கணிதப் பாட ஆசிரியர் மர்ஹூம் அல்ஹாஜ் எம்.எச். சரூக் அவர்கள் நினைவாக பாடசாலைகளுக்கிடையிலான கணித நுண்ணறிவுப் போட்டியொன்று, Batch Unity (O/L 93 – A/L 96) சாஹிரா தே.க. பழைய மாணவர் அணியின் ஏற்பாட்டில், இன்று (2015.02.14)-ம் திகதி காலை 9.00 முதல் பாத்திமா மு.பெ.க. பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
புத்தளம் நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளான மணல்குன்று மு.ம.வி., இந்து த.ம.வி., சாஹிரா தே.க., புனித மரியாள் த.ம.வி., பாத்திமா மு.பெ.க., தில்லையடி மு.ம.வி. ஆகியவற்றைச் சேர்ந்த தரம் 10, 11 பயிலும் மாணவ மாணவியர் 104 பேர் வரை இப் போட்டியில் பங்கேற்றனர். புள்ளிகளினடிப்படையில் வெற்றிபெறுவோருக்கான பரிசில்களும் சான்றிதழும் எதிர்வரும் நாளொன்றில் வைபவ ரீதியாக வழங்கப்படும்.
இப் போட்டிப் பரீட்சையின் இணைப்பாளராகவும் பிரதம பரீட்சகராகவும் எம்.ஏ.எம். அனீஸ் (உதவிக் கல்விப் பணிப்பாளர் – கணிதம் - வலயக் கல்விப் பணிமனை) கடமையாற்றினார்.
மர்ஹூம் அல்ஹாஜ் எம்.எச். சரூக் அவர்களின் முதலாம் வருட நினைவு இம் மாதம் (பெப்ரவரி) 23-ம் திகதியாகும். அன்னாரது மண்ணறை வாழ்வு சுவனத்தின் பூங்காவாக அமைப்பாயாக என எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வோம், ஆமீன்.
இப் போட்டி தொடர்பாக கலந்துகொண்ட மாணவர்களில் சிலர் பின்வருமாறு கருத்துக்களைக் கூறினர்:
“புத்தளத்தில் வாழ்ந்த கணித ஆசிரியரான மர்ஹூம் எம்.எச். சரூக் சர் அவர்களின் நினைவாக நடத்தப்படும் கணிதப் போட்டியின் மூலம் மாணவர்களின் கணித ஆக்கத்திறன் மேம்படுவதோடு, திறமைகள் வெளிக்கொண்டுவரப்படுகின்றது. இவ்வாறான போட்டியொன்றை நடத்திய பெச் யுனிடி பழைய மாணவர் குழுவுக்கு மாணவர்கள் சார்பில் பாராட்டுகிறேன்”
சைனப் சாரா – பாத்திமா மு.பெ.க. (தரம் 11)
“இந்தப் போட்டி க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான முன் அனுபவமாக அமைந்தது. எவ்வளவு கஷ்டமான வினாத் தாளாக இருந்தாலும் இலகுவாக செய்ய முடியும் என்ற நம்பிக்கைப் பிறந்துள்ளது”
எப்.எம். முயீஸ் – தில்லையடி மு.ம.வி. (தரம் 11)
“Batch Unity-யின் மூத்த சகோதரர்கள் ரொம்ப நல்லவர்கள். மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றார்கள். எதிர்காலத்தில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை தொடராக நடத்தி மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என தயவுகூர்ந்து வேண்டிக்கொள்கின்றேன்”
எம்.எச்.ஏ. ஹபாஸ் – மணல்குன்று மு.ம.வி. (தரம் 10)
“இன்று கணித பாட ஆசிரியர் மர்ஹூம் எம்.எச். சரூக் அவர்கள் நினைவாக நிகழ்ச்சியொன்று நடத்தியது போன்று, ஏனைய ஆசிரியர்கள், உதாரணமாக ஹலீல் சர், ரசீன் மஹ்ரூப் சர் போன்றவர்கள் நினைவாகவும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அவர்களின் சேவைகளைப் பற்றி நாங்கள் –இன்றைய தலைமுறை- தெரிந்துகொள்ள பெரும் வாய்ப்பாகும்”
எம்.இசட்.எம். அயாஸ் – சாஹிரா தே.க. (தரம் 10)
`````````````````````````````````````````````````
கட்டுரையாளனின் கருத்து:
பாடசாலை மாணவர்களின் கல்வி சார்ந்த நலன்புரி விடயங்களான உளவள ஆலோசனை (counseling), பரீட்சைக்குத் தயாராகுதல் (how to prepare for exam), பாட அலகுசார் வழிகாட்டல் (module guide), தலைமைத்துவப் பயிற்சி (leadership training) போன்றவற்றை Batch Unity உட்பட ஏனைய பழைய மாணவர் அணியினரும் முன்வந்து நடத்த வேண்டும். இன்றைய கல்விச் சூழலின் நெருக்குவாதங்களினால் மாணவர்கள் உள ரீதியாக கடும் அழுத்தத்திற்கு உட்பட்டிருப்பதை அவர்களுடன் நேசமாகிப் பேசும்போது புரிந்துகொள்ளலாம். இவர்களுக்கு எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்கும் மன ஆறுதலையும் உளத் துணிவை ஊட்ட வேண்டிய தார்மீகக் கடமைப் பொறுப்பு இன்றைய மூத்த தலைமுறையிடம் உள்ளது. இன்ஷாஅல்லாஹ்.
செய்தியும் ஒளிப்படங்களும் Hisham Hussain
-நன்றி :TPT-
-நன்றி :TPT-






0 Comments