- Rauff Nisthar -
நகர சபையின் தலைவர் என்ற வகையில் பாயிஸ் அவர்கள் புத்தளம் நகருக்கும் அதன் மக்களுக்குமான பிரத்தியேக கடைமைகளைக் கொண்டுள்ளார்.
ஆனால் புத்தளம் தொடர்பான அவரின் உரிமை என்பது புத்தளத்தில் பிறந்து வளர்ந்த அல்லது புத்தளத்தை தமது ஊராக்கிக் கொண்ட அனைவருக்கும் இருக்கும் உரிமையை விட இம்மியளவும் கூடியதல்ல. அந்த அடிப்படையில் ஊரின்/பிரதேசத்தின் அரசியல் பற்றிய அக்கறையுள்ளோர் அனைவரும், பாயிஸ் உட்பட, கதைக்க, அபிப்பிராயம் சொல்ல உரிமையுடையோர் மாத்திரமல்ல அவர்கள் அது பற்றி கதைத்தே ஆகவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
நாம் பலமுறை சுட்டிக் காட்டியபடி ஸ்ரீலங்கா சுதந்திரக கட்சி அல்லது ஐக்கிய தேசிய கட்சி என்பவை ராஜபக்க்ஷவினதோ அல்லது ரனில் விக்கிரமசிங்கவினதோ தனிப்பட்ட சொத்தல்ல என்பதை புரிந்து கொள்வதில் யாருக்கும் கஸ்டம் இருக்கப் போவதில்லை. இக்கட்சிகளின் வளர்சிக்கு இலங்கையர் அனைவரின் பங்களிப்புகளும் இருந்துள்ளன, இனியும் இருக்கும். ஆகவே இவை நமது கட்சிகள். அதனால் இக்கட்சிகளுக்கு நமது வெறும் விருப்பின் அடிப்படையில் ஆதரிவளிப்பது போன்றே தேவையின் நிமித்தம் நமது ஆதரவை வழங்காமல் இருப்பதும் தவிர்க்க முடியாத விடயங்கள். இதே போலவே மற்றைய தேசிய கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி போன்றவற்றையும், பிராந்திய கட்சிகளான அல்லது தேசிய ரீதியில் அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்த முடியாத ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளை ஆதரிப்பதும் அக்கட்சிகளின் ஊடாக அரசியல் செய்வதும் கூட ஒரு தனிப்பட்டவரின் விருப்பின்பால்பட்டது. அப்படி இருந்த பொழுதிலும் ஒட்டுமொத்த ஊரின்/பிரதேசத்தின் (நாட்டின்) நன்மை கருதி இந்த பிராந்திய கட்சிகளை தவிர்த்தே நம் அரசியல் பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளும் நமது கட்சிகளாக இருப்பதால் இக்கட்சிகளில் அங்கத்துவம் பெறுவதும், அக்கட்சிகள் சார்பாக தேர்தல்களில் போட்டியிடுவதும் ஒருவருக்குள்ள யாரும் பறித்துவிட முடியாத உரிமை. இந்த அடிப்படையில் பாயிஸ் அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்டியின் பிரதேச/தொகுதி அமைப்பாளராக இரு(ந்தார்)கின்றார் அவ்வளவுதான். அதேபோல் வேறுயாரும் வேறொரு கட்சியின் அமைப்பாளராக இருப்பதை யாரும் எவ்வகையிலும் தடுக்க முடியாது. இது ஜனநாயகத்தின் அத்திவாரம். ஆனால் நம் ஊர்/பிதேச அரசியலைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்பது இன்னும் வளர்ச்சி நிலையில் இல்லை என்பது கண்கூடு. இதற்கான அண்மைய புத்தளம் சம்பவம்(PPAFக்கும்- நீலப்படையின் உப-படைக்கும் இடையிலான சிறு அடிதடி) ஒரு சாட்சி. ஆகவேதான் நமக்குள், நம் ஊர் அரசியலுக்குள் இருக்க வேண்டிய ஜனநாயகத்தை பற்றி கவலை கொள்ளாமல் மற்றைய எல்லா இடத்திலும் நாம் அதை எதிர்பார்க்கின்றோம், தேடுகின்றோம்.
