோ சிறந்ததாகாது. அணுகு முறைக் கொள்கை எனும் போது தரப் புக்கள் ஓரணியாய் நிற்க வேண்டும். பிரிந்து நின்று தனித்து நின்று ஆற்றும் கருமம் எப்போதும் வெற்றியளிக்காது. ஒரு கை ஓசை என்பது நிஜத்தில் பூஜ்ஜியமே.
பிரதமர் மோடி இலங்கை வந்து மலை யக சமூகத்தைப்பற்றி சிந்தையில்லாது சென்று விட்டார் என்ற மனத் தாங்கல் ஒருபுறமிருக்க மலையக சமூகம் தொட ர்பிலான நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட வில்லை என்றும் தகவல்கள் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் மலையக சமூகத்தின் குறைகளை டில்லிக்கு வந்து கூறுமாறு கூறிச் சென்றிருப்பது வேதனை யிலும் வேதனையானது.
இந்நிலைமைகளுக்கு இலங்கை அரசா ங்கம், மலையக தலைமைகள் மற்றும் இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் கண் டியியிலுள்ள இந்திய உதவித்தூதரகம் என அனைத்து தரப்பினருமே பொறுப்புக் கூற வேண்டும்.எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி பின்னர் ஏமாற்றுகின்ற நிலைமை இந்திய பிரதம ரின் இலங்கை விஜயத்தின் விடயத்திலும் மலையகத்துக்கு நேர்ந்திருக்கின்றது.


0 Comments