மைத்திரி தலைமையிலான தேசிய அரசாங்கம் நெல் விலையினை 50
ரூபாவிற்கு அதிகரித்துள்ளது.இதன் படி ஒரு மூடை நெல் விலையானது 3300 ரூபாவிற்கு
அதிகரித்துள்ளமை விவசாயிகளினை மகிழ்வுறச் செய்துள்ள போதும் இவ் விலை
அதிகரிப்பினால் முன்பு தாங்கள் விற்பனை செய்த விலையில் இருந்து ஒரு சிறு தொகை
அதிகமாக விற்பனை செய்யலாமே தவிர இவ் நிர்ணய விலையில் விவசாயிகள் பெரும் பாலும் நெல்லினை
விற்பனை செய்வதில்லை,விற்பனை செய்வதும் சாத்தியம் அற்ற ஒன்றும் கூட என்ற உண்மை
எத்தனை பேரிற்கு தெரியும்?
இதனை தற்போதைய ஜனாதிபதி மைத்திரி இற்கு நான் சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை.காரணம்,அவருடைய
சகோதரர் இலங்கையில் உள்ள ஒரு மிகப் பெரிய அரிசி ஆலையினை வைத்துள்ளார்.இப்
பிரச்சனைகள் பற்றி அவர் நன்கே அறிவார்.நெல்லினை இவ் நிர்ணய விலையில் விவசாயிகள்
விற்பனை செய்ய வேண்டுமாக இருதால் அரசாங்க நெல் களஞ்சியசாலைகளில் சென்று விற்பனை
செய்யும் போது மாத்திரமே உரிய விலைக்கு விற்பனை செய்யலாம்.இக் களஞ்சிய சாலைகளில்
ஒரு குறித்த தொகை நெல்லினைத் தான் ஒரு விவசாயி விற்பனை செய்ய முடியும்? மற்றய
நெல்லினை விவசாயிகள் என்ன செய்வது? இல்லை,வயல் நிலங்கள் குறித்த தொகையினை விட
அதிகமாக விளையக் கூடாதா? அனைத்து விவசாயிகளினதும் நெல்லினையும் கொள்வனவு செய்வதும்
அரசிற்கு சாத்தியமானது அல்ல.
அது மாத்திரம் அல்ல இவ் நெல்லினை 50kg ஆக மூட்டை
கட்ட வேண்டும்.அவ்வாறு கட்டினால் தான் களஞ்சிய சாலையில் நெல்லினை விற்பனை செய்ய
முடியும்.மழை பொழிந்து கொட்டிக் கொண்டிருக்கும் போது நெல்லினை வீட்டிற்கு கொண்டு
செல்லவே விவசாயிகள் சிரமத்தினை எதிர் நோக்குவர்.இச் சந்தர்ப்பத்தில் இவர்களிற்கு 50kg ஆக
கட்டுவது சாத்தியமான ஒன்றா? இவ்வாறு செய்வதன் மூலம் வேலை செய்யும் வேலையாட்களிற்கு
வழங்கப்படும் செலவுகள் அதிகரிக்கும்.மேலும்,நெல் எவ்வளவு தான் தரமிக்கதாக இருப்பினும் அதனை களஞ்சியப்
பொறுப்பாளர்கள் அதனை தரமிக்கதாக ஏற்க ஒரு சிறு தொகை வழங்க வேண்டும்.ஒரு நாளைக்கு
ஒரு குறித்த அளவு நெல்லினைத் தான் கொள்வனவு செய்வார்கள்.நெல்லினை விற்பனை செய்ய பல
நாட்களாக சில நேரங்களில் வாரக் கணக்காகவும் நெல் களஞ்சிய சாலைகளில் வரிசையில்
நிற்க வேண்டி ஏற்படும்.இதன் போது கூலியாட்கள்,இவைகளினை ஏற்றிச் செல்லும்
இயந்திரங்களுக்கென்று பெருந் தொகைப் பணத்தை செலவு செய்ய வரும்.இவைகளினால் ஏற்படும்
சிரமத்தினைப் பார்த்து விவசாயிகள் குறைந்த விலையில் இடைத் தரகர்களுக்கு விற்று
விடுவார்கள்.தற்போது ஒரு மூடை நெல் 2300 ரூபாய் இற்கே கொள்வனவு செய்யப்படுகிறது.
எனவே,இவைகளுக்கெல்லாம் தீர்வு கிட்ட வேண்டுமாக இருந்தால் இடைத்
தரகர்கள் நெல் கொள்வனவு விலை நிர்ணயம் செய்யப்படல் வேண்டும். அரிசின் விலையினை
நிர்ணயம் செய்யும் அரசினால் ஏன் நெல் விலையினை நிர்ணயம் செய்ய முடியாதுள்ளது?
எனவே,தற்போது விளைச்சல்கள் மந்தகதியில் சென்று கொண்டிருக்கும் இச்
சந்தர்ப்பத்திலாவது மைத்திரி தலைமையிலான அரசு இதற்கு உரிய நடவடிக்கையினை எடுக்க
வேண்டும் என்பதே விவசாயிகளின் அவாவாக உள்ளது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை.


0 Comments