Subscribe Us

ரணி்ல் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - அனுரகுமார திஸாநாயக்க


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 100 நாட்கள் மாத்திரமே பிரதமராக இருக்க முடியும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மகரகம நகரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் அரசாங்கத்தை அமைக்க மக்கள் வாக்களிக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை பெற மக்கள் ஆணை வழங்கவில்லை.

தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதியின்படி கூடியளவில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 100 நாட்கள் மாத்திரமே பிரதமராக பதவி வகிக்க முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 41 உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளனர். குறைந்த உறுப்பினர்களை வைத்து கொண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக முடியாது. ரணில் – மைத்திரி இணக்கமே இந்த இடத்தில் உள்ளது.

100 நாட்களின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கவில்லை என்றால் ரணி்ல் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

2010 ஆம் ஆண்டில் மக்கள் வழங்கிய ஆணையின்படி இந்த நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை செயற்பட முடியுமா?. 2010 ஆம் ஆண்டு வழங்கிய ஆணை தற்போது செல்லுபடியாகாது.

தற்போதைய நாடாளுமன்றம் நேர்மையானது அல்ல. 2010 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சியில் போட்டியிட்டு அரசாங்கத்திற்கு சென்ற ஹக்கீம் போன்றவர்கள் இந்த நாடாளுமன்றத்தில் உள்ளனர்.

2010 ஆம் ஆண்டு ரணிலுக்கு பிரதமராகும் மக்கள் ஆணை கிடைக்கவில்லை. 2010 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணை திரிபுபட்டுள்ளது. இதனால், புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய மக்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 2010 ஆம் ஆண்டு சாராய முதலாளி அல்ல. ஆனால் தற்போது சாராய முதலாளி. ஜகத் புஷ்பகுமாரவை மாட்டுத் திருடன் என்று அப்போது கூறவில்லை, ஆனால் தற்பொழுது கூறுகின்றனர்.

2010 இல் ஹெரோயினை கொண்டு வராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அதனை நாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். அன்று மேர்வின் சில்வா அரச ஊழியர்களை மரத்தில் கட்டிவைத்தவர்.

ரோஹித்த அபேகுணவர்தன அப்போது இலஞ்சம் ஊழல் ஆணைக்குவிற்கு அழைக்கப்படவில்லை. தற்போது ஆணைக்குழுவிற்கு அழைத்ததால், அவர் பாம்பு தீண்டியவர் போலாகியுள்ளார். இதனால், புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய மக்களுக்கு உரிமை உள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments