கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும், 12 நிதி மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தமொன்றின் மூலம் அரசாங்கத்திற்கு 200 மில்லியன் டொலர் நஸ்டம் ஏற்பட்ட விடயம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அசந்த த மேலிடம் நீண்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் திவிநெகும வேலைத்திட்டத்தின் 2014ம் ஆண்டு தேசிய மாநாட்டின் போது, 63 மில்லியன் டொலர்கள் செலவிட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில், அந்த வேலைத்திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.என்.ரணவகவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இதேபோன்று மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசடி குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை காலி - கராபிடிய - ஜஸ்டின் கந்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றி வளைப்புக்களின் போது, 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.


0 Comments