Subscribe Us

header ads

நகர அபிவிருத்தி மற்றும் நீர் வள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு உலமா கட்சி வாழ்த்து

நகர அபிவிருத்தி மற்றும் நீர் வள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு உலமா கட்சி வாழ்த்து தெரிவித்திருப்பதுடன் இந்த அமைச்சின் மூலம் கொழும்பில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுப்பார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவியினால் அமைச்சர் ரஊப் ஹக்கீமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சேனாவினால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு மிகவும் தரமானதும் சிறந்ததுமாகும் என்பது உறுதியான விடயமாகும். இத்தகைய சிறந்த அமைச்சு கிடைக்கப்பெற்றதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு உலமா கட்சி வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்வடைகிறது. கடந்த ஆட்சியின் போது முன்னாள் ஜனாதிபதியின் கையில் இருந்த, பாதுகாப்புச் செயலாளரின்  பொறுப்பில் இருந்த மேற்படி அமைச்சு மு. கா தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு கிடைக்கப்பெற்றிருப்பது வரலாற்றில் முஸ்லிம்களுக்கு கிடைத்த பெருமையாகும். முஸ்லிம்களின் அதிக வாக்குகளை பெற்ற கட்சி என்ற வகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு  இவ் அமைச்சு வழங்கப்பட்டதன் மூலம் ஏழை மக்களின் நல் வாழ்வுக்கு வலியுறுத்தும் இஸ்லாத்தை பின்பற்றும் ஒருவர் என்பதன் மூலம் அவரால் சகல ஏழைகளும் நன்மை பெறுவர் என எதிர் பார்க்கிறோம்.

இந்த வகையில் கடந்த ஆட்சியின் போது நகர அபிவிருத்தி என்ற பெயரில் கொழும்பில் முஸ்லிம்கள் காலாகாலமாக வாழ்ந்த பல இடங்கள் உடைக்கப்பட்டன. அவர்களுக்குரிய நிரந்தர வீடுகளை கையளிக்காது வாடகைக்கு வீடுகளை பெறும்படி சிறு தொகை பணம் வழங்கப்பட்டு வருகிறது. அம்மக்கள் உறவினர்கள் வீடுகளில் அகதிகள் போன்று வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் இம்மக்களுக்கு நிரந்தர வீடுகள் உடனடியாக கிடைக்க அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என உலமா கட்சி எதிர் பார்க்கிறது.

அதே போல் முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் அமைச்சர் அஷ்ரபினால் முன்வைக்கப்பட்டு விடுபட்டுப்போன கல்முனை புதிய நகர அபிவிருத்தியையும் உடனடியாக ஹக்கீம் முன்னெடுப்பார் என நம்புகிறோம். அதே போல் சம்மாந்துறை தொகுதிக்குட்பட்ட கொளனி பகுதிகளில் வாழும் மக்கள் நீண்ட காலமாக எதிர் நோக்கும் குடிநீர் மற்றும் நீர் இல்லா வாய்க்கால்கள் பிரச்சினைகளும் அமைச்சர் ஹக்கீமினால் எதிர் வரும் பொது தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம் எனவும் உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments