தொருமுனையிலும் பாடசாலை நேரங்களின் இடையே திருட்டுத்தனமாக கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் முதல், விடுமுறை நாட்களில் மைதானத்திலும் வெற்றுக்காணிகளிலும் விரைவாக விளையாடும் இளைஞர்கள் முதல் உலகில் வாழும் மக்கள் தொகை யால் நேசிக்கப்படும் இரண்டாவது பெருவிளையாட்டான கிரிக்கெட்டின் உலகமே ஒன்றிணைந்து கொண்டாடும் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
வண்ணமயமான வர்ணக்கொடிகள். மாயாஜாலம் காட் டும் அலங்கார மின்விளக்குகள், விநோதமான உருவ பொம்மை கள், கண்கவர் சித்திரங்கள், மனதைக் கொள்ளையடிக்கும் பாரிய புகைப்படங்கள் ஒருபுறமிருக்கையில் மறு புறத்தில் சாதாரணமாகவே மக்கள் நெருக்கடி மிக்க நகரங்களான அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன், சிட்னி, அடிலெய்ட், பிரிஸ்பேர்ன், ஹோபாட் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளும் நியூஸிலாந்தின் ஒக்லண்ட், கிறிஸ்ட்சேர்ச், ஹமில்டன், நேப்பியர் என ஏனைய பகுதிகளும் உள்நாட்டு பிரஜைகளுக்கு அப்பால் உலகின் பல பாகத்திலிருந்தும் பிரவேசித்துள்ள கிரிக்கெட் இரசிகர் வெள்ளத்தால் நிரம்பிவழிந்து கொண்டிருக்கின்றது. முழு அவுஸ்திரேலிய கண்டமுமே உலகக் கிண்ணத்தொடர் ஆரம்பமாகவுள்ளநிலையில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரானது நேசிக்கும் நெஞ்சங்களை சிலிர்க்கவைத்து, பிரமிக்கவைத்து, பெருமை கொள்ள வைத்துள்ளதோடு இம்முறையும் அதேநிலை நீடிக்கும் என்பது நிச்சயம். மனித வாழ்வுடன் ஒன்றிப்போன விளையாட்டுக்களில் ஒன்றாக காணப்படும் கிரிக்கெட்டின் உணர்வுமிக்க உலக கிண்ண கிரிக்கெட் திருவிழாவின் 11ஆவது அங்கம் இம்முறை அவுஸ்திரேலிய, நியூஸிலாந்து நாடுகளில் இடம்பெறவுள்ளது. பரபரப்பு விறுவிறுப்பு குறைவில்லாத பலப்பரீட்சைகள் இரசிகர்களின் பசிக்கு விருந்தளிக்கவுள்ளதோடு சாதனைகளுக்கு குறைவில்லாததைப்போன்று எதிர்பார்ப்புக்கள் சிதையும் பட்சத்தில் வேதனைகளும் ஏற்படும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
இரண்டு குழுக்களில் 14அணிகள், 14 மைதானங்களில் 49போட்டிகள், அவுஸ்திரேலியாவின் பரந்த மைதானங்களில் துடுப்பாட்ட வீரர்களின் போராட்டம், நியூஸிலாந்தின் சிறிய மைதானங்களில் பந்துவீச்சாளர்களின் திண்டாட்டம், பந்து எல் லைக்கோடுகளை தொட்டுவிடமுதல் காற்றாய் பறந்து கட்டுப்படுத்துவது எப்படி? அதே பந்து புற்றரைகளை முத்தமிடுவதற்கு முன்னர் காப்பாற்றுவது யார்? அனைவருக்கும் ஒரே கனவு, ஒரே இலக்கு, அதனை அடைவதற்காய் ஒவ்வொரு நொடியும் மையங் கொள்ளும் அழுத்தங்கள், யாரை யார் வெல்வது? எவரெவரை எப்படி வீழ்த்துவது? ஒவ்வொரு அணுவிலும் ஓடிக்கொண்டிருக் கும் சிந்தனை, இறுதிவரையில் விட்டுக்கொடுப்பற்ற ஒரு பலப்பரீட்சையில் மோதிக்கொள்ள அனைவரும் இத்தருணத்திலேயே தயார்!
