இலங்கைக்கு எதிரான 6வது ஒருநாள் போட்டியில் 120 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ள நியூஸிலாந்து அணி, ஒரு போட்டி மீதமிருக்க 4-1 என முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.
நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை இரண்டு டெஸ்ட் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகளில் நியூஸிலாந்தை எதிர்கொள்கின்றது.
முன்னதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டிகளில், இரண்டிலும் நியூஸிலாந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரில் முன்னதாக இடம்பெற்ற ஐந்து போட்டிகளில் ஒன்று கைவிடப்பட்ட நிலையில், மூன்றில் நியூஸிலாந்தும் ஒன்றில் இலங்கையும் வெற்றி பெற்றிருந்தன.
இந்தநிலையில் 6வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் நாணயசுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து களமிறங்கியது.
அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய கே.எஸ்.வில்லியம்ஸன் 97 ஓட்டங்களையும், டெய்லர் 96 ஓட்டங்களையும் குவித்தனர்.
50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 315 ஓட்டங்களை விளாசியது.
இதனையடுத்து 316 என்ற வெற்றி இலக்கை துரத்திய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களில் சங்கக்கார (81 ஓட்டங்கள்) தவிர வேறு எவரும் அரைச்சதம் கூட பெறாத நிலையில் வௌியேறினர்.
இதன்படி 40.3 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை 195 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஏழாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 29ம் திகதி இடம்பெறவுள்ளது.
0 Comments