குடியரசு தினவிழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொள்ள இருப்பதையொட்டி தலைநகர் டெல்லி மற்றும் ஆக்ரா, மதுரா நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
குடியரசு தினவிழாவில் ஒபாமா
வருகிற 26–ந் தேதி குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொள்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது இதுவே முதல் தடவை ஆகும்.
கடந்த 2010–ம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமா பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அதன்பிறகு அவர், இப்போது மீண்டும் இந்தியா வருகிறார்.
ஒப்பந்தங்கள்
குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக ஒபாமா தனது மனைவி மிச்செல்லுடன் 25–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி வருகிறார். அவருடன் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றும் வருகிறது.
டெல்லி வந்து சேர்ந்ததும் ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேசுகிறார்கள்.
அப்போது, இந்தியா–அமெரிக்கா இடையேயான நல்லுறவை மேம்படுத்துதல், பாதுகாப்பு, பொருளாதார துறைகளில் ஒத்துழைத்து செயல்படுதல், பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒருங்கிணைந்து செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துகிறார்கள். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
தொழில் அதிபர்களுடன் சந்திப்பு
மறுநாள் குடியரசு தின விழாவில் ஒபமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அதையொட்டி நடைபெறும் ராணுவ அணிவகுப்பை பார்வையிடுகிறார்.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும், இந்திய தொழில் அதிபர்களை ஒபாமா சந்தித்து பேசுகிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியும் உடன் இருப்பார். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு தலைவர்கள் முன்னிலையிலும் இந்திய நிறுவனங்களுக்கும், அமெரிக்க நிறுவனங்களுக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்ரா செல்கிறார்
மறுநாள் ஒபாமா, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடுவதற்காக சாலை மார்க்கமாக ஆக்ரா செல்கிறார். இதையொட்டி ஆக்ராவிலும், ஆக்ரா செல்லும் வழியில் உள்ள மதுரா நகரிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
டெல்லி முதல் ஆக்ரா வரையிலான 165 கிலோ மீட்டர் நீள ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலை மேம்படுத்தப்பட்டு உள்ளது. சாலையின் முக்கிய இடங்களில் இப்போதே பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு உள்ளனர். மதுரா நகரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பிருந்தாவன் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையம், பள்ளிக்கூடங்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் ஐ.ஜி. சுனில் குப்தா ஆக்ரா நகரில் உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பெரிய ஓட்டல்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
ஒபாமாவின் வருகையையொட்டி அமெரிக்க ரகசிய பாதுகாப்பு துறை அதிகாரிகள் டெல்லி வந்துள்ளனர். அவர்கள் இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகையில், ஒபாமா ஆக்ரா செல்லும் போது, டெல்லி–ஆக்ரா சாலையில் உள்ள ஓட்டல்கள், உணவு விடுதிகளின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தங்கள் கவலையை வெளிப்படுத்தினார்கள்.
இதனால் ஒபாமா பயணம் மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாகவே அந்த சாலையில் உள்ள உணவகங்களை மூடிவிடுவது நல்லது என்றும் அவர்கள் யோசனை தெரிவித்து உள்ளனர். ஒபாமாவின் ஆக்ரா பயணத்தின் போது அவசர கால மாற்றுப்பாதைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஆலோசனை
ஒபாமாவின் வருகையையொட்டி டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி, டெல்லியையொட்டி அமைந்துள்ள காஜியாபாத், நொய்டா, சோனிபட், குர்கான், ஜஜ்ஜார் நகர போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, நகரின் எல்லைப்பகுதிகளில் கிரிமினல்களின் நடமாட்டத்தை கண்காணிக்குமாறும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 27–ந் தேதி ஒபாமா அமெரிக்கா திரும்புகிறார்.


0 Comments