Subscribe Us

header ads

முஸ்லிம் கட்சிகளின் தேர்தல் முன்னெடுப்புகள்


----------------------------------------------------------------------------------
தூக்கத்தில் வாகனம் செலுத்தும் 
சாரதி நிலையாகி விட கூடாது!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
----------------------------------------------------------------------------------
நாடாளுமன்றம் ஏப்ரல் 23 ஆம் திகதியளவில் கலைக்கப்பட்டு விடுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து சில நாட்களுக்குள்ளேயே பிரதான முஸ்லிம் கட்சிகள் இப்போதே களத்துக்கு தயாராகி விட்டன. விசேடமாக, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இரு கட்சிகளின் தலைமைகளும் அவற்றின் முக்கியஸ்தர்களும் கடந்த வாரம் சமகாலத்தில் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்களுக்குச் சென்றிருந்தனர். இரு தரப்பினரும் மக்களைச் சந்தித்தும் கூட்டங்கள் போட்டும் பல விடயங்களை தெரிவித்திருந்தனர்.
மக்கள் தங்களுக்கு எவை தேவை என்று இதுவரை ஏங்கி காத்திருந்தனரோ அதற்கு மேலதிமாக பல விடயங்களைக் கூறி அவற்றையும் செய்து தருவதாகவும் வாக்களித்துள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு கிடைத்துள்ள அமைச்சு பதவியின் ஊடான செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் முதல் களமாக கிழக்கு மாகாணம் அமையும் போல் தெரிகிறது. அந்தளவுக்கு தீவிரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதுவரை காலமும் நாறிப் போய்க் கிடந்த சாய்ந்தமருது தோணாவுக்கு வாசனைத் திரவியம் அடிப்பது போன்ற விடயங்களும் நடக்கின்றன. அந்த தோணாவை புனரமைக்கும் பணிகளுக்கு இன்று வரைபடம் கீறி , நிதி ஒதுக்கவுள்ளனர். இவ்வளவு காலமும் இந்த விடயம் இழுத்தடிக்கப்பட்டமை தேர்தல் காலத்தில் செய்வதற்காகத்தானோ என்றும் பொதுசனத்தார் சிந்திக்கின்றனர். கொட்டும் மழைக் காலம் உப்பு விற்பதால் நஷ்டம் என்ற கணக்கு அவர்களுக்கு தெரியாதா என்ன? மட்டு. மாவட்டத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் திட்டங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸினால் இன்னும் எத்தனை திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளனவோ தெரியாது.
இதற்கு மேலாக அந்தக் கட்சியினர் இப்போது மக்களை மிகுந்த இரக்கத்துடன் நெருங்கி பழகி வருகின்றனர். சோழியன் குடுமி என்ன சும்மாவா ஆடும்?. கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் ஊர் விடயங்களில் உன்னிப்பாக கவனம் செலுத்தி தீர்த்து வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஏதோ தேர்தல் காலத்திலாவது தங்களுக்கு ஏதாவது நடக்குமென்ற வழமையான நம்பிக்கையில் மக்களும் உள்ளனர்.
எது எப்படியிருப்பினும் தற்போதைய நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நொந்து போயிருந்த, ஏமாந்திருந்த முஸ்லிம் மக்கள் அந்தக் கட்சியின்பால் திடீரென ஈர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறான திடீர் மாற்றம் கட்சி மீதான அக்கறை கொண்டதொரு விடயமாக இல்லாவிட்டாலும் மாமனிதர் மரஹும் அஷ்ரபின் கட்சி, சின்னம் மரம் என்ற அடிப்படையில் அமைந்திருக்கலாம். சாதாரண காலத்தில் ஹக்கீமையும் கட்சியையும் திட்டித் தீர்க்கும் பொதுசனத்தார் தேர்தல் காலத்தில் மர்ஹும் அஷ்ரஃபையும் மரச் சின்னத்தையும் நினைத்து பழையவை அனைத்தையும் மறந்து விடுவார்கள். ஹக்கீமையும் கட்சியையும் புகழ்ந்து தள்ளுவார்கள்.. இதெல்லாம் சகஜம்.
எனவே, மக்களின் இப்போதுள்ள நிலைமைகளை சரிவர புரிந்து செயற்பட்டு அவர்களது மனங்களை வெல்லுவது கட்சியின் கடமை. இந்த விடயத்தில் உள்ளுர் தலைமைகளின் வகிபாகமே அதிகம் தேவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
கிழக்கு மாகாணத்தில் விசேடமாக, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு, மூன்று என்ற அடிப்படையில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இன்று களம் இறங்கியிருந்தாலும் அதனை பெற்றுக் கொடுக்கக் கூடியவர்கள் வாக்காளர்களே என்பதனை புரிந்து கொண்டு அவர்கள் செயற்படுவது அவசியம்.
இனி அவர்களால் போலி வாக்குறுதிகளை வழங்க முடியாது. செய்ய முடியாதவற்றை செய்வதாக கூறவும் முடியாது. ஏனெனில் அவர்கள் சார்ந்திருப்பது நல்லாட்சி அரசுடன். அவர்கள் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நல்லாட்சி அரசுக்கே களங்கமாகிப் போய்விடும்.
இதேவேளை, அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கட்சியும் முன்னர் போன்றல்லாது கிழக்கு மாகாணத்தில் அதிக அக்கறை காட்டி வருகிறது. மட்டக்களப்புக்கு அண்மையில் சென்றிருந்த போது அவர்கள் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர். பல விடயங்களை தெளிவுபடுத்தியதுடன் தங்களாலும் பலதையும் செய்து தரமுடியுமென்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்றிறன் முன்னர் போன்று வீரியமாக இல்லை. கட்சியின் தவிசாளரான பஷீர் ஷேகுதாவூத் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் முஸ்லிம் காங்கிரஸின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பாரா அல்லது முன்னெடுக்க அனுமதிக்கப்படுவாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இன்னொருவரான கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பிரதித் தலைவரான ஹாபிஸ் நஸீர் இப்போது முதலமைச்சராகி விட்டார். அதன் காரணமாக கட்சி தொடர்பான அவரது நடவடிக்கை எவ்வாறு இருக்குமோ தெரியாது எனவே, இவர்கள் இருவரைத் தவிர பெயர் சொல்லக் கூடிய பெரிய மனிதர்கள் என்று மட்டு. மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு இல்லாமையானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வாய்ப்பளிப்பாக அமையவும் கூடும்.
ஹிஸ்புல்லாஹ்வை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைத்துக் கொள்ளாவிட்டாலும் பிரதியமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஷிப்லி பாறூக் போன்றவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செய்றபாடுகளை தீவிரமாக முன்னெடுப்பதன் மூலம் கட்சி பலப்படும் நிலைமைக்கு இட்டுச் செல்லப்படலாம். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரும் அமைச்சர் ரிஷாதின் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் முயற்சியானது வெற்றியளித்தாலும் அவர்களது கட்சி அந்த மாவட்டத்தில் நாடாளுமன் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வது கஷ்டமான காரியமாக இருக்காது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் கள நிலவரம் முற்று முழுதாக வேறுபட்டு காணப்படுகிறது. என்னத்தைச் சொன்னாலும்.. என்னத்தைச் செய்தாலும்.. நம்ம கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான் என்று கூறும் கட்சி ஆதரவாளர்களைக் கொண்ட மாவட்டமாகவே அது இன்றும் இருந்து வருகிறது. அத்துடன் முஸ்லிம் காங்கிரஸின் பலமான நபர்களைக் கொண்டதொரு மாவட்டமாக அது திகழ்கிறது. இந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிலைகொள்வதில் பலத்த சவால்களை எதிர்கொள்ளவே வேண்டிவரும். அதேவேளை, கிழக்கு மாகாண முதல்வர் விடயத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்தி ரிஷாத்தின் கட்சிக்குச் சற்று சாதமாகவும் அமையலாம்.
இவ்வாறான சவால்களை எதிர்கொண்டு தங்கள் ஆதரவை அதிகரித்துக் கொள்வது அந்தக் கட்சியின் சாணக்கியத்திலேயே உள்ளது. இந்த விடயத்தில் அந்தக் கட்சி கடுமையான பிரயத்தனங்களை முன்னெடுக்க வேண்டி வரும். அத்துடன் இங்கு கட்சியின் பெயரை விடத்தில் களத்தில் இறக்கப்படும் நபர்களே முக்கியத்துவப்படுத்தப்படுவார். எனவே, அவர்கள் தங்களது வேட்பாளர்களாக நியமிக்கப்படுவோர் தொடர்பிலும் அதிக கரிசணை செலுத்த வேண்டும்.
முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் எதிர்கொண்டுள்ள அண்மைய சரிவு நிலைமைகளை அமைசச்ர் ரிஷாதின் கட்சிக்கு சாகதமாக அமையலாம். தேசிய காங்கிரஸின் ஆதரவு தளத்தின் சரிவை அல்லது தளர்ச்சியான நிலைமைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சரியாக பயன்படுத்துவதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் ஓர் ஆசனத்தைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு அந்தக் கட்சிக்கு கிட்டலாம்.
அதேவேளை, இந்த இரு கட்சிகளும் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டால் அங்கு வாழும் வாக்களிக்க தகுதி பெற்ற முஸ்லிமகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் இரு கட்சிகளும் தோல்வி அடைவதுடன் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் அந்த மாவட்டத்தில் இல்லாமலும் போகலாம்.
திருகோணமலை மாவட்டம் என்பது சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மிக சாதகமான தன்மையைக் கொண்ட மாவட்டமாகும். முஸ்லிம் கட்சிகளோ அல்லது முஸ்லிம் வேட்பாளர்களோ அதிகளவில் களத்தில் இறங்கும் போது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் என்பது தோல்வி முகத்தையே தழுவி விடும் என்பதே யதார்த்தம். இந்த விடயத்தில் இரு கட்சிகளும் பரஸ்பரமான தன்மையுடன் செய்றபட வேண்டியுள்ளது.
பொலிஸ் அதிகாரி ஒருவர் சாரதியிடம் கேட்டாராம். எப்படி உனது வாகனம் விபத்தில் சிக்கியது என்று.. அதற்கு அந்தச் சாரதி சொன்னாராம் அதுதான் சேர் எனக்கும் தெரியவில்லை. விபத்து ஏற்படும் போது நான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து விட்டுன் என்று... அரசியல்வாதிகள் என்ற சாரதிகள் விடும் தவறுகாளல் மக்கள் பாதிக்கப்படக் கூடாது அல்லவா?
(இந்தக் கட்டுரை கடந்த வெள்ளிக்கிழமை (06-02-2015) எழுதப்பட்டது. எனவே, அதன் பின்னரான அரசியல் களநிலையில் சில மாற்ற்ங்கள் இடம்பெற்றுள்ளதனை கவனத்தில் கொள்ளவும்)

Post a Comment

0 Comments