Subscribe Us

header ads

67ஆவது சுதந்திர தின வைபவ நிகழ்வில்

மீனோடைக்கட்டு நிருபர்.


எமது தாய்நாட்டின் சுதந்திர போராட்டங்களில் முஸ்லிம்களுக்கும் பங்குள்ளது இதனை மறுத்தோரிலிருந்து இறைவன் முஸ்லிம்களை பாதுகாத்துவிட்டான் அரசியல் குரோதங்களால் எமது சமூகம் பிரிப்போரையும் இறைவன் தண்டிப்பான் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.

இன்று (04) காலை கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற 67ஆவது சுதந்திர தின வைபவத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்த பின்னர் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு பறக்கத்துள்ளாஹ் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை சிங்கள மன்னர்களும், தமிழ் மன்னர்களும் ஆட்சி செய்த காலம் தொட்டு வியாபரத்தில் ஈடுபட்டு வந்த முஸ்லிம்கள் இம்மன்னர்களுக்கு உதவியாகவும், மன்னர்களுக்குள் பிணக்குகள் ஏற்படும்போதெல்லாம் சமாதானியாகவும் வாழ்ந்துள்ளார்கள்.

1505 ஆம் ஆண்டு நாட்டுக்குள் போத்துக்கேயர் ஆக்கிரமிக்கின்ற போது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முதலில் முஸ்லிம்களை கொழும்பிலிருந்து வெளியேற்றினார்கள். போத்துக்கேயரால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அக்காலகட்டத்தில் கண்டியை ஆட்சி செய்த செனரத் மன்னர் வரவேற்று பரிபாலித்துள்ளான்.

நாட்டில் நாலாபுரம் பிரித்தானிய படையெடுப்புக்கள் ஏற்படுத்தப்பட்ட போது கிழக்கின் கரையோரப்பகுதிகளில் வந்த போது அப்படைகளை எதிர்த்து நாட்டை காப்பதற்காக கல்முனை, மருதமுனை, சம்மாந்துறை, ஏறாவூர், மூதூர் பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் போராடியுள்ளார்கள். 1815ம்ஆண்டு கண்டி இராட்சியத்தை பிரித்தானியர் முழுமையாக கைப்பற்றியதிலிருந்து முழு நாடும் அவர்களின் ஆளுகைக்குள் வந்தது. இக்காலத்தில் அவர்களை எதிர்த்துப்போராடிய முஸ்லிம் இளைஞர்களை தேசதுரோகிகள் என பிரகடணப்படுத்தி தண்டனை வழங்கப்பட்டது.

1948 ஆம்ஆண்டு நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்று சில காலங்களின் பின்னர் மீண்டும் நாட்டுக்குள் ஆயுதப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டான. இதனை முறியடிக்கப்பட்டு 30 ஆண்டின் பின்னர் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்த வெற்றியில் நாடே கொண்டாடியது.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான பள்ளிகளின் மீதான தாக்குதல், முஸ்லிம்களின் ஆடை மற்றும் கலால் உணவு மீது எதிர்ப்பினை தெரிவித்து தொடர்ச்சியாக முஸ்லிம்களை கொடுமைப்படுத்திய பொதுபலசேனா போன்ற இனவாதக்குழுக்களை கண்டிக்காத அரசை மாற்ற வேண்டும் என நாட்டில் பெரும்பான்மையான மக்கள் ஆர்வத்தோடு செயற்பட்டார்கள்.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலில் இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாக்களித்ததன் பலனாக ஆட்சி மாற்றத்தினை அடைந்துள்ளோம். இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள ஆட்சியில் இணைந்துள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளும், அரசியல் வாதிகளும் தமது சமூகத்திற்கும் நாட்டிற்கும், பிரதேசத்திற்கு என்னென்ன கைங்கரியங்களை செய்யப்போகின்றார்கள் என்ற அவா வாக்களித்த ஒவ்வொருவரின் மனதிலும் காணப்படுகின்றது.

தேசத்தை கட்டியெழுப்ப பங்காளிகளாக இருக்கும் இவ்வரசியல் வாதிகளுக்குள் காணப்படும் அதிகார குரோதங்களின் மூலம் சமூகம் பெறப்போகின்ற நன்மைகளில் பாதிப்பு ஏற்படாதவகையில் இருக்க வேண்டும்.

எமது தாய்நாட்டின் சுதந்திர போராட்டங்களிலும், ஆட்சி மாற்றங்களிலும் முஸ்லிம்களுக்கும் பங்குள்ளது இதனை மறுத்தோரிலிருந்து இறைவன் முஸ்லிம்களை பாதுகாத்துவிட்டான். அரசியல் குரோதங்களால் எமது சமூகம் பிரிப்போரையும் இறைவன் தண்டிப்பான் என்றார்.

கல்லூரியின் அதிபர் அப்துல் றஸாக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments