பண்டையகால மன்னர்களிடம் நிறைய செல்வமும் சொத்துக்களும் இருந்தன. அவர்கள் நினைத்த மாதிரியெல்லாம் ஆட்சி செய்தனர். தங்கம் உள்ளிட்ட விலை மதிக்க முடியாத செல்வங்களை சூறையாடி தங்கள் கஜானாக்களை நிரப்பியிருந்தனர்.
தமது சாம்ராஜ்யம் சரியத் தொடங்குகின்ற போது அந்த வஸ்துக்களை அப்படியே நிலத்துக்கடியில் போட்டு புதைத்து வைப்பர். இந்த புதையலை பாதுகாப்பதற்காக அப்பாவிகளை பலியிட்டு அந்த ஆன்மாக்களை காவலுக்கு நிறுத்தியதாக வரலாற்றில் பல திரில் கதைகள் உள்ளன. ஆனால், பலியிடப்பட்ட ஆன்மா காலாவதியான பிற்பாடு அது இன்னும் ஒரு உயிரை அல்லது அதற்குசம பெறுமதியுள்ள ஒன்றை பலியாக கேட்கும்.
அதற்குப் பகரமாக நிலத்தடியில் இருக்கின்ற மொத்தப் புதையலையும் தருவதாக அது சொல்லும். இப்படித்தான் உலகத்தில் பல 'புதையல்களும்' அதன் வழிவந்த 'ரகசியங்களும்' வெளிக் கொணரப்பட்டுள்ளன. வாசகர்களுக்கு கதை புரிந்திருக்கும் என நினைக்கின்றேன். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக கோலோச்சிக் கொண்டிருந்த போது முறைகேடாக சம்பாதித்த அல்லது பதுக்கி வைத்திருந்த சொத்துக்களும் செல்வங்களும் அவர் காவலுக்கு வைத்திருந்த குடும்ப ஆட்சியும் இனவாதமும் காலாவதியாகி வலுவிழந்து போன பிறகு வெளிச்சத்து வந்து கொண்டிருக்கின்றன.
உடைந்த கோட்டை
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் மிக முக்கியமானது. மிகவும் மோசமான தலைவர் என்று அவரைக் குறிப்பிட முடியாது. ஏனென்றால் விடுதலைப் புலிகள் என்ற மிகப் பெரும் போராட்ட இயக்கத்தின் கொட்டத்தை அடக்கி யுத்தத்ததை முடிவுக்கு கொண்டு வந்தார். யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட அடுத்த கணமே பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.
இவரது நிறைவேற்றதிகார போக்கும் யாரையும் கணக்கெடுக்காத நடத்தையும் கூட இதற்கு துணையாக அமைந்திருக்கலாம். அவர் மிகவும் மென்மையான இலகு போக்குடைய ஒரு ஜனாதிபதியாக இருந்திருந்தால் தீர்க்கமான தீர்மானங்களை எடுத்திருக்க முடியாது போயிருக்கலாம் என்ற ஒரு கருத்தையும் இங்கு முன்வைக்க முடியும்.
ஆனால், அளவுகடந்த குடும்ப ஆட்சிக்கு இடமளித்தமையும் இனவாதிகளை வளர விட்டமையுமே அவர் செய்த மகா தவறு. இதனால்தான் அவரது சாம்ராஜ்யம் சரிந்திருக்கின்றது. அவருடைய எல்லா எதிர்பார்ப்புக்களுக்கும் உலை வைத்திருக்கின்றது, சுருக்கமாக கூறினால் சொந்த செலவில் தனக்குத் தானே சூனியம் வைத்த கதையாயிற்று பேர்சி மஹிந்த ராஜபக்ஷவின் ராஜ வாழ்க்கை.
சுதந்திரக் கட்சியில் ஒரு பிரதமர் பதவி கூட வழங்கப்படாதிருந்த சர்வ சாதாரணமான சுகாதார அமைச்சரான மைத்திரிபால சிறிசேனவைக் கொண்டு மஹிந்தவை தோற்கடிப்பதற்கு இறைவன் வகுத்த திட்டம் வாக்காளப் பெருமக்களினால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. யுத்தத்தின் வெற்றியையும் பிரிவினைவாத மாயையும் காலாகாலத்திற்கும் சந்தைப்படுத்த முடியாது போய்விட்டது. ஆஜானபாகுவான, கம்பீரமான குரலில் உரக்கப் பேசும் ஒருவர்தான் ஜனாதிபதியாவார் என்ற நியதி இல்லாமல் போய்விட்டது.
குழந்தைகளை தூக்கிக் கொஞ்சுகின்ற, எல்லா மொழிகளிலும் கலவையாக பேசுகின்ற, வார்த்தைக்கு வார்த்தை 'நான் உங்கள் நண்பன் என்னை நீங்கள் நம்பலாம்' என்று கூறுகின்ற ஒரு ஆட்சியாளரை ஏன் மக்கள் நிராகரித்தார்கள் என்பது முன்னைய ஆட்சியாளர்களுக்கு மட்டுமன்றி, மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்கும் நல்லதொரு படிப்பினையாகும்.
மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டது அவ்வளவு ஆச்சரியமான ஒன்றல்ல. அவருக்கு ஆதரவளிக்கின்ற சிலர் போட்ட தப்புக்கணக்குகளுக்கு மக்கள் பொறுப்பல்ல. ஏனென்றால் கணிசமான பெரும்பான்மை மக்களுக்கும் பெருமளவான சிறுபான்மையினருக்கும் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பது முன்னமே தெரிந்திருந்தது.
தமது ஆட்சியையும் அதிகாரத்தையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள கடைசி வரையும் போராடிய மஹிந்த ராஜபக்ஷ அம் முயற்சிகள் யாவும் சாத்தியமற்றுப் போன பின்னர், அமைதியான முறையில் ஜனாதிபதி பதவியை விட்டுச் சென்றார். எந்தக் குழப்பமும் இன்றி மைத்திரிபால ஜனாதிபதியானார்.
ஆட்சியை மைத்திரியிடம் விட்டுச் சென்றாலும் அதிகாரம் மீதான அவரது வேட்கை இன்னும் தீரவில்லை. 9 ஆண்டுகளாக நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக இருந்து எல்லா வரப்பிரசாதங்களையும் சுகித்தது மட்டுமன்றி தன்னை ஒரு அசைக்க முடியாத தலைவன் எனவும் மனக்கோட்டை கட்டியிருந்த ஒரு அரசியல்வாதி ஆட்சி பறிபோன தாக்கத்தை மிக சாதாரணமாக எதிர்கொள்ள மாட்டார். எனவேதான் அம்பாந்தோட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்து கொண்டு மஹிந்த ராஜபக்ஷ அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து யோசித்துக் கொண்டிருக்கின்றார்.
அவருக்கு ஆதரவளிக்கின்ற சிறுபான்மை அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக பலரும் அங்கு சென்று சந்தித்து விட்டு வருவதாக அறியமுடிகின்றது. ஆனால் தப்பித்தவறி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால்... இன்று மைத்திரி அரசாங்கம் அவருக்கு வழங்கியுள்ள எந்த சுதந்திரத்தையும் மைத்திரிக்கோ அல்லது பொது எதிரணி உறுப்பினர்களுக்கு மஹிந்தவின் ஆட்சிச்சூழல் வழங்கியிருக்காது.
2010 தேர்தலின் பின்னர் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைமையே மைத்திரிக்கும், சந்திரிக்காவுக்கும், ரணில் விக்கிரமசிங்க போன்றோருக்கும் ஏற்பட்டிக்கும் என்பதில் சந்தேகங்கள் இல்லை. ஆனால், மக்களால் தோற்கடிப்பட்ட, ஊழல்மிக்க ஆட்சியாளர்கள் இன்னும் ஒரளவுக்கு சுதந்திரமாக நடமாடுவதற்கு இடமளிக்கப்பட்டிருப்பதும் அவர்களது கடந்தகால செயற்பாடுகள் தொடர்பில் சட்டம் நேர்மையாக கையாளப்படுவதுமே நல்லாட்சியின் அடையாளங்கள்தான் என்பதை தெளிந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தீராத வேட்கை
மைத்திரிபால ஜனாதிபதியான பின்னர் முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ பல உபாயங்களை கையாளத் தொடங்கியிருக்கின்றார். இது தவிர்க்க முடியாததும் கூட. ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தானே என்ற அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பெரும்பான்மைப் பலத்தை பாராளுமன்றத்தில் நிரூபித்து அதன்படி நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்கும் எண்ணம் மஹிந்தவுக்கு இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இருப்பினும் ஐ.ம.சு.மு. தரப்பில் இருந்து முக்கிய உறுப்பினர்கள் சிலர் மைத்திரி பக்கம் தாவியமையாலும் மேலும் சிலர் ஆதரவு வழங்க தயாராக இருந்தமையாலும் அத்திட்டத்தை மஹிந்தவால் செயற்படுத்த முடியாது போனதாக கூறப்படுகின்றது. இதனால் ரணிலின் பிரதமர் பதவி உறுதிப்படுத்தப்பட்டதுடன் அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவ விவகாரம் உருவானது.
