Subscribe Us

வடக்கின் புதிய ஆளுநரை முழு மனதுடன் வரவேற்போம்

இலங்கையில் சமாதானம், அமைதி ஏற்படுவதில் விருப்பமில்லாதவர்கள் மூவினத்திலும் இருக்கவே செய்கின்றனர்.

நாட்டில் தொடர்ந்தும் குழப்பம் இருக்க வேண்டும் என்ற மனநிலை நம் இனத்தைச் சேர்ந்தவர்களிடமும் இருக்கின்றது என்ற உண்மையையும் இவ்விடத்தில் தனித்துவமாகக் குறிப்பிட்டாக வேண்டும்.

இவ்வாறான மனநிலை உடையவர்களை திருத்துவது என்பதை விட, அவர்கள் தாமாகத் திருந்துவதே சாத்தியமானது.

நாடு குழப்பநிலையில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் அடிப்படை, சுயநலமாகும். இத்தகைய சுயநலப் போக்குடையவர்கள் ஏழை மக்களின் துன்பங்களை ஒருபோதும் அறிந்திலர்.

நாம் சாப்பிடுகின்றோம் என்பதற்காக எல்லோரும் சாப்பிடுகின்றனர் என்ற மனநிலை இருக்கும் வரை நாடு குழம்பியிருக்கட்டும் என்ற நினைப்பும் தொடரவே செய்யும்.

எதுவாயினும் ஜனவரி 8ந் திகதி நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு முன்னேற்றகரமான விடயங்கள் நடந்து கொண்டிருப்பது மன ஆறுதலைத் தருகிறது.

புதிதாகப் பதவி ஏற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும். இதை நாம் கூறும் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு என்ன? நடக்கும் என்று கேட்பவர்களும் இருக்கவே செய்வர்.

அத்தகைய கேள்வி நியாயமானதாயினும் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் போது மக்களின் மனச்சுமை தீர்ந்து போகின்றது.

தன் பிள்ளையின் ஒருவேளை உணவுக்கு அந்தரப்படுகின்ற தாயின் மனநிலையை இனப்பிரச்சினை என்ற எல்லையுடன் தொடர்புபடுத்த முடியாது.

எனவே முதலில் அடிப்படைப் பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியம்.

எனினும் அரசியல் மாற்றம் அமைதியான சூழலை ஏற்படுத்தியுள்ளது என்பதற்காக, சொந்த விருப்பு வெறுப்புகளை அரங்கேற்ற நினைப்பது அபத்தம்.

இத்தகைய முயற்சிகள் சமாதான சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமே தவிர, சுமுகமான சூழமைவுக்கு ஒரு போதும் உதவமாட்டா.

இருந்தும் சிலர் தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு சமாதான சூழலைப் பயன்படுத்த முற்படுகின்றனர். இவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்பாக இருப்பதுடன் இத்தகையவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டும் பெரும் பணியை செய்தாக வேண்டும்.

மக்கள் நினைத்தால், எதுவும் நடக்கும் என்ற பயம் மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்தால் மட்டுமே அரசியல்வாதிகளின் குறுக்குத்தனங்கள் முடிவுக்கு வரும். இவை ஒரு புறம் இருக்க, ஆட்சி மாற்றத்தின் விளைவாக, வடக்கு மாகாண சபைக்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆளுநரை வரவேற்பது நமது கடமை. வடக்கின் ஆளுநராக இருந்த ஜி.ஏ. சந்திரசிறியை தமிழ் மக்கள் எதிர்த்ததன் காரணங்களில் ஒன்று அவர் ஒரு சிங்களவர் என்பதாகத் தென்பகுதி மக்கள் கருதி விடக்கூடாது.

அந்தக் கருத்து நிலை ஏற்படாமல் இருப்பதற்கும்; வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் சுமுகமாக நடப்பதற்கும் புதிய ஆளுநரை மனப்பூர்வமாக வரவேற்பது அவசியம். அந்த வரவேற்பு புதிய ஆளுநருக்கும் எமக்குமான உறவை நெருக்கமடையச் செய்யும்.

லயனல் பெர்னாண்டோ என்ற யாழ்ப்பாணத்தின் முன்னாள் அரச அதிபர் ஒரு சிங்களவராக இருந்த போதிலும் அவர் தமிழ் மக்களுக்குச் சிறந்த சேவையாற்றினார் என்ற பதிவு நம் மண்ணில் உண்டு. ஆகையால் புதிய ஆளுநரையும் நம்பிக்கையோடு வரவேற்போம்.

Post a Comment

0 Comments