தேசிய அரசியலில் ஒரு முன்னைநாள் உதவி அமைச்சராக இருந்த போதும், நகர சபை தலைவராக இப்போது இருக்கும் போதும் பாயிஸ் அவர்கள் இப்பிரதேசத்துக்காகவும், நகருக்காகவும் ஆற்றிய, ஆற்றும் சேவைகள் அவரின் கடமையின் பால்பட்டது என்றாலும் அதற்கான பாரட்டுக்கள் அவருக்கும் அவருடன் கூடி வேலை செய்தவர்களுக்கும் உரியவை. இந்த அடிப்படையில் அவர் ஒரு செயல் வீரன் என்றும் சொல்லலாம். ஆனாலும் செயலில் வீரம் மாத்திரம் ஒரு அரசியல் வாதியை நிலைத்து நிற்கச்செய்வதில்லை. வெற்றியிலும், தோல்வியிலும் நிலைத்து நிற்கவேண்டும் என்ற ஓர் ஓர்மம் இருக்கவேண்டும். கூடவே அரசியல் விவேகமும், ராஜதந்திர செயல்பாடுகளும், பணிவும், செவிமடுக்கும் தன்மையும், சமதன்மை இழக்காத நேர்மையும் தேவை. இவை இல்லாத போது தோல்வியை சந்திப்பதும், அதைவிட மோசமாக மக்களால் நிராகரிக்கப்படுவதும் நடந்தேறும். வெற்றி தோல்வி என்பது சாதாரண வாழ்க்கையில் போன்று அரசியல் வாழ்விலும் ஏற்படுவது சாதாரணம். ஆனால் மக்களால் நிராகரிக்கப்படல் என்பது ஒரு சாதாரண விடயமல்ல.
அண்மையில் வெளிவந்த இணையத்தள செய்தியூடாக நகரசபையின் தற்போதய நடப்பு காலம் முடிவடைந்தவுடன் பாயிஸ் அவர்கள் அரசியலில் இருந்து முற்றுமுழுதாக ஓய்வெடுக்கப் போவதாக அறியக் கிடைத்ததும் ஏன் இவ்வளவு சீக்கிரமாக? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. இது அரசியலில் ஏற்பட்ட சாதாரண தோல்வியை சந்திக்க முடியாத ஓர்மமின்மையா அல்லது மீள்கட்டி எழுப்ப முடியாத மக்களின் நிராகரிப்பா என்பதை கண்டறிய வேண்டிய தேவையையும் அது உணர்த்தி நிற்கின்றது.
நாட்டின் எதிர்கால நன்மை கருதி மஹிந்த ராஜபக்க்ஷவை கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்க வேண்டிய ஒரு கடமை நாட்டு மக்களுக்கு இருந்தது, அதை மிகத் திறம்படச் செய்தார்கள் வாக்காளர்கள். அதாவது சந்தர்ப்பம் ஒரு தேவையை உணர்த்தி நிற்கும் போது அரசியல்வாதிகளை விட மிக நிதானமாக சிந்தித்துச் செயல்படக் கூடியவர்கள் வாக்காளர்கள் என்பதை ஐயந்திரிபற நிரூபித்துவிட்டனர். இது அரசியலில் ஏற்பட்ட அதிசயம் அல்ல. ஆனால் ஆசியாவில் ஏற்பட்ட ஆச்சர்யம் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
காரணம் ராஜபக்க்ஷ மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் தன் மகனை ஜானாதிபதியாக்கும் நிலைமையை செயற்கையாக ஏற்படுத்த எடுத்த கடைசி முயற்சிக்கு ராணுவமும், சட்டமா அதிபரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதனால் ஆகும். ராஜபக்க்ஷவின் அரசியல் தப்புக் கணக்குகள் சரியான நேரத்தில் சரியான முறையில் பல தரப்பினரின் ஒருமித்த நிலைப்பாட்டினால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஜானாதிபதி தேர்தலில் மட்டும்தான் நடக்க வேண்டும் என்பதல்ல, பிராந்திய, ஊர்மட்ட அரசியலிலும் இதுதான் உண்மை. மக்களுக்காக சேவை செய்ய வந்தோர் மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யாவிட்டால் முடிவு இப்படித்தான். யாரும் பலாத்காரமாக நான் தான் உங்களுக்கு சேவை செய்வேன் என்று அடம் பிடிப்பதை மக்கள் அதிக காலம் பொறுக்க மாட்டார்கள் என்பது இதன் படிப்பினை. போர் காலத்துக்கு உகந்த ஜனாதிபதி மஹிந்த என்று நிரூபித்தால் அதன் பொருள் அவர் அமைதி காலத்துக்கும் பொருத்தமானவர் என்பதல்ல. அப்படியாயின் அதையும் அவர் நிரூபித்திருக்க வேண்டும். இதுவும்கூட தேசிய அரசியலுக்கு மட்டுமல்ல என்பதை பிராந்திய, ஊர் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த