Subscribe Us

header ads

காதலர் தினம் – சொல்ல மறந்தவைகள்

எஸ்.அஸ்ரப்கான்


பெப்ரவரி 14 வந்தாலே உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இளைஞர்கள் மத்தியில் ஒரு சிறப்புமிக்க நாளாக கொண்டாடப்படுவதும் இளவயது ஆண், பெண் இருபாலாரும் அன்பு மிக்க நாள் என்ற போர்வையில் பல அசிங்கங்களுக்கு களமமைப்பதுமாக இந்நாள் அமைந்துவிட்டது. 

காதலர்கள் கொண்டாடுவது காமம் கொண்ட தினமாகும். உலகிலே எவ்வளவோ சிறப்புமிக்க தினங்கள் நினைவு கூரப்படுகின்ற நிலையில் இது சமூகத்தின் முதுகெலும்புகளான இளைஞர்கள் காலாகாலம் சீரழிந்து சின்னாபின்னமாகும் ஒரு தினமாகும். இதனை இளைஞர்களுக்கான சாபக்கேடான ஒன்றாக குறிப்பிட்டாலும் விமர்சிப்பதற்கில்லை. 

இத்தினம் இளைஞர்களுக்கு மத்தியில் வரவேற்கப்பட்டாலும் இவர்களது விருப்பு வெறுப்புக்களை இனம்கண்டு கட்டுப்பாடான ஒருநிலையை இளமைப்பருவத்திலிருந்து ஏற்படுத்த தவறும் பெற்றோரும், பாதுகாவலர்களும் காதல் என்ற வலைப்பின்னலுக்கு பச்சைக்கொடி காட்டும் நிலையே பெரும்பாலும் காணப்படுகிறது. வெளிப்படையாக பெற்றோரும், பாதுகாவலர்களும் காதலுக்கு எதிர்ப்பு காட்டுவதாக இருந்தாலும் மறைமுகமாக உண்மையில் இளமைப்பருவத்தில் தமது பிள்ளைகள் காதல் வயப்படுவதற்கு பெரும் பங்களிப்பு வழங்கப்படுகிறது. 

தத்தமது தகுதி, அந்தஸ்து, பொருளாதார நிலைகளுக்கேற்ப தமது வாரிசுகளுக்கு தமது மனம்போன போக்கில் இச்சைகளுக்கு அடிமையாகி வாழ வழியமைக்கும் நிலையை பெற்றோர்கள் ஏற்படுத்திவிடுகின்றனர். இதனால் தமது பிள்ளைகள் கெட்டவர்களாக மாறுவதை ஒரு கணம் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது. தமது பிள்ளைகள் பாடசாலைப்பருவம் முதல் பக்குவமான திருமண பந்தத்தில் இணையும்வரை அவர்கள் நேரிய வாழ்வுக்கு கொண்டு செல்வது அவர்களுக்கு பெற்றோரின் கண்காணிப்புடன் கூடிய கல்வி வளமும் வழங்கப்படுவதே சிறந்ததாகும். 

இதனை புறந்தள்ளி தமது பிள்ளைகளுக்கு கையடக்க தொலைபேசி என்கிற தொல்லைபேசிகளையும், கணிணி மயமான வாழ்க்கை முறையினையும் பெற்றுக்கொடுப்பதானது உண்மையில் அவர்களுக்கு அதனால் இருக்கின்ற நன்மைகளைவிட தீமைகளே மிகைத்து காணப்படுகிறது. இதனை பெரும்பாலான பெற்றோர்கள் அறிந்துகொள்வதில்லை. அவர்களால் பிற்காலத்தில் வாழ்க்கையைத் தொலைத்த தமது பிள்ளைகளை கண்டுகொள்வதும் அழுதுபுலம்புவதும்தான் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆபத்தை இளவயதில் இளைஞர்களும் ஏன் முதியவர்களான பெற்றோர்களும் கூட அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள். 

இதற்கு விதிவிலக்காக நல்ல பெற்றோர்களும் இருக்கவே செய்கின்றார்கள். நல்ல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நல்லமுறையில் வளர்க்கிறார்கள். ஆனால் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை வளர்க்கிறோம் என்ற பெயரில் சில அசிங்கங்களை செய்கின்றனர். 

தந்தை ஒரு குடிகாரராக இருந்தால் அவருடைய மகன் தந்தையே இந்த செயலில் ஈடுபடும்போது நானும் செய்தால் என்ன? என்று சிந்திக்கிறான்! தாய் சினிமா திரையரங்குகளாக தமது வீட்டை ஆக்கிக்கொள்கின்றார். அதனுாடாக ஆபாச காட்சிகளை பார்த்து ரசிப்பவளாக இருந்தால் அவளுடைய மகளோ இயல்பாகவே தாயின் நிலையில் தன்னையும் ஆக்கிக்கொள்கின்றாள். நாகரீகமான வாழ்க்கை என்ற போர்வையில் மேற்கத்தேய சதிவலையிலான வாழக்கை முறையை வாழ்ந்து கொண்டும் இருக்கும்போது குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. 

சில வீடுகளில் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், பெற்றோருக்கும் தனித்தனி உறைவிடம் இருக்கும். இவ்வாறு தனித்தனியாக அறைகள் இருப்பது தவறான ஒன்றல்ல. ஆனால் அந்த ஒவ்வொரு அறைகளிலும் என்ன நடைபெறுகிறது என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும். 

தனித்தனியாக ஒவ்வொரு தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து தமது பிள்ளைகளின் பொழுது போக்கிற்காக பெற்றோரே வழியைமைக்கின்றனர். இரவில் பெற்றோர் தனியாக உறைவிடங்களுக்குள் இருக்கின்ற நிலையில், மற்றொருபுறம் பிள்ளைகளும் தங்கள் தனி அறைக்குள் முடங்குகின்றனர். பெற்றோர் தம் பிள்ளைகள் உறங்குகிறார்கள் என்றுதான் எண்ணுகிறார்கள் ஆனால் அதே வேளையில் ஷைத்தானோ பிள்ளைகளின் உள்ளத்தில் தொலைக்காட்சி ஆபாசத்தை பார்க்க தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறான். இதனால் இளம் வயதில் ஆசைகளை தணிக்க தன் துணையை தேடி இளம்பிள்ளைகள் அலைகின்றனர். இங்குதான் இளைஞர்களின் அழிவு ஆரம்பமாகின்றது. 

நமது குழந்தைகள் கல்லூரியில் படிக்கிறார்கள் என்று பெற்றோர் பெருமையாக பேசிக்கொள்வார்கள். பாடசாலைகள் ஒழுக்க விழுமியங்களை பேணிப்பாதுகாப்பதில் பெரும் சிரத்தை கொண்டு செயலாற்றுகின்றது. ஆனாலும் மாணவப்பருவத்தில் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் நேரம் தவிர உள்ள நேரங்களில் பெரும்பாலான மாணவர்கள் காதல் வயப்படுவதற்கும், இதர கெட்ட செயல்களில் தங்களை ஈடுபடுத்தவும் பெரும் வாய்ப்புக்கள் இருக்கின்றது.

காதலர் தினம் என்னும் காம இச்சையர்கள் தினத்தில் உங்கள் குழந்தைகளின் எதிர்கால நலனுக்கு நீங்கள் செய்ய வேண்டியவை ஏராளம் இருக்கின்றது. அவைகளை இனம்கண்டு காதலர் தினம் என்ற போர்வையில் காமப்பிசாசுகள் தினத்தை கொண்டாட நினைக்கும் இளைஞர் சமூகத்திடமிருந்து எமது பிள்ளைகளை பாதுகாக்க முன்வர வேண்டும். 

இஸ்லாமிய அடிப்படையில் நோக்கும்போது இவ்வாறான சீர்கேடுகளை ஒழிப்பதற்காகவே பல்வேறு ஒழுக்க விழுமியப்பண்புகள் எடுத்துரைக்கப்படுகின்றது. அதுபோன்று சமூகச் சீர்கேட்டை எந்த மதமும் அங்கீகரிக்கவில்லை. 

எனவேதான் இந்த பெப்ரவரி -14 என்ற நாளை இளைஞர்களுக்கான சாபம்மிக்க நாளாக உணர்ந்து புறந்தள்ளுவோம். அதனுாடாக வீட்டிற்கும், நாட்டிற்கும் சிறந்த நற்பிரஜைகளை உருவாக்க முனைவோம்.

Post a Comment

0 Comments