Subscribe Us

தமிழ்நாட்டில் முஸ்லீம் சிறுமி பொலிசாரால் தாக்கபட்டு வைத்தியசாலையில் அனுமதி. (விடியோ இணைப்பு)

தமிழ்நாடு- (தமிழக இணையத்தில்  இருந்து மற்றம் இன்றி மீள் பிரசுரம்)


காவல் துறையால் தாக்கப்பட்ட முஸ்லீம் சிறுமி சமீரா ஆஸ்பத்திரியில் அனுமதி!
நேற்று காலை மனதை நெகிழ்த்தும் ஒரு மனித உரிமை மீறல் செய்தியோடு விடிந்தது. இன்பாக்சில் ஒருவர் என் தொலை பேசி எண்ணைக் கேட்டிருந்தார் அனுப்பிய சில நிமிடங்களில் அவரிடமிருந்து அழைப்பு.
அவர் சொன்ன செய்தி அதிர்ச்சியாக இருந்தது. உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளியுங்கள் எனச் சொல்லிவிட்டு சம்பவம் எந்த அளவிற்கு உண்மை என உறுதிப்படுத்தக் காத்திருந்தேன்.
இன்று மாலை அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரே என்னிடம் பேசினார். அவரிடமும் பேசி உறுதிப் படுத்திக் கொண்ட பின் இங்கு இதைப் பதிவிடுகிறேன்.
மேலப்பாளையம் ஹாமீம்புரம் பள்ளிவாசல் அருகில் உள்ள சமிரா என்கிற 9 வயது பள்ளிச் சிறுமியை மாலை முதல் காணவில்லை.
சிறுமியின் தந்தை முகமது அனீபா கொலை வழக்கொன்றில் சிறையில் உள்ளார். பெண்ணின் தாய் மெஹ்ராஜ் பீடி சுற்றிக் குழந்தையைக் காப்பாற்றி வருகிறார். அடிக்கடி காவல் துறை விசாரணைக்கு மத்தியில் குடித்தனம்.
இரவு வெகு நேரம் வரையில் சிறுமி வராததைக் கண்டு அஞ்சிய மெஹ்ராஜ் அக்கம் பக்கத்தவரிடம் சொல்ல, பள்ளி வாசல் ஒலி பெருக்கியில் குழந்தை காணாமற் போனதை அறிவித்துள்ளனர்.
இரவு 11 மணி வாக்கில் ********** எனும் எண்ணிலிருந்து மெஹ்ராஜுக்கு அழைப்பு வந்துள்ளது. “நான் சி.ஐ.டி பேசுறேன். உன் பொண்ணு வந்துருவா. ஏன் அதற்குள் எல்லாரிட்டயும் சொன்னே..” என்கிற ரீதியில் பேசி போன் துண்டிக்கப்பட்டுள்ளது.
சில நிமிடங்களில் குழந்தை அழுது கொண்டே ஓடி வந்துள்ளது. மேற் குறிப்பிட்ட அந்த எண்ணிலிருந்து ஏற்கனவே சிலமுறை புலனாய்வுத் துறையினர் அவரைக் கூப்பிட்டுள்ளனர் என்கிறார் மெஹ்ராஜ்.
யூனிஃபார்மில் ஒருவரும், சாதா உடையில் ஒருவருமாய் மோட்டார் சைக்கிளில் குழந்தையைக் கடத்திச் சென்று அடித்து “உன் வீட்டிற்கு யார் யார் வருகின்றனர்?” என்றெல்லாம் கேட்டுள்ளனர்.
பிறகு, ” நாங்க தூக்கிட்டுப் போனதை எல்லாம் சொல்லக் கூடாது” என மிரட்டிக் குழந்தையை அனுப்பியுள்ளனர் என்றும் மெஹ்ராஜ் கூறினார்.
காவல்துறையில் புகார் கொடுக்கச் சொல்லியுள்ளேன். என்னிடம் கடத்திச் சென்றவர்கள் பேசிய அந்தத் தொலைபேசி எண் உள்ளது. ஆண் துணை இன்றித் தனியே இருப்பவர்களை இப்படி விசாரணை எனத் தொல்லை செய்வதும், 9 வயதுப் பெண் குழந்தையை இப்படிக்கடத்திச் செல்வதும் கொலைகாரக் கொடியவர்கள் மட்டுமே செய்கிற காரியம்.
பேசியவர்களின் தொலைபேசி எண் மிக முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில் குழந்தையைக் கடத்தியவர்கள் குறித்த உண்மை விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
மார்க்ஸ் அந்தோனிசாமி.

Post a Comment

0 Comments