ஆம் பெரும் ஏற்பாட்டில் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரண்டு நாடுகளில் 11ஆவது உலகக் கிண்ணத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரில் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை, நடப்புச்சம்பியனான இந்தியா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், சிம்பாப்வே ஆகிய சர்வதேச டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளும் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய கத்துக்குட்டி அணிகளும் பங்கேற்கின்றன.
11ஆவது உலகக் கிண்ணத்தை தம்வசமாக்கி முத்தமிடுவதற்காக உள்ளங்கள் இணையும் காதலர் தினமாம் பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 29ஆம் திகதிவரை துடிப்புடன் மிடுக்காக போட்டியிடவுள்ள 14 அணிகளும் ஏ, பி என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குழு 'ஏ' யில் 7அணிகளும் குழு பி யில் 7அணிகளும் உள்வாங்கப்பட்டதுடன் ஒவ்வொரு அணியும் குழு நிலையில் மற்றைய அணிகளுடன் தலா ஒவ்வொரு தடவை மோதவுள்ளன. குழு நிலையில் இடம்பெறவுள்ள 42போட்டிகளும் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளன.
அதனடிப்படையில் குழு நிலையில் முதலிரு இடங்களுக்கு முன்னேறும் அணிகளுக்கிடையில் காலிறுதிச் சுற்று இடம்பெறவுள்ளது. மார்ச் மாதம் 18, 19, 20, 21ஆம் திகதிகளில் முறையே முதலாவது காலிறுதிப் போட்டி சிட்னி மைதானத்திலும் இரண்டாவது போட்டி மெல்பேர்ன் மைதானத்திலும் மூன்றாவது போட்டி அடிலெய்ட்டிலும் நான்காவது போட்டி வெலிங்டனிலும் இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து மார்ச் 24ஆம் திகதி ஒக்லண்டில் முதலாவது அரையிறுதிப்போட்டியும் மார்ச் 26ஆம் திகதி இரண்டாவது அரையிறுதிப்போட்டி சிட்னியிலும் இடம்பெறவுள்ளன. இப்போட்டிகளில் வெற்றிவாகை சூடும் இரு அணிகள் மெல்பேர்ன் மைதானத்தில் மார்ச் 29ஆம் திகதி இடம்பெறும் 11ஆவது உலகக் கிண்ணத்தொடரின் கிண்ணம் யாரு க்கு என்பதை தீர்மானிக்கும் தீர்க்கமான இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ளன.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன், சிட்னி, அடிலெய்ட், பேர்த், ஹோபாட், பிறிஸ்பேர்ன், கான்பரா ஆகிய மைதான ங்களில் இறுதிப்போட்டி உள்ளடங்கலாக 26போட்டிகளும் நியூஸிலாந்தின் ஒக்லண்டில், கிறிஸ்ட்சேர்ச், வெலிங்டன், நேப்பியர், ஹமில்டன், ருனெடின், நெல்சன் ஆகிய மைதானங்களில் 23ஆட்டங்களும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணத் தோற்றமும் பரிணாமமும்
உலக சனத்தொகையில் அதிக இரசிகர்களைக் கொண்ட விளையாட்டாக காணப்படும் கால்பந்துடனேயே பின்னிப்பிணைந்திருந்த உலகக் கிண்ணம் என்ற பதம் தற்போது கிரிக்கெட்டுடன் மிகமிக அந்நியோன்யமாகியுள்ளது. பதினாறாம் நூற்றாண்டு முதல் தற்போது வரை கிரிக்கெட் வரலாற்றுப் பாதையைக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக 1844ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தாலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்ட 1877ஆம் ஆண்டிலிருந்துதான் கிரிக்கெட்டின் அங்கீகரிக்கப்பட்டுள்ள வரலாறு ஆரம்பமாகின்றது. அவ்வாறிருக்கையில் டெஸ்ட் கிரிக்கெட் ஆரம்பித்து 94வருடங்களின் பின்னர் 1971ஆம் ஆண்டே ஒருநாள் கிரிக்கெட் தோற்றம்பெற்றதுடன் அதன் தொடர்ச்சியாக 1975இல் கிரிக்கெட் அரங்கில் உலகக் கிண்ணத் தொடரானது அறிமுகமாகி தற்சமயம் வெறுமனே நான்கு தசாப்தங்களாகின்றன. இருப்பினும் அதன் தாக்கமும் பிரபல்யமும் அபரிமிதமானது என்று கூறலாம்.
இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை கிரிக் கெட் அணிகளுக்கிடையில் பெருந்தொடரொன்றை நடத்துவது என்ற தீர்மானத்திற்கு அமைவாக 1975ஆம் ஆண்டு முதற்தடவையாக அக்கால கட்டத்தில் காணப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான போட்டித்தொடரொன்று நடத்தப்பட்டது. இத்தொடரானது புருடென்ஷல் கிண்ணத் தொடர் என்றே அழைக்கப்பட்டு வந்தது. 1983 ஆம் ஆண்டு வரை இப்பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தது. காரணம், கிரிக்கெட்டின் தயாகமான இங்கிலாந்தின் பிரபல தனியார் பங்குச் சந்தையான புருடென்ஷல் நிறுவனமே கிரிக்கெட் போட்டிகளுக்கான பிரதான அனுசரணையாளராக காணப்பட்டதால் அப்பெயராலேயே வெற்றிக்கிண்ணமும் அழைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனுசரணை வெவ்வேறுபட்ட தரப்பினரிடம் கைமாறியபோது அவ் அனுசரணையாளர்களின் பெயராலே அழைக்கப்பட்டபோதும் 1999ஆம் ஆண்டுக்குப்பின்னர் அதாவது சர்வதேச கிரிக்கெட் சபையின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கிரிக்கெட் கொண்டுவரப்பட்டதையடுத்து உலகக் கிண்ணம் என அழைக்கப்படலாயிற்று.
உத்தியோகபூர்வமான கிண்ணம் உருப்பெற்றது
1975முதல் 1999வரையில் வெவ்வேறு வடிவிலான கிண்ணங்களே வெற்றிபெறுபவர்களுக்கு வழங்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு முதற்தடவையாக சர்வதேச கிரிக்கெட் சபையின் தீர்மானத்திற்கு அமைவாகவும் கிரிக்கெட்டின் மகிமையைப் பறைசாற்றும் வகையிலும் பந்து, விக்கெட்டுக்கள், துடுப்புமட்டை ஆகிய மூன்றையும் பிரதிபலிக்கும் வகையிலான தற்போதைய கிண்ணம் வடிவமைக்கப்பட்டது. இங்கிலாந்தின் பிரபல்யம் பெற்ற நகைக்கடையான ஜெரால்ட் நிறுவனமே வெள்ளி மற்றும் கில்ட் எனப்படும் ஒருவகை உலோகத்தினால் இக்கிண்ணத்தை வடிவமைத்தது. 11கிலோகிராம் எடையுள்ள இக்கிண்ணமானது 60 சென்ரிமீற்றர்கள் உயரமுடையது. இக்கிண்ணத்தை எத்திசையில் நின்று பார்த்தாலும் எந்தவேறுபாட்டையும் காணமுடியாத விந்தைமிகுந்த விடயத்திற்கு பிளேடெனிக் முறையில் வடிவமைக்கப்பட்டமையே காரணமாகின்றது.
70இலட்சம் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட இக்கிண்ணத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து மேலாக கடந்த காலங்களில் வெற்றி பெற்ற அணிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் வெற்றிபெறவிருக்கும் அணிகளின் பெயர்களும் பொறிப்பதற்கான வசதியுள்ளதாக கூறப்படுகின்றது. உலகக் கிண்ணத்தொடர்களில் வெற்றி பெறும் அணிக்கு இக்கிண்ணம் வழங்கப்படுவதில்லை என்பதுடன் இக்கிண்ணத்தைப் போன்ற நகலொன்றே வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் அதன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரையில் சாதித்த அணிகள்
1975ஆம் ஆண்டு 8அணிகள் பங்கேற்ற முதலாவது உல கக் கிண்ணத் தொடரானது கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் நடைபெற்றது. அணிக்கு 60 ஓவர் கொண்ட போட்டி களில் வீரர்கள் வெள்ளை நிற உடையிலேயே பங்கேற்றனர். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கிளைவ் லொயிட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகளும் இயன் செப்பல் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும் ஜூன் 21ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் 24 ஆயிரம் இரசிகர்களுக்கு மத்தியில் மோதின. 60 ஓவர்களில் மேற்கிந்தியா 8 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களைக் குவித்தது. அணித்தலைவர் கிளைவ் லொயிட் 85 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பெற்றார். இயன் செப்பல், கிரேக் செப்பல், அலன் டானர் உள்ளிட்ட ஐவர் ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க 58.4 ஓவர்களில் அவுஸ்திரேலியா 274 ஓட்டங்களைப் பெற்று 17 ஓட்டங்களால் தோல்விய டைந்தது. இதனால் முதல் உலகக் கிண்ணத்தை முத்தமி ட்ட அணியாக ஆட்டநாயகன் விருதையும் தன்வசப்படுத்திய அணித்தலைவர் கிளைவ் லொயிட்டின் மேற்கிந்திய தீவுகள் வரலாற்றில் தடம்பதித்தது.
1979ஆம் ஆண்டும் 8 அணிகளின் பங்கேற்புடன் இரண்டாவது தடவையாக இங்கிலாந்திலேயே நடைபெற்றது. அரையிறுதியில் பாகிஸ்தானை வென்ற கிளைவ் லொயிட் தலைமை யிலான மேற்கிந்திய தீவுகளும் நியூஸிலாந்தை வென்ற மைக்பிறேலி தலைமையிலான இங்கிலாந்தும் ஜுன் 23ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸில் இறுதிப்போட்டியில் பங்கேற்றன. முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியா 60 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 51 ஓவர்களில் 194 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 92ஓட்டங்களால் தோல்வியடைந்தது. சேர்.விவியன் ரிச்சர்ட்ஸ் 138 ஓட்டங்களை குவித்து ஆட்டநாயகனானார்.
1983ஆம் ஆண்டு இங்கிலாந்திலேயே நடைபெற்ற தொடரில் 8 அணிகள் பங்கேற்றதுடன் கனடாவுக்கு பதிலாக சிம்பாப்வே இடம்பெற்றது. அரையிறுதியில் இங்கிலாந்தை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக் குள் நுழைந்த கிளைவ் லொயிட் தலைமையிலான பலம்மிக்க மேற்கிந்திய தீவுகளை 25ஆம் திகதி லண்டன் லோர்ட் ஸில் இறுதி ப்போட்டியில் சந்தித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 54.5 ஓவர்களில் 183ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக் களையும் இழந்தது. மேற்கிந்தியாவின் பலமிக்க துடுப்பா ட்ட வரிசை கிரீனிட்ஜ் (01), ஹெய்ன்ஸ் (13) விவியன் ரிச்சர்ட்ஸ் (33) கிளைவ் லொயிட் (08) என பிரகாசிக்க த வற 52 ஓவர்களில் 140 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 43ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இந்தியா முதற்தடவையாக கிண்ணத்தை சுவீகரித்ததுடன் மொகிந்தர் அமர்நாத் ஆட்டநாயகனாக தெரிவானார்.
1987ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் 8 அணிகளின் பங்கேற்றலுடன் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளாக முதல்முறையாக நடத்தப்பட்டன. அரையி றுதியில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குச் சென்ற இங்கிலாந்து பாகிஸ்தானை வெற்றி பெற்ற அவுஸ்திரேலியாவைச் சந்தித்தது. சுமார் ஒரு லட்சம் இரசிகர்களுக்கு மத்தியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் அலன் போர்டர் தலைமையிலான அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 253ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ஓட்டங்களை எடுத்ததால் அவுஸ்திரேலியா 7 ஓட்டங்களால் வெற்றி பெற்று கிண்ணத்தை முதற்தடவையாக சுவீகரித்தது. அவுஸ்திரேலிய வீரர் டேவிட் பூன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
1992ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடு கள் முதல் முறையாக இணைந்து நடத்தின. வெள்ளை நிற சீருடையுடன் பங்கேற்ற வீரர்கள் வண்ண உடைக்கு மாறினர். அத்துடன் வெள்ளைப்பந்து, பகலிரவுப்போட்டி, முதல் 15 ஓவர்க ளில் வெளிக்கள வீரர்களாக இருவரே செயற்படமுடியும் என்ற விடயங்கள் அறிமுகமாகின. இனவெறி சிக்கலிலிருந்து விடுதலை பெற்ற தென்ஆபிரிக்கா 21 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக உலகக் கிண்ணத்தில் கலந்து கொள்ள 9அணிகளின் பங்கேற்றலுடன் தொடர்ந்து நடைபெற்றது. அரையிறுதியில் நியூஸிலாந்தை வெற்றி கொண்ட இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தானும் தென்ஆபிரிக்காவை வெற்றிகொண்டு 3ஆவது முறை யாக இங்கிலாந்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 87ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் துடுக்பெடுத்தாடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 249 ஓட்டங்களைக் குவித்தது. இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் 227 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழக்க பாகிஸ்தான் முதற்தடவையாக வெற்றியைப் பதிவு செய்தது. ஸ்விங் பந்துவீச்சில் கலக்கிய வசீம் அக்ரம் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஆட்டநாயகனானார்.
1996ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ் தான், இலங்கை ஆகிய ஆசிய நாடுகள் கூட்டாக நடத்திய 5ஆவது தொட ரில் முன்னைய 9 அணிகளுடன் கென்யா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியன அறிமுகமாகின. அரையிறுதியில் இந்தியா வை வீழ்த்திய அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை மற்றொரு அரையிறுதியில் மேற்கிந்தியாவை வீழ்த்திய மார்க் டெய்லர் தலைமையிலான அவுஸ்திரேலியாவைச் சந்தித்தது. லாகூரில் மார்ச் 17இல் நடைபெற்ற போட் டியில் முதலில துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 241 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு ஆடிய இலங்கை அரவிந்த டி சில்வா (107), குருசிங்கா(65), அணித்தலைவர் ரணதுங்க (47) ஆகியோரின் அபாரமான ஆட்டத்தின் மூலம் 46.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற இலங்கை முதற்தடவையாக கிண்ணத்தை சுவீகரித்ததுடன் போட்டியை நடத்திய நாடு உலக கிண்ணத்தை வென்றது என்ற வகையிலும் இலங்கை புதிய வரலாறு படைத்தது. ஆட்டநாயகனாக அரவிந்த டி சில்வா தெரிவானார்.
அவுஸ்திரேலியாவின் ஹட்ரிக் வெற்றி
1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஏழாவது உலகக் கிண்ண த்தை வென்ற அவுஸ்திரேலியா அதனைத் தொடர்ந்து 2003, 2007ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற எட்டாம், ஒன்பதாம் உல கக் கிண்ணங்களையும் தமதாக்கி ஹட்ரிக் சாத னை புரிந்தமை விசேடமானதாகும்.
1999இல் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் நடத்தின. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் சுப்பர் சிக்ஸ் சுற்று அறிமுகப்படுத்தப்பட்டது. தென் ஆபிரிக்காவுடனான போட்டி சமநிலையில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு தெரிவான ஸ்டீவ்வோ தலைமை யிலான அவுஸ்திரேலியா வசீம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தானை சந்தித்தது. ஜுன் 20ஆம் திகதி லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 39 ஓவர்களில் 132 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் ஷேன் வோர்ன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி னார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸி. 20.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இதன் மூலம் 1987 இற்கு பின்னர் மற்றுமொரு தடவை கிண்ணத்தை கைப்பற்றியது.
2003ஆம் ஆண்டு தென்ஆபிரிக்கா, சிம்பாப்வே, கென்யா நாடுகள் முதற் தடவையாக இணைந்து நடத்திய இத்தொடரில் ஸ்கொட்லாந்துக்கு பதிலாக கனடா, நமிபியா, நெதர்லாந்து உள்வாங்கப்பட்டு 14 அணிகள் பங்கேற்றன. தென் ஆபிரிக்காவின் ஜொஹனஸ்பேர்க்கில் மார்ச் 23ஆம் திகதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் சௌரவ் கங்குலி தலை மையிலான இந்தியாவும் ரிக்கி பொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும் மோதின. கங்குலியின் அழைப்பில் முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆஸி.க்கு கில்கிறிஸ்ட் (57), மெத்தியூ ஹேடன் (37) சிறப்பான ஆரம்பத்தை வழங்க அதனை அடிப்படையாகக் கொண்ட அணித்தலைவர் ரிக்கிபொண்டிங் 121பந்துகளில் 4நான்குஇ 8ஆறு உள்ளடங்கலாக 140ஓட்டங்களைப் பெற்று இறுதி வரையில் ஆட்டமிழக்காதிருந்தார். இவருக்கு துணையாக டேமியன் மார்ட்டின் (88) இருக்கவும் 50 ஓவர்கள் நிறைவில் 2விக்கெட்டுக்களை இழந்து 359 ஓட்டங்களைக் குவித்தது. உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அணியொன்று பெற்ற அதிகபட்ச ஓட்டம் என்பதுடன் தனிவீரரொருவரின் அதிகபட்ச ஓட்டத்தையும் பொண்டிங் பதிவு செய்தார். ஷெவாக் (82) ஆட்டமிழக்க தடுமாறிய இந்தியா 39.1 ஓவர்களில் 234 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 125 ஓட்டங்களால் வெற்றி பெற்ற ஆஸி. 3ஆவது முறையாக உலக மகுடத்திற்கு முத்த மிட்டது. 11 போட்டிகளில் தோல்விகளையே காணாது அணி யை வழிநடத்திய தலைவர் பொண்டிங் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.
2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் முதல் முறையாக 16 அணிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற உலகக் கிண்ணத்தொடரில் பவர்-பிளே அறிமுகப்படுத்தப்பட்டது. லீக் மற்றும் அரையிறுதியில் பிரகாசித்த ரிக்கி பொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலியாவும் மஹேல ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அணியும் ஏப்ரல் 28ஆம்திகதி பிரிட்ஜ்டவுனில் பலப்பரீட்சை நடத்தின. மழையால் 38 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி.க்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் கில்கிறிஸ்ட் 104 பந்துகளில் 13 நான்கு, 6 ஆறு 149 ஓட்டங்களைப் பெற்று இறுதிப்போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையையும் தனதாக்கினார். அவுஸ்திரேலியா 38 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை சார்பில் சனத் ஜெயசூர்ய (63), சங்கக்கார (54) களத்தில் நின்று போராடிய போதும் ஆஸி.யின் ஆதிக்கம் ஓங்கியே இருந்தது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் 36ஓவர்களாக போட்டி மட்டுப்படுத்தப்பட்டு 269ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் 36 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 215 ஓட்டங்களைப் பெற்று இலங்கை தோல்வியைத் தழுவியது. இதனால் நான்காவது தடவையாக கிண்ணத்தைக் கைப்பற்றிய ஆஸி. தொடர்ச்சியாக மூன்று தடவைகள் உலகக் கிண்ணத்தை தமதாக்கி ஹட்ரிக் சாதனை படைத்தவர்கள் என்ற வரலாற்று சாதனையையும் புரிந்தனர். 26 விக்கெட்டுகளை சாய்த்த வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் ஆட்டநாயகனானார்.
2011ஆம் ஆண்டு 10ஆவது உலகக் கிண்ணத்தொடரை இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய ஆசிய நாடுகள் இணைந்து நடத்தின. நடுவர்களின் தீர்ப்பை எதிர்த்து முறையிடும் (டி.ஆர்.எஸ்.) முறை அறிமுகமானது. 14அணிகளின் பங்கேற்றலுடன் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப்போட்டியில் டோனி தலைமையிலான இந்தியாவும் குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தன. ஏப்ரல் 2ஆம்திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆசிய அணிகள் மோதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இறுதிப்போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்கெட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களை எடுத்தது. மஹேல ஜெயவர்த்தன 103 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியாவின் ஷெவாக் (00), சச்சின் (18) அரங்கு திரும்பவும் கௌதம் கம்பீர் 97 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க இறுதிநேரத்தில் அதிரடியை வெளிப்படுத்திய அணித்தலைவர் டோனி இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார்.இந்தியா 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 277 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இதன்மூலம் 28 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த மண்ணில் உலகக் கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. 91 ஓட்டங்களைக் குவித்த டோனி ஆட்டநாயகனானார்.
ஆர். ராம்

0 Comments