Subscribe Us

header ads

பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலைகளுக்கு ஹஸன் அலி விஜயம் (PHOTOS)

பி. முஹாஜிரீன்


பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலைகளுக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹஸன் அலி நேற்று (23) திங்கட்கிழமை மாலை விஜயம் மேற்கொண்டு அங்குள்ள குறைகளை நேரில் கண்டறிந்தார்.

பாலமுனை பிரதேச வைத்தியதிகாரி எம்.ஐ. சமூன், ஒலுவில் பிரதேச வைத்திய அதிகாரி ஏ.எல். அமாமுதீன் ஆகியோர் தலைமைகளில் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக நடைபெற்ற இரு வேறு நிகழ்வுகளில் அமைச்சர் எம்.ரி. ஹஸன் அலி கலந்து கொண்டார்.

அமைச்சருடன் சுகாதார ராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி பேர்ள் வீரசிங்க, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம், கல்முனை பிரந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல். அலாவுதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில், உதவித் தவிசாளர் ஏ.அமானுல்லா ஆகியோர் உட்பட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் இப்பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் நீண்ட காலமாக நிலவிவரும் பௌதீக வள பற்றாக்குறை உட்பட பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹஸன் அலி தெரிவித்தார்.


கடந்த அரசாங்கத்தினால் அபிவிருத்தியில் புறக்கனிக்கப்பட்ட பின் தங்கிய கிராமங்கள் நல்லாட்சிக்கான இவ்வரசாங்கத்தினால் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எங்களிடம் கேட்டுள்ளார். அதற்கிணங்க நான் அம்பாறை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகளையும் கண்டறிந்து 100 நாள் அபிவிருத்தி திட்டத்தில் மேற்கொள்வதற்கு முடியுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

குறிப்பாக இப்பிரதேசத்தில் வைத்தியசாலைகளில் நிலவும்; அத்தியவசிய தேவைகளை நிறைவு செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இவ்வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் செறிவாக்கும் இயந்திரங்களும் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.







Post a Comment

0 Comments