தேசிய ஷூரா சபை (National Shoora Council) அண்மையில் (6.2.2015) முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து, சந்திப்பொன்றை நிகழ்த்தி, அரசின் 100 நாள் வேலைத் திட்டங்கள், அரசியலமைப்பு சீர்த்திருத்தங்கள், தேர்தல் முறை மாற்றங்கள், மத உரிமைகள், காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றம், சமூகம் சார் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை அவர்களுடன் கலந்துரையாடி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும் படி கோரியுள்ளமை வரவேற்புக்குரியது. அல்லாஹ் உங்களது முயற்சிகளை பொருந்திக் கொள்வானாக.
அதேவேளை தேசிய மட்டத்தில் இயங்கும் தேசிய ஷூரா சபை சுயாதீனமான சிவில் தலைமைத்துவம் என்ற நிலையில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய மற்றுமொரு பணியும் இருக்கின்றது.
சமகாலத்தில் தேசிய ரீதியில் சகல மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம் சிவில், சமூக,சமய அமைப்புக்கள், இளைஞர், மகளிர் அமைப்புக்கள் மற்றும் முற்போக்கு சக்திகள் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள்,எதிர்ப்பார்ப்புக்கள் குறித்து தீவரமாக சிந்தித்து புதியதொரு அரசியல் வரைபடத்தை அறிமுகப்படுத்தும் வேட்கையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் தொடர்பிலும் தேசிய ஷூரா சபை தனது ஆழ்ந்த கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது.
இத்தகைய சக்திகளுடனும் தேசிய ரீதியில் மற்றும் பிராந்திய, பிரதேச ரீதியில் சந்திப்புக்களை நிகழ்த்த வேண்டும், நாட்டின் தேசிய அரசியல் புதிய போக்குகளையும், நோக்குகளையும் உள்வாங்க தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து வரும் காலங்கள் முஸ்லிம் அரசியலிலும், நமது மக்களைப் பொருத்தவரையிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அரசியல் வியாபார கலாசாரம் தொடர்ந்தும் நமது முஸ்லிம் அரசியலில் வியாபிக்க அனுமதிக்க முடியாது அழகிய முன்மாதிரி அரசியல் கலாசாரம் தலைதூக்க வேண்டும்.
இந்த நாட்டு மக்களுக்கும், நமது சமூகத்துக்கும் முன்மாதிரிகளை சான்றுபகர வேண்டிய நமது முஸ்லிம் அரசியல் இன்று முஸ்லிம் அல்லாத அரசியல் முகாம்களில் இருந்து கற்பதற்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன. அத்தகைய அரசியல் ஆளுமைகள் முஸ்லிம் அரசியலில் பிரதிபலிக்க வேண்டிய முன்மாதிரிகளை இன்று காண்பித்து வருகின்றமை நமது முஸ்லிம் அரசியலின் வங்குரோத்து நிலையை கோடிட்டுக் காட்டுகின்றது.
நமது மக்களின் அப்பாவித்தனத்தை நமது முஸ்லிம் அரசியல் சக்திகள் மூலதனமாக்கி பயணிப்பதை நிறுத்தி, மக்களை ஆரோக்கியமான திசையில் வழிப்படுத்துவதும் சமூகக் கடமையும், காலத்தின் தேவையும் என்பதையும் நாம் புரிதல் வேண்டும்.
Mohamed Muhsi


0 Comments