சுதந்திரக் கட்சியின் யாப்பின்படி அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கே தலைமை பதவியும் கைமாறும் என்பது நியதியாகும். இதனை ஆதாரமாகக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைவராக நியமிக்குமாறு ஆளும்தரப்பு கோரியது. ஆனால் சுதந்திரக்கட்சியின் 40 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் இருந்ததுடன் மஹிந்தவே தொடர்ந்தும் தலைவராக இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதனால் தலைமைப் பதவி சர்ச்சைக்குள் சிக்கியது. நீதிமன்றத்திற்கு சென்றே இதற்கு தீர்வு காண நேரிடுமோ என்று இரு தரப்பு ஆதரவாளர்களும் எண்ணுமளவுக்கு நிலைமைகள் இருந்தன. 2005 இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் மேற்சொன்ன யாப்புவிதியின் துணையுடனேயே அப்போது வெளிநாடு சென்றிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தலைமைப் பதவியில் இருந்து நீக்கி, அப்பதவியை மஹிந்த பெற்றுக் கொண்டார்.
ஆனால் மைத்திரி எதிரணியின் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு கட்சியின் செயலாளராக வேறொருவரை நியமித்த மஹிந்த, மைத்திரிபாலவை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க மறந்து விட்டார். அதன் காரணமாகவே மைத்திரி தலைமைப் பதவியை கோர நேரிட்டது என்பதுடன், தேர்தலில் தோல்வியுற்று மனம் நொந்துபோயிருந்த முன்னாள் ஜனாதிபதிக்கு புதிய தலையிடியையும் இது ஏற்படுத்தியது.
முன்னாள் ஜனாதிபதி என்ற ஒரேயொரு பலத்தை வைத்துக்கொண்டு இந்நிலைமையை எவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ சமாளிப்பார் என்பதை பலரும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர். ஆனால் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி, எவ்வாறு ஜனாதிபதி பதவியை விட்டுக் கொடுத்தாரோ அதேபோன்று எந்தவொரு ஆர்ப்பரிப்பும் இல்லாமல் மைத்திரிக்கு சு.க. தலைமைப் பதவியை வழங்கும் அதிரடி அறிவிப்பு ஒன்றை மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டார்.
இவ்வாறு ஆச்சரியமான நற்பண்புகளை முன்னாள் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளமை 'புலி பாய்வதற்காக பதுங்குகின்றதா' என்ற வலுவான கேள்வியை தோற்றுவித்திருக்கின்றது. இது நியாயமான கேள்விதான். இவ்வாறான ஜனநாயக நகர்வுகளை மேற்கொள்வதன் மூலம் ஏதோவொரு அரசியல் காய்நகர்த்தலை மஹிந்த தரப்பு மேற்கொள்கின்றது என்ற எண்ணம் அரசியல் வட்டாரங்களில் இருக்கின்றது. அதாவது மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் சமகாலப்பகுதியில் அடுத்த பாராளுமன்ற தேர்தலை இலக்காகக் கொண்ட உபாயங்களை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வகுத்திருக்கின்றது என குறிப்பிடலாம்.
அடுத்த கணக்கு
தெளிவாகச் சொன்னால் - சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கினால் அவரே அடுத்துவரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை நியமிப்பார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதானமாகக் கொண்ட பொது எதிரணியின் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் என்றபோதும், அடுத்த பொதுத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தேட முடியாது.
சுதந்திரக் கட்சியின் (ஐ.ம.சு.மு) வேட்பாளருக்கே ஆதரவு தேட முடியும். இது
ஒருபுறமிருக்க இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களில் அதிகமானோர் மஹிந்த ராஜபக்ஷவின் ஐ.ம.சு.மு.வுக்கு வாக்களித்திருக்கின்றனர். தொகுதி வாரியாக நோக்கினால் அதிக உறுப்பினர்கள் மஹிந்த வெற்றி பெற்றுள்ளதையும் காணலாம். இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சியே வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமுள்ளது என்று மஹிந்த ராஜபக்ஷ ஒரு கணக்குப் போட்டிருக்கலாம்.
