Subscribe Us

header ads

டாக்டர்கள் கண்டுபிடிக்க முடியாத கருப்பை புற்றுநோய்: பெண்ணுக்கு உதவிய கூகுள்


டாக்டரினால் கண்டுபிடிக்க முடியாத நோயை கூகுளில் தேடி தனக்கு வந்திருப்பது புற்றுநோய்தான் என்று உறுதி செய்துள்ளார் லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர். இங்கிலாந்தை சேர்ந்த சாதி ரான்ஸ் என்ற அந்த இளம்பெண் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 


உறவினர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர் ‘இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம்' (ஐபிஎச்) எனும் குடல் நோய் இருப்பதாக சொல்லி சில மருந்துகளைக் கொடுத்தார்.

சில மாதங்களாக மருத்துவர் கொடுத்த மருந்தை சாப்பிட்டு வந்த போதும் வயிற்று வலி குறையவேயில்லை. இதனால் சந்தேகமடைந்த சாதி ரான்ஸ், மருத்துவரிடம் திரும்ப சென்றுள்ளார். அவரோ, இது உணவுப்பழக்கத்தால் வரக்கூடிய சாதாரண நோய் தான் என்று கூறி சமாதானம் செய்தார். 

மருத்துவரின் பதிலால் திருப்தியடையாத சாதி ரான்ஸ், தனக்கு உள்ள பாதிப்புகளை வைத்து என்ன நோய் என்று கூகுளில் தேடினார். அதில் தனக்கு உள்ள அறிகுறிகள் கர்ப்பப்பை புற்று நோய்கான அறிகுறிகளோடு முழுமையாக ஒத்துப்போவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

இதனையடுத்து மருத்துவரிடம் அவராகவே சில சோதனைகளை செய்யும்படி கேட்டுக்கொண்டார். சோதனை முடிவுகளில் அவருக்கு புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நோய் கண்டுபிடிக்கப்பட்ட போது அவரது கர்ப்பப்பையில் தர்பூசணி அளவிற்கு பெரிய கட்டி இருந்தது. 

அறுவை சிகிச்சை மூலம் அந்தக்கட்டி நீக்கப்பட்டாலும், கர்ப்பப்பையில் தாக்கிய புற்றுநோய் குடல், நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயம் வரை பாதித்திருப்பது தெரியவந்தது. இது நடந்தது 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக சிகிச்சை பெற்று வருகிறார் சாதி. 

சாதியின் கணவர் ஜேசான் இருவரும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டவர். சாதியின் மருத்துவ சிகிச்சைக்காக இதுவரை 35,000 பவுண்ட் (ரூபாய் 33 லட்சம்) செலவழித்துள்ளாராம்.

தற்போது லண்டனில் உள்ள ராயல் மார்ஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாதி, இந்த சம்பவத்திற்கு பிறகுதான் ஜேசான் தன்னை இன்னும் அதிகமாக நேசிப்பதாக சாதி கூறியுள்ளார். 

இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள்தான் சாதி உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை பொருட்படுத்தாத அவர், தன் கணவர் ஜேசானை ஒவ்வொரு நொடியும் தீவிரமாக காதலித்து தன் வாழ்நாளை நீட்டித்து வருகிறார். நோயின் தீவிரத்தை உண்மையான நேசத்தினால் வென்றுவிடலாம் என்று நிரூபித்து காட்டியுள்ளார் சாதி.

Post a Comment

0 Comments