விடயம்தான் பாயிஸ் அவர்களின் அரசியலில் இருந்து ஒதுங்குவதென்ற முடிவுக்கு அடிப்படை என்றால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அடுத்த பாரளுமன்றத் தேர்தலில் பாயிஸ் அவர்களுக்கான சந்தர்ப்பம் அவராலேயே தவறவிடப் பட்டுள்ளது. இதற்கான காரணம் மஹிந்த, பசில், நாமல் ராஜ பக்ஷகளின் மேலுள்ள அதீத பற்றினால் நாட்டு மக்களின் அரசியல் நிலைப்பாடை சரியாக நாடிபிடித்து பார்க்க முடியாமல் இருந்ததும், மஹிந்த ஆட்சியில் நிகமும் சதையுமாக இருந்த மைத்திரிபால சிறிசேனவே அவரை விட்டு விலகி அதுவும் பிரதான எதிர்கட்சியுடன் “நாட்டின் நலன்” என்ற ஒற்றை காரணத்துக்காக கூட்டு சேர்ந்த சம்பவமும்,
அதன் பின்னால் பல தரப்பு அரசியல் வாதிகளும் இன்றைய ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவாக செயல்பட்ட போதும் கூட “சமூக நலன்” என்று இல்லாவிட்டாலும் ” நாட்டு நலன்” என்ற போர்வையிலாவது தன் விசுவாசத்தை மைத்திரிக்கு கொடுக்க தீர்மானிக்காததுமாகும். இருந்த நல்ல சந்தர்பத்தைக் கூட “மின்னல்” நிகழ்வில் கலந்து கொண்டு, அங்கே அஸாத்சாலியின் நியாயமான கேள்விகளுக்குக் பதில் கொடுக்கமுடியாமல் தன் உடல் மொழிமூலம் (body-language) உண்மைகளாய் மறைக்க முனைந்தும்மாகும். இது பாயிஸ் அவர்களின் தேசிய அரசியலின் (அனுபவ) முதிர்ச்சி இன்மையை மிகத்தெளிவாக் காட்டியது என்பது இன்னுமொரு விடயம். இருந்த போதிலும் ராஜபக்ஷ போல் பாயிஸ் அவர்கள் புத்தளம் நகர/பிரதேச மக்களால் இன்னும் நிராகரிக்கப்படவில்லை. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்கமுடியாது அல்லது அப்படி (மைத்திரிக்கு புறம்பான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியூடாக) இறங்கினாலும் தோல்வியடைவதற்கான சந்தர்ப்பம் அதிகம் உள்ளதால் அதுவே பாயிஸ் அவர்களின் நிரந்தர தோல்வியாகக் கருத முடியாது. ஆகவே மாறும் களநிலவரம் ஒன்றுக்காக பொறுமையாக இருக்க வேண்டிய தேவை பாயிஸ் அவர்களுக்கு உள்ளதை அவர் மறக்க முடியாது.
பாயிஸ் அவர்கள் அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகக் கூடாது என்பதன் பொருள் இந்த ஊரில்/பிரதேசத்தில் அரசியல் செய்ய யாரும் இல்லை என்றோ அல்லது இருக்கும் எவருக்கும் அரசியல் செய்யத் தெரியாததென்றோ அல்லது இனி யாரும் அப்படி உருவாக முடியாதென்றோ இல்லை. இதை உறுதி செய்யவதாகவே PPAF (Puttalam District Political Awareness Forum) என்ற அமைப்பின் வருகை அமைந்துள்ளது. இந்த அமைப்பின் இதுவரையிலான கருத்துப்படி புத்தளம் பிரதேச மக்களை அரசியல் விழிப்புணர்ச்சிகொள்ளச்செய்வதே நோக்கமாம். அரசியல் விழிப்புணர்ச்சி என்பது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் ஓரளவு வளர்ச்சியடந்துள்ளதை காணக் கூடியதாக இருந்தது( இது வெறும் “முஸ்லீம்” உணர்சி இல்லாமல் ஆட்சி மாற்றம் ஒன்றின் அவசியம் கருதியும் என்றால்). ஆகவே இந்த விழிப்புணர்ச்சிடயூட்டும் செயல்பாடுகளோடு அரசியல் தெளிவை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்த வேண்டும். இதில் முக்கியமானது மக்களை தங்கள் கருத்துச்சொல்லும் உரிமை தொடர்பாக உணரச்செய்வதும், மற்றவரின் கருத்து சொல்லும் உரிமையை மதிக்கப் பழக்குவதும், திறந்த அரசியல் கருத்தாடல்களை மக்கள் மத்தியிலே ஊக்குவிப்பதும், அதற்கான ஊடக வசதிகளை ஏற்படுத்துவதும் என்ற பல விடயங்களும் அடங்கும். அரசியலில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று பாயிஸ் அவர்கள் முடிவெடுத்தால் இவை பற்றி இனியாவது அவர் யோசிப்பது முக்கியமாகும்.
