அமானி சாரா
தமது வீடுகளுக்கோ வேறு இடங்களுக்கோ மின்சார வசதியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரே நாள் சேவையினை அடுத்த இரு வாரங்களுக்குள் அறிமுகப்படுத்த இருப்பதாக மின் சக்தி எரிபொருள் துறை இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். இதன் மூலம் பயனாளர்கள் இதுவரை காலமும் மின்சார வசதியைப் பெற்றுக் கொள்வதற்காக அனுபவித்த அசௌகரியங்கள் முற்றாக நீக்கப்பட்டு தமது தேவையினை எதுவித தாமதமுமின்றி மிக விரைவாகவும் அதேநேரம் ஒரே தினத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதியைப் பெறுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இன்று காலை தேத்தாபொல பிரதேசத்தில் மின் விநியோகத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அடுத்த சுதந்திர தினத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் ஒருவர் தனக்கு மின்வசதி தேவைப்படுவது தொடர்பில் அதற்காக வழங்கப்படும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு தகவலை வழங்க வேண்டும். அதன் பின்னர் அன்றைய தினத்திற்குள் குறித்த இடத்திற்கு வரும் மின்சார சபை அதிகாரிகள் அதற்கான கட்டணங்களை அவ்விடத்திலேயே பெற்றுக் கொண்டு குறித்த இடத்திற்குரிய மின்சார வசதியை வழங்குவார்கள். இத்திட்டத்தின் ஊடாக மக்கள் தமது தேவையினை ஒரே தினத்திலேயே பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவார்கள