தமிழ் மக்கள் தங்களது கோரிக்கைகளினை நிறைவேற்றிக் கொள்ள காலத்திற்கு
காலம் உடன்பாட்டு அரசியல்,அகிம்சை வழிப்
போராட்டம்,ஆயுதப் போராட்டம்,முரண்பாட்டு அரசியல் என தங்களது பாணிகளினை
மாற்றினாலும் எம் முறை மூலமும் தங்களுக்குத் தேவையான தீர்வினை சுவைத்ததாக இல்லை
என்றே கூற வேண்டும்.எனினும்,ஆயுதப் போராட்டம் தவிர்ந்து ஏனைய போராட்டங்களில் தமிழ்
மக்கள் தங்களது கோரிக்கைகளினை நினைத்தாப் போல் அடைந்து கொள்ள முடியாவிட்டாலும்
பாதிக்கப்படவில்லை எனலாம்.
யுத்தம் முடிவுற்ற காலம் தொடக்கம் தமிழ் மக்கள் போர்க்குற்றம்
தொடர்பாக இலங்கை அரசு விசாரிக்கப்படல் வேண்டும்,சிறையில் உள்ள தமிழ்க் கைதிகள்
விடுவிக்கப்படல் வேண்டும்,இரானுவத்தின் பிடியில் உள்ள தமிழ் மக்களின் காணிகள்
விடுவிக்கப்பாடல் வேண்டும் இவ்வாறான முக்கிய கோரிக்கைகளினை முன்
வைக்கின்றனர்.இதில் போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசு விசாரிக்கப்படல் வேண்டும்
என்ற கோரிக்கையினைத் தவிர மற்றய கோரிக்கைகள் அனைத்தினையும் யாவரும் ஏற்றுக்
கொள்கின்றனர்.அண்மையில் ஜாதிக ஹெல உருமய கூட தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து
கவனம் செலுத்தப்படல் வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசு போர்குற்றம் தொடர்பாக விசாரிக்கப்படல் வேண்டுமா..??
இலங்கை அரசு போர் நடாத்தும் போது சில குற்றங்களினை புரிந்ததினை மறுக்க
முடியாத வேளை LTTE இயக்கம் தமிழ் மக்களினை பணயக் கைதிகளாக பிடித்து யுத்தத்தினை
கொண்டு சென்றமையினால் பல அப்பாவித் தமிழ் மக்களினை இலங்கை இராணுவம் கொல்ல LTTE
இயக்கத்தினரும் ஒரு காரணம் என்பதனையும் மறுக்க முடியாது.இதே போன்று யுத்தம் நடந்த
காலப்பகுதியில் மாத்திரமே தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.ஆனால்,யுத்தம் நிலவிய
மூன்று தசாப்த காலமும் இவ் LTTE இயக்கத்தினால் முஸ்லிம்கள் பாதிக்கபட்டிருன்தனர்
என்பதனை தமிழ் மக்கள் ஒரு கணம் மீட்டிக் கொள்ள வேண்டும்.LTTE இயக்கத்தினரால்
எத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்?
எத்தனை பேர் கடத்திச் செல்லப்பட்டனர்? இற்றை வரை சில முஸ்லிம்களுக்கு என்ன
நடந்துள்ளது என அறியாமல் கூட உள்ளனர்.இவ்வாறு பார்த்தால் LTTE அமைப்பினரும் யுத்த
விதி முறைகளுக்கு அமையச் செயற்படவில்லை.இலங்கை இராணுவம் தண்டிக்கப்பட வேண்டும்
என்றால் இன்று எஞ்சியுள்ள.LTTE அமைப்பின் முக்கியஸ்தர்களும் தண்டிக்கப்படல்
வேண்டும்.இதற்கு தமிழ் மக்கள் உடன் படுவார்களா..?? முஸ்லிம்களினால் LTTE அமைப்பினரினை மன்னிக்க முடியும் என்றால் ஏன்
தமிழ் மக்களினால் அரசினை மன்னிக்க முடியாது..??
இலங்கையின் அரசியல் இன்று மாற்றம் பெற ஆரம்பித்துள்ளது.இவ் அரசாவது
தமிழ் மக்களிற்கான உரிய தீர்வினை வழங்குகின்றதா..?? எனப் பார்ப்பதற்கு தமிழ்
மக்கள் ஒரு குறித்த அவகாசம் தற்போதைய அரசிற்கு வழங்கப்படல் வேண்டும்.அது இல்லாமல்
மீண்டும் சர்வதேசம் சென்று தான் தீர்வினைப் பெறுவதில் முனைப்புக் காட்டினால் அரசனை
நம்பி புரிசனை இழந்த நிலைக்கு செல்ல வேண்டும்.உணர்ச்சி வசப்பட்டு எதனையும்
சாதித்து விட முடியாது என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
போர்க் குற்ற விசாரணையில் இலங்கை அரசு தண்டிக்கப்படுமா?
யுத்தம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.யுத்த குற்ற மீறல்கள் குறித்து
இலங்கை அரசு விசாரணைக்குட்படுத்தப்படுமாக இருந்தால் பல முக்கியஸ்தர்கள் அகப்பட
வாய்ப்புள்ள்ளது.இதில் முன்னாள் ஜனாதிபதி,பல முக்கிய இராணுவத் தளபதிகள்
உள்ளடங்குவர்.ஏன்? தற்போதைய ஜனாதிபதி மைத்திரி கூட யுத்த காலத்தில் பாதுகாப்பு
விடயத்தில் முக்கிய இடத்தில் இருந்தார்.இவ்வாறன விடயங்களுக்கு இலங்கை அரசு
ஒத்துழைப்பு வழங்கினால் இலங்கை முக்கியஸ்தர்கள் பலர் அகப்படுவது இலங்கையினை
அவமதிப்பதாகவும் அமையும்.இன்றைய அரசில் முக்கிய வகி பாகம் வகிக்கும் ஜாதிக ஹெல
உருமய. மேலும் பல பேரின இனவாதக் கட்சிகள்,அமைப்புக்கள் எதுவும் யுத்தக் குற்றம்
தோடர்பாக இலங்கை அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்பதனை ஏற்க வில்லை.இதனை பேரின
மக்களும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவும் போவதில்லை.இவ்வாறான செயற்பாடுகளுக்கு இலங்கை
அரசு ஒத்துழைப்பு வழங்காது என்பது திண்ணம்.மேலும்,தற்போதைய ஜனாதிபதி மைத்திரி இவ்
விடயத்தில் முன்னாள் ஜனாதிபதியினை தான் கை விடப் போவதில்லை எனக்
குறிப்பிட்டிருந்தமை மேலும் இதனை ஆணித் தரமாக உறுதிப்படுத்துகிறது.
பல்லாயிரம் மக்கள் கொல்லபட்டதன் வடுக்கள் அவ்வளவு இலகுவில் தமிழ்
மக்கள் மனதை விட்டு அகலாது.எனினும்,நடந்தது நடந்து விட்டது இனி நடக்கப்போவதனை
சிந்திப்பதே அறிவுடைமை எனலாம்.உணர்ச்சிகளிற்கு அடிமைப்பட்டு எடுக்கும் முடிவுகள்
ஒரு போதும் சரியாக இருக்கப்போவதில்லை.இன்று நடந்தற்கு தீர்வினைக் கேட்டு முழு
இலங்கையின் அதிருப்தியினை தனதாக்கி இருப்பதையும் இழக்கின்ற நிலையில் தான் தமிழ்
மக்கள் உள்ளனர்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


0 Comments