சிறுபான்மை மக்களின் வாக்கு பலத்தை பலமாக நிரூபித்த ஓர் தேர்தல் கடந்த எட்டாம் திகதி நடந்து முடிந்திருக்கிறது.
எழுபது வீதத்தை தாண்டி பதிவு செய்யப்பட்ட வாக்களிப்பானது நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை மக்கள் விரும்புவதையே காட்டியது. காரணம் கடந்த வருடமானது குறிப்பாக இலங்கை முஸ்லிங்களுக்கு கசப்பான வருடமாகவே முற்றும் பெற்றிருந்தது.
ஏற்கனவே கருதப்பட்டது போல் பெரும்பான்மை சிங்கள வாக்குகள் இரண்டாகப் பிரிந்து சிறுபான்மையினரின் வாக்குகளே மைத்திரிபால சிறி சேன அவர்களை ஜனாதிபதியாக ஆக்கியுமிருந்தன.
தம்புள்ளை பள்ளிவாசலில் மதவாதம் கைவைத்த காலம் தொட்டு நடந்த சம்பவங்களும் வன்முறைகளும் இலங்கை முஸ்லிங்களிடத்தில் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு புள்ளிகளைக் குறைத்துக் கொண்டே வந்தன.
அதிகளவான முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசில் அங்கம் வகிக்க இவ் வன்முறைகளும் பொது பல சேனா உள்ளிட்ட அடிப்படைவாத மத அமைப்புக்களால் நடத்தப்பட்ட போதும் அத் தலைவர்களில் சிலர் எதிர்க்க வலுவின்றி தத் தமது இயலாமையையே வெளிப்படுத்தினர். அளுத்கம தர்க்கா நகர் பேருவளை பிரதேசங்கள் பற்றி எரிந்த நாட்களில் கூனிக் குருகி நின்றது முஸ்லிம் சமூகம்.
மகிந்த ராஜபக்க அவர்களை எதிர்த்து யார் களமிறங்குவார் என அரசியலில் கேள்விகள் நிலவிய நாட்களிலும் இதே முஸ்லிம் சமூகம் மகிந்தவுக்கு எதிராக வாக்களிப்பதாகவே உறுதியான முடிவை எடுத்திருந்தது.
தானே பொது எதிரணி வேட்பாளர் என மைத்திரிபால அவர்களும் அறிவிக்க மகிந்தவை வீழ்த்த பலமான ஆயுதம் கிட்டியதாகவே சிறுபான்மை சமூகங்கள் பெருமூச்சு விட்டன. முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதிதுவப்படுத்தும் தலைமைகள் தமது ஆதரவு யாருக்கு என அறிவிக்கும் முன்பே சமூகம் தலைமைகளுக்கு அறிவித்தது தமது வாக்குகள் யாருக்கு அளிக்கப்படவிருக்கின்றன என்ற செய்தியை.
எதிர்பாராத கட்சித்தாவல்கள் நடந்து கொண்டிருந்த நாட்களில் நமது தலைவன் எவராவது எதிரணிக்குச் செல்லமாட்டார்களா என ஏங்கியது மட்டுமல்லாமல் சமூகத்தின் நிலைப்பாடு அறிந்தும் தொடந்தும் இதே அரசோடு ஒட்டிக் கொண்டிருந்த தலைவர்களை திட்டியும் பார்த்தது.
இதில் அதிகம் மூக்குடைபட்டது முஸ்லிம் காங்கிரஸ். மகிந்தவா? மைத்திரியா? என கட்சியும் இருபக்கமாகப் பிரிந்து விவாதித்துக் கொண்டிருக்க கட்சியின் போராளிகளும் மைத்திரியின் போஸ்டர்களை கையிலெடுக்க முஸ்லிம் காங்கிரஸை முந்திக் கொண்டு அரசை விட்டு வெளியேறிய ரிசாத் பதியுதீனுக்கு கிடைத்த ஆதரவைக் கண்டு ஆடிப்போய் கடைசியில் தபால் மூல வாக்களிப்பும் நிறைவடைந்த பிறகும் கரையோர மாவட்டம் என நாடகம் ஒன்றையும் நடத்திக் காட்டி தமது நிலைப்பாட்டை தெரியப்படுத்தியது முகா. முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரி பக்கம் மாறியிருக்கா விட்டாலும் வெளியான தேர்தல் முடிவுகளில் எவ்வித மாற்றமும் வந்திருக்க வாய்ப்பில்லை என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும்.
கிழக்கு மாகாணம் அடங்கலாக முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு மகிந்தவுக்கு எதிராக நிற்க அதாவுல்லாஹ் ஹிஸ்புல்லாஹ் முதலியோர் மகிந்த புராணங்களைப் பாடியபடியே அவரையும் அழைத்துக் கொண்டு கிழக்கு மேடைகளில் யுத்த வெற்றியால் நன்றிக்கடன் அபிவிருத்தி என கோசமிட்டனர்.
சமூகம் அவர்களை முறைத்தே பார்த்தது. வந்தவர்கள் அபிவிருத்திக் கோசத்தோடு மட்டும் நிற்காமல் பயங்கரவாத்தால் சமூகம் அடைந்த இடர்களை நினைவுபடுத்தவும் தவறவில்லை. பத்து இருவது வருடங்கள் முன் நடந்த அநீதிகளை மறக்க வேண்டாம் எனக் கூறிய இவர்கள் சென்ற வருடம் நடந்த அக்கிரமங்களை மறக்குமாறு கேட்டதில் ஏதும் நியாயம் இருக்கிறதா?
கிழக்குப் பிரிப்பு யுத்த வெற்றி எனக் கூறிய அப்போதைய அமைச்சர் அதாவுல்லாஹ் பொது பல சேனாவின் அட்டூழியங்களுக்கு அப்போதைய ஜனாதிபதி மகிந்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையை நியாயப்படுத்த தவறிவிட்டார்.
அரசியல் அடையாளமற்று இருண்டிருந்த அக்கரைப்பற்றுக்கு தனது அரசியல் பிரதிநிதித்துவத்துவத்தின் மூலம் ஒர் முகவரியைக் கொடுத்தவர் தான் அதாவுல்லாஹ்.
கடந்த பனிரெண்டு வருடங்களாக அவரின் பல அபிவிருத்தித் திட்டங்களால் அக்கரைப்பற்று மண் செழித்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவராக இருக்கும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் கொள்ளை சார் அரசியலை சமூகத்திடம் காட்டத் தவறி விட்டார்.
கொள்ளை அரசியலில் இன்றுவரைக்கும் நின்றுபிடிக்கும் தமிழ் சமூகத்தோடு இத் தேர்தலின் மூலம் முஸ்லிம் சமூகமும் இணைந்து கொள்கிறது.
அபிவிருத்திகள் அரசியல் ஆக முடியாது அபிவிருத்தி மட்டும் அரசியல் அல்ல. இத் தேர்தலிலும் சமூகம் எதிர்பார்த்ததும் அதனைத்தான். சமூகத்தின் நிலைப்பாடு அறிந்தும் மகிந்தவுடனே ஒட்டிக் கொண்டிருந்தது மடமைத்தனமன்றி வேறில்லை.
மட்டுமன்றி இனவாத மதவாத செயற்பாடுகளுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களின் செயற்பாடுகளும் திருப்திகரமானதான இருக்கவில்லை.
ஒரு தேர்தலிலும் இல்லாதவாறு இத் தேர்தலில் தன் தலைமைக்கு மாற்றமாய் வாக்களித்தது அக்கரைப்பற்று மண். இதை அதாவுல்லாஹ் அவர்களுக்கு சமூகம் இழைத்த துரோகம் எனக் கூற முடியாது. ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் அவர் செய்த துரோகத்துக்கான பதிலடி. இத் தேர்தலில் அபிவிருத்தி மட்டும் அரசியல் அல்ல என பாடம் கற்பித்திருக்கிறது அக்கரைப்பற்று மண் அதாவுல்லாஹ் அவர்களுக்கு. அவரின் அரசியல் பலத்தை திறம்படக்காட்டும் சம்மாந்துறைத் தொகுதியில் வெறும் 7,797 வாக்குகளையே மகிந்தவுக்குப் பெற்றுக் கொடுத்தார்.
இன்னொறு புறம் மைத்திரிபால அவர்கள் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டதும் ஊர் முழுக்க ஊர்வலம் சென்ற மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்கள் அக்கரைப்பற்று மக்கள் அதாவுல்லாஹ் அவர்களை புறக்கணித்து விட்டார்கள் என்ற தவறான கணிப்பில் அதாவுல்லாஹ்வின் இடத்தை பிடிக்க முயல்கிறார். அவர் கூறியே சமூகம் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வாக்களித்தாக அவர் எண்ணினால் அரசியலில் அவர் படிக்க வேண்டிய பாடம் இன்னும் நிறையவேயிருக்கிறது. அல்லது இனி வரும் தேர்தல்களில் அதாவுல்லாஹ்வுக்கு அல்லாமல் தனக்கே அக்கரைப்பற்று மக்களின் பெருவாரியான வாக்குகள் கிடைக்கும் என அவர் நினைத்தாலும் லைசன் எடுத்த மடத்தனம் அன்றி வேறு எதுவாகவும் அந் நினைப்பு இருக்க முடியாது.
அதாவுல்லாஹ் அவர்களின் தெளிவற்ற அரசியல் சாணக்கியத்தின் விளைவே தவம் அவர்களின் வாகனம் தொட்டு அனைத்திலும் கை வைத்து சென்ற மாகாண சபைத் தேர்தலில் அனுதாப அலையால் தவம் அவர்களை மாகாண சபைக்கு அனுப்பியும் இருந்தது. அதே அனுதாப அலையை மீளவும் சமூகம் மாகண சபை உறுப்பினர் தவம் அவரகளுக்கு கொடுக்காது.
அக்கரைப்பற்று மண் புறக்கணித்தது மகிந்தவை தானே அன்றி அதாவுல்லாஹ்வை அல்ல. இதற்குரிய பதிலை வரும் பொதுத் தேர்தலில் இதே அக்கரைப்பற்று மண் வழங்கும். காரணம் அன்னத்துக்கு புள்ளடியிட்ட பலர் அமைச்சரின் நிலை இப்படியாகிவிட்டதே என ச்சுக் கொட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பனிரெண்டு வருடமாக எதிர்க்கட்சி அரசியல் செய்யாத முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் தனது அரசியல் போக்கை கொள்கை ரீதியாக மாற்ற வேண்டிய சந்தர்ப்பம் ஒன்றை மக்களாகவே வழங்கியுள்ளார்கள். இத் தேர்தலின் மூலம் சமூகம் அவரை வழிநடத்த ஆரம்பிக்கிறது. அதை உரிய முறையில் பயன்படுத்த வேண்டியது அவரின் கைகளில் தான் உள்ளது. குறிப்பாக அனைத்து தேர்தல்களிலும் அவர் கையிலெடுக்கும் பிரதேசவாதத்தை விட்டெறிவது சிறப்பாகும். ஒரு போதும் இல்லாதவாறு இத் தேர்தலில் கல்முனை மாநகர சபையை உடைக்க முனைந்தமை அவரின் அரசியல் வங்குரோத்தையே திறம்படக் காட்டுகிறது.
அமைச்சர் அதாவுல்லாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்க அக்கரைப்பற்று மண் விரும்பாது. அப்படியன்றி தவம் அவர்களை நம்பி முகாவிற்று வாக்களிக்குமானால் அதுவே அக்கரைப்பற்று மண் தனக்குத் தானே செய்யும் துரோகமாகும்.
-உறங்காத விழிகள்-


0 Comments