அது சாத்தியமாகும் பட்சத்தில், அதிக ஆசனங்கள் பெறும் கட்சிக்கே பிரதமர் பதவி வழங்கப்படும் என்ற பொது எதிரணியின் ஒப்பந்தத்திற்கு அமைவாக தமது கட்சியை சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கும் மஹிந்த பிரயத்தனப்படுகின்றார். அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியால் முன்னிலைப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் நிறைவேற்றதிகாரம் இல்லாத ஜனாதிபதியாக பதவி வகிப்பார். ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சியாக மீண்டும் ஆக்கப்படுவது மட்டுமன்றி அதிகாரமுள்ள பிரதமர் பதவி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வசமாகும்.
இதற்கமைய மீண்டும் ஆட்சியதிகாரத்தை தம்வசப்படுத்துவதே மஹிந்த ராஜபக்ஷவினதும் அவரது சகாக்களினதும் நிகழ்கால கனவாகும். இவ்வாறான ஒரு மாற்றத்தை மேற்கொள்வதன் மூலம் கைவிட்டுப் போன அரசியல் அதிகாரத்தை மீண்டும் சுகிப்பது மட்டுமன்றி, இத்தனை திட்டங்களையும் வெகு சாதூர்யமாக வெற்றிபெறச் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க போன்றோரை பழிவாங்குவது மட்டுமன்றி அவர்களை அரசியல் சூனியம் ஒன்றுக்குள் தள்ளி கைவிடச் செய்வதுமே இவ்வாறான முன்னகர்வு ஒன்றின் மறைமுக நோக்கமாக இருக்கும் என்றும் கணித்துக்கூற முடியும்.
எது எவ்வாறிருப்பினும்... இதுவெல்லாம் ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ தெரியாத ரகசியங்கள் அல்ல. ஜனநாயகவாதியாக தம்மைக் காட்டிக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி எந்த இலக்கை நோக்கி பயணிக்கின்றார் என்பதை மைத்திரிபாலவினதும் ரணில், சந்திரிகா போன்றோரினதும் அனுபவங்கள் சொல்லிக் கொடுத்திருக்கும். அந்த வகையில், எதிர்க்கட்சியின் மனக்கோட்டையை சிதறடிக்கும் விதத்தில் ஜனாதிபதி தனது இயங்குதளத்தை அமைத்துக் கொள்வார் என்று ஊகிக்க முடிகின்றது.
தேசிய அரசாங்கம் பற்றிய உத்தேசத்தை முன்னமே வெளியிட்டுவிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 'நான் சுதந்திரக் கட்சியின் தலைவர் என்றாலும் ஜனாதிபதி என்ற ஸ்தானத்தில் இருந்து இறங்கிவந்து யாருக்காகவும் வாக்குதேட மாட்டேன்' என்ற அர்த்தத்தில் கருத்து வெளியிட்டுள்ளமை இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டாகும். மைத்திரியிடம் தமது வேலை பலிக்காது என்பதை புத்தியுள்ளவர்கள் புரிந்து கொள்ள இதுவே போதுமானது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 3 சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டளவான மக்களின் மனதை தொட்டுள்ளார் என்று சொல்லலாம். முதலாவது – எந்தவித கெடுபிடிகளும் இல்லாமல் ஜனாதிபதி பதவியை மைத்திரிக்கு வழங்க முன்வந்தமை. இரண்டாவது – தேர்தல் தோல்வியின் பின்னர் மஹிந்த தனது சொந்த ஊருக்கு சென்ற சம்பவம்.
இதன்போது ஹெலிகொப்டரில் இருந்து இறங்கிய தமது மண்ணின் மைந்தனை செர்நத ஊர் மக்கள் சத்தமிட்டு அழுது வரவேற்றனர். வீட்டு வளாகம் முழுவதும் ஒரே ஓலமாக இருந்தது. இதனை தொலைக்காட்சியில் பார்த்த கணிசமான மக்கள் மஹிந்தவில் அனுதாபம் கொண்டனர். மூன்றாவது சந்தர்ப்பம் - பிடிவாதமாக நிற்காது ஏதோ ஒரு அடிப்படையில் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மைத்திரிக்கு தாரை வார்த்தமை ஆகும்.
யுத்தத்தை வென்ற முன்னைய ஜனாதிபதி என்பதற்கு அப்பால் இவ்வாறான பல விடயங்களின் ஊடாகவும் மஹிந்த ராஜபக்ஷ ஒரு குறிப்பிட்டளவான மக்கள் மனங்களில் எங்கோ ஒரு மூலையில் இன்னும் இடம்பிடித்திருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும். எனவேதான் மஹிந்த பற்றிய உண்மையான தோற்றப்பாட்டை மக்களுக்கு வெளிப்படுத்தும் கைங்கரியங்களிலேயே புதிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தோன்றுகின்றது.
அதன்மூலம் மக்களின் முன்னே குடும்ப ஆட்சியின் முகத்திரையை கிழிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாக குறிப்பிடலாம். இதனைச் செய்யாமல், முன்னைய ஜனாதிபதியை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தினால் மக்கள் அதனை வேறு கோணத்தில் நோக்கக் கூடும். அது பொதுத் தேர்தலில் தாக்கம் செலுத்தும் வாய்ப்பும் இருக்கின்றது. எனவே, கொஞ்சம் விட்டுப்பிடிப்பதற்கு மைத்திரி அரசாங்கம் முனைவதாக தெரிகின்றது.
சுருக்கமாகக் கூறினால், மக்களே ராஜபக்ஷ ஆட்சி மீது வெறுப்பு கொள்வதற்கான புறச்சூழலை உருவாக்கும் பணிகள்தான் தற்சமயம் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக உள்மனது நினைக்கின்றது.மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட அடுத்த மணித்தியாலத்திலிருந்து, மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களை வெளிக்கொணரும் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. சிறிய களவில் அகப்பட்டு மிகப் பெரும் களவுகள் எல்லாம் வெளியில் வருவது மாதிரி.... அலரி மாளிகை தொடக்கம் சந்து பொந்துகள் வரை ஊழலின் சான்றுகள் தினமும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அரபுலகில் நெடுங்காலம் மன்னர் ஆட்சி நடாத்தி, அரபு வசந்தத்திற்குள் சிக்குண்டுபோன தலைவர்களைப் போல மிக ஆடம்பரமான வாழ்க்கை ஒன்றை மக்கள் பணத்தில் ராஜபக்ஷ குடும்பம் நடாத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து நாட்டு மக்கள் அதிர்ந்து போயிருக்கின்றனர். இலங்கையில் இனவாதத்தின் துணைகொண்டு பௌத்த சிங்கள ஆட்சி ஒன்றை நிறுவி, அதன்மூலம் நீண்டகாலத்திற்கு ஆட்சி பீடத்தில் கோலோச்சுவதே முன்னைய ஆட்சியாளர்களின் தீராத தாகமாக இருந்திருக்கின்றது என்பதற்கு நிறைய ஆதரங்கள் புதையல் போல் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. தங்கமுலாம் பூசிய கட்டில், பெருந்தொகை பணம், வெண் குதிரை, அரிய வகை சுறா மீன், வாகனங்கள், தங்கங்கள், ஆதிகால வாள்.... ஏன இந்த ஆதரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.
ஆயினும், நல்லாட்சிக்கான சமிக்கையோடு ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் கதிரை மிக குளிர்மையானதாக இருக்கப்போவதில்லை. எகத்தாள போக்குடைய மஹிந்த ராஜபக்ஷவினால் கூட சில விடயங்களை சமாளிக்க முடியாமல் போய்விட்ட நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால தமக்கு ஆதரவளித்த ஏகப்பட்ட கட்சிகளை திருப்திப்படுத்த வேண்டியிருக்கின்றது. அதேவேளை ஆணை வழங்கிய மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் சமகாலத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தை மேற்கொண்டு அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகவும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளார். பொதுத் தேர்தலின் பின்னர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும் தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வகிபாகத்தை உறுதிப்படுத்துவதுடன் பிரதமர் பதவியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் அவர் இருக்கின்றார். மறுபுறத்தில் - இவர்கள் இருவரையும் வஞ்சம் தீர்க்கும் நெஞ்சுரத்தோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருக்கின்றார்.
காலம் எவ்வளவோ பெரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றது. இராணுவப் புரட்சியோ ஒது துளி இரத்தமோ சிந்தாமல், இந் நாட்டில் நல்லாட்சிக்கான மாற்றத்தை ஏற்படுத்திய காலம்தான் நல்லாட்சியின் எதிர்கால தலைவிதியையும் தீர்மானிக்க வேண்டும். காலம் மிகப் பெரிய ஆசான் !
-ஏ.எல்.நிப்றாஸ்-


0 Comments