மன்னாரிலிருந்து புத்தளத்தின் ஊடாக கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார்
பயணிகள் பஸ்ஸின் மீது ஆராச்சிக்கட்டு பகுதியில் வைத்து இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலின் போது ஒருவர் காயமடைந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது காயமடைந்த மதவாச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இன்று அதிகாலை குறித்த தனியார் பயணிகள் பஸ் ஆராச்சிக்கட்டு பிரதேசத்திற்கு அருகில் வந்த போது அங்கு நின்றுள்ள அடையாள தெரியாத சிலர் பஸ்ஸின் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதாகவும், அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் பஸ்ஸின் சாரதி சிலாபம் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த கல்வீச்சு தாக்குதலின் போது பஸ்ஸின் முன் கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் சிலாபம் ஊடாகப் பயணிக்கும் தூரப் பிரதேச பயணிகள் பஸ் மீது மாதம்பை, மஹவௌ போன்ற பகுதிகளில் வைத்து இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனனர்.


0 Comments