இன்று (07) நேத்ரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சதுரங்கம்“ பார்த்தேன். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ராம் அவர்களும் கணினித்துறை விற்பன்னரான அன்வர் எம். முஸ்தபா அவர்களும் கலந்து கொண்டு நல்ல பல விடயங்களை தெளிவாக கூறினர். சம காலத்தில் மக்கள் எதனை அறிந்து கொள்ள வேண்டும் என்பதனை நாடி பிடித்து அவற்றுக்கான விளக்கங்களை அவர்கள் வழங்கினர்.
அதேவேளை, புதிய நல்லாட்சி அரசினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு – செலவு (மினி பட்ஜட்) திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் மக்கள் கொண்டுள்ள சில சந்தேகங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான விளக்கங்களை அன்வர் எம். முஸ்தபா அவர்கள் வழங்க முற்பட்ட போது நிகழ்ச்சி நடத்துரான தாஜ் அதற்கு இடையூறு விளைவித்தார். அன்வர் எம். முஸ்தபாவை விளக்கமளிக்க விடாமல் தடுத்தார். அன்வர் முஸ்தபா எவ்வளவுதான் முயற்சித்த போதும் நிகழ்ச்சி நடத்துனரான தாஜ் அதற்கு இடமளிக்காமல் வேறு திசைக்கு விடயத்தை திருப்பி விட்டார்.
குறித்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த என் போன்ற பலருக்கும் இது அதிர்ச்சியை அளித்திருக்கும், நல்லாட்சியின் கீழான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இன்னும் இவ்வாறு இடம்பெறுகிறதா என்ற கேள்வி கூட என்னுள் எழுந்தது. மரா ஆட்சி இப்பாது இல்லாவிட்டாலும் அவருக்கான விசுவாசம் அரச தொலைக்காட்சியில் தொடர்கிறதா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஆனால், நல்லாட்சியில் பழிவாங்கல் இல்லை. ஊடக சுதந்திரம் உள்ளது என்பதால் மனதை தேற்றிக் கொண்டேன்.
புதிய நல்லாட்சி அரசினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு – செலவு (மினி பட்ஜட்) திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினரால் செய்யப்படும் மோசமான விமர்சனங்கள் சில வேளைகளில் மக்களை மூளைச் சலவைக்கு உட்படுத்தி அவர்கள் புதிய அரசில் அதிருப்தி கொள்ளும் ஒரு நிலை உருவாக்கலாமென பலராலும் கருதப்படும் நிலையில், அதனை உடைத்தெறிந்து சரியான விளக்கத்தை மக்களுக்கு வழங்க முயற்சித்த அன்வர் எம். முஸ்தபாவை விளக்கமளிக்க விடாமல் தடுத்து இடையூறு விளைவித்த நண்பர் ஏ.எம். தாஜ் அவர்களின் துணிச்சலுக்கு நான் சலூட் பண்ணுகிறேன்.
நல்லாட்சி வழங்கியுள்ள ஊடக சுதந்திரத்தை அந்த அரசுக்கு எதிராகவே முதன் முதலில் பயன்படுத்திய பெருமையை நண்பர் ஏ.எம். தாஜ் பெற்றுக் கொண்டார்.வாழ்க வளமுடன்
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


0 Comments