சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 47 லட்சம் பேருக்கு சலுகை வழங்கி ஒபாமா பிறப்பித்த உத்தரவுக்கு அமெரிக்க கோர்ட்டு அதிரடியாக தடை பிறப்பித்துள்ளது. இந்த தடைக்கு எதிராக மேல்–முறையீடு செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஒபாமா உத்தரவு
ஒபாமா உத்தரவு
அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக குடியிருக்கும் 4½ லட்சம் இந்தியர்கள் உள்பட ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினரை அங்கிருந்து வெளியேற்றும் நிலை உருவானது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அங்கு சட்ட விரோதமாக குடியேறியவர்களில் 47 லட்சம் பேருக்கு சலுகை காட்டும் விதமாக, சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கி கடந்த நவம்பர் மாதம் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்க பாராளுமன்றத்தின் விருப்பத்துக்கு மாறாக அமைந்த இந்த உத்தரவு, பழமைவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
ஒபாமாவின் அதிரடி உத்தரவின் மூலம், அமெரிக்காவில் வந்து குடியுரிமை பெற்றவர்களின் பெற்றோர்கள், சட்டப்படி நிரந்தரமாக தங்குகிற உரிமை பெற்றவர்களின் பெற்றோர்கள், சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அவர்கள் தற்காலிகமாக அமெரிக்காவில் வசிப்பதை தொடரலாம். அமெரிக்காவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வந்து குடியேறியவர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும் என தகவல்கள் வெளியாகின.
26 மாகாணங்கள் வழக்கு
இந்த நிலையில் ஒபாமாவின் உத்தரவை எதிர்த்து அமெரிக்காவில் 26 மாகாணங்கள் ஒன்று திரண்டு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கை நீதிபதி ஆண்ட்ரூ ஹேனன் விசாரித்தார்.
அப்போது வழக்கை தொடுத்த மாகாணங்கள், ‘‘அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவானது, அரசியல் சட்டம் அவருக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை மீறிய செயல் ஆகும். அமெரிக்க அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பிரிவு மீறப்பட்டுள்ளது. இந்த உத்தரவினால் நாட்டில் சட்டம்–ஒழுங்கை அமல்படுத்துவதற்கும், சுகாதாரம், கல்வி திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் கூடுதல் முதலீடுகள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். எனவே ஜனாதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று தங்கள் வழக்கில் கூறின.
தடை உத்தரவு
இதையடுத்து ஜனாதிபதி ஒபாமாவின் உத்தரவை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கூறி நீதிபதி ஆண்ட்ரூ ஹேனன் நேற்று முன்தினம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவு குறித்து வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்கையில், ‘‘ஜனாதிபதியின் உத்தரவு சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டதல்ல. குடியுரிமை விதிகளை அமல்படுத்துவதில் முன்னுரிமைகளை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று அமெரிக்க சுப்ரீம்கோர்ட்டும், பாராளுமன்றமும் கூறி உள்ளன. ஜனாதிபதி தனது அதிகாரத்தை சரியாகவே பயன்படுத்தி உள்ளார்’’ என கூறியது.
மேல்–முறையீடு
கோர்ட்டு உத்தரவை டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரேக் அபோட் வரவேற்று டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘அமெரிக்க மக்களின் விருப்பத்துக்கு புறம்பாக செயல்பட ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சி, வெற்றிகரமாக தடுத்து
நிறுத்தப்பட்டுள்ளது’’ என கூறி உள்ளார்.
கோர்ட்டின் தற்காலிக தடை உத்தரவை எதிர்த்து, நியூ ஆர்லியான்ஸில் உள்ள அமெரிக்க மேல்–முறையீட்டு சுற்று நீதிமன்றத்தில் ஒபாமா அரசு மேல்–முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


0 Comments