நாட்டின் அரசாங்கங்களை மாற்றியமைக்கும் வல்லமை ஊடகங்களுக்கு உண்டு. அந்தவகையில் நம் ஊர்/பிரதேச அரசியல் போக்கை மாற்றியமைக்கும் வகையில் உள்ளூருக்குள் இருக்கும் இணையத்தளங்களால் இயங்க முடியும். மேடை போட்டுதான் அரசியல் வழிகாட்டல் செய்ய வேண்டுமென்பதல்ல. இதை இணையதளங்களால் மிக இலகுவாகவும் நேர்த்தியாகவும் செய்யலாம். இப்போது நம் முன்னுள்ள கேள்வி இதற்கான சூழ்நிலை புத்தளத்தில் நிலவியதா, நிலவுகிறதா என்பதே. ஊடகக்காரர்கள் தயாராய் இருந்தாலும், பாயிஸ் அவர்கள் வைத்திருந்த அதிகாரங்கள், அதை முதலீடாக வைத்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல் அவர் நடந்து கொண்ட விடயங்கள் ஊடகக்காரர்களை பயம் கொள்ள வைத்தற்கான அறிகுறிகள் மிகத் தெளிவாக உள்ளன.
இன்றைய ஊடகங்களின் நம்மூருக்கான வருகைக்கு முன்னரே ஒரு ஊடகத்தின் தேவைப்பற்றி பாயிஸ் அவர்களின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தேன். அதாவது 2000ம் ஆண்டில் (பாயிஸ் அவர்களுடனான அவரின் முன்னைநாள் தலைமையகத்துக்கான கொழும்பு பயணத்தில்) நம்மூருக்கு வானொலி ஒன்றின் அவசியம் பற்றி அவரிடம் கூறினேன். காரணம் அரசியல் விழிப்புணர்வும், தெளிவும் புத்தளம் மக்களிடையே ஏற்படுத்தப்படுவதற்கான தேவை இருந்ததினாலாகும். 2014 வரை பாயிஸ் அவர்களுக்கிருந்த அரசியல் செல்வாக்கில் அப்படி ஒரு வானொலியை மிகத்திறம்பட வளர்தெடுத்திருக்க முடியும். ஆனால் 14 வருடங்கள் வீணாக்கப்படுள்ளதாகவே இப்போது யோசிக்கத் தோன்றுகிறது . பாயிஸ் அவர்களினால் இத்தகைய முயற்சி ஒன்றின் அவசியம் உணரப்படாததின் பிரதிபலிப்பு அன்-நூர் என்ற சமூக வானொலி உதயமாகி சில சட்ட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதிருந்தனால் முடிவுக்கு வந்ததை நாம் அறியக் கூடியதாக இருகின்றது.
நிற்க, சம்பிரதாய பூர்வமான காரியாலய திறப்புடன் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள இந்த PPAF தனது உடனடி அரசியல் நடவடிக்கையாக (பாயிஸ் அவர்கள் தொடர்ந்தும் அரசியல் இருக்க தீர்மானித்தால்) என்ன செய்யப் போகிறது? அல்லது பாயிஸ் இந்த அமைப்பு தொடர்பாக ( இந்த இயக்கம் பாயிஸின் நடத்தைக்கு எதிரான மாற்றீடை தேடுகிறது என்றால்) என்ன செய்யப் போகின்றார்? எதிரும் புதிருமாக செயல்பட்டு வாக்காளர்களையும் குழப்பி தொடர்ந்தும் நாம் அரசியல் அனாதைகளாக (நமக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லை என்ற அர்த்தத்தில் இல்லை) இருக்க செய்யப் போகின்றார்களா?
இந்த கேள்விக்கான காரணம் PPAF அமைப்பில் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் ஊடுறுவல் இருப்பதாக வெளிவந்துள்ள முகநூல் தகவல். இத்தகவல் உண்மையாயின் இது புத்தளம் மக்களுக்கு எதிராக எழுப்பப்படும் ” அபாயக் குரல்” என்றே என்னால் கணிக்க முடிகின்றது. அதாவது ஏற்கனவே PMGG(People’s movement for good governance), NFGG(National front for good governance) என்ற போர்வையில் ஜமாத்தே இஸ்லாமியுடன் தொடர்பு உள்ளவர்கள் அரசியல் களமிறங்கியுள்ளதையும் நம்மூர் PPAF யும் சேர்த்து பார்க்கும் போது இந்த கூட்டு நம்மூருக்கு மட்டுமல்ல நம் நாட்டு முஸ்லீம்களுக்கும் அரசியல் ரீதியான சுமையாகவே இருக்கப்போகின்றார்கள், என்ற என் எதிர்வுகூறலில் உண்மை உள்ளது என்று பாயிஸ் அவர்களும் நம்புவாராயின் மறைமுகத் திட்டத்துடன் செயல்படும் இந்த இயக்கத்தில் இருந்து புத்தளம் மக்களை எப்படி காப்பாற்றப் போகின்றார்?
PPAF வின் செயல்பாடுகள் மிகவும் தெளிவானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்குமானால் அதில் நமக்கு உடன்பாடு உண்டு. இவர்கள் வெறுமனே புத்தளத்துக்கு ஒரு (முஸ்லீம்) பிரதிநிதி புத்தளத்தில் இருந்து என்ற நிலைப்பாட்டை மாத்திரம் இவர்களின் ஆகக் கூடிய அரசியல் செயல்பாடாகக் கொள்வார்களேயானால் அல்லது அதைவிட ஆபத்தான “முஸ்லீம்” அரசியல் கலாச்சாரம் (இச்சந்தர்ப்பத்தில் இதைவிட வேறு வார்த்தைகளால் இதை விபரிக்க முடியாது) என்ற ஒன்றை உருவாக்கும் கற்பனையில் செயல்படுவார்களேயானால் இந்த அமைப்பு ஆரம்பித்த வேகத்திலேயே கலைந்துவிடுவது நம் அனைவருக்கும் பயன்மிக்கது.
ஆக, பாயிஸ் அவர்கள் இந்த PPAF அமைப்பினருடன் நேர்மையான, வெளிப்படையான, ஆக்கபூர்வமாக அரசியல் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவேண்டும். பாயிஸ் அவர்களுடன் எப்போதும் கூட இருப்பவர்கள் துறைசார்ந்தோராக, புதிய யோசனை சொல்வர்களாக, பயமின்றி தம் கருத்தை உரையாடலுக்கு உற்படுத்துவோராக இருக்க வேண்டுமே அல்லாமல் பாயிஸ் அவர்களின் சொல்லுக்கு எப்போதும் தலையாட்டுவோராக மட்டும் இருப்பது அவரின் அரசியல் வாழ்வுக்கு ஆபத்தானது. தலையாட்டுதல் என்பது பாயிஸ் அவர்களின் முடிவின் சரி பிழைகளை, சாதக பாதங்களை என்றுமே அவருக்கு கற்றுத்தராது. நான் சிந்திப்பது சரி, ஆகவே நான் செய்வது சரி என்ற நிலைக்கு தள்ளிவிடும். அது அரசியல் தோல்யின் தெளிவான அறிகுறி.
புத்தளத்துக்கு ஒரு உறுதியான, நேர்மையான , செயற்திறன் உள்ள ஒரு அரசியல் தலைமை தேவை. அதை வழங்க யாருக்கு திறமையுள்ளதோ, யாரின் மேல் மக்கள் நம்பிக்கை கொள்ளமுடியுமோ அவர்களின் வருகை வரும் பொது தேர்தலுக்கும் முன்னால் நிகழவேண்டும்.
நன்றி:Puttalam Online
-ஆசிரியர் கருத்து -
கற்பிட்டி பிரதேச சபைக்கு கற்பிட்டியில் இருந்து தலைவர் ஒருவரை வென்றெடுக்க வேண்டும் என்று முயற்சிக்கும் தரப்பினருக்கு, சகோதரர் நிஸ்தார் அவர்களின் கட்டுரையில் வழிக்காட்டல்கள் உண்டு.
சிந்திப்போம் செயற்படுவோம்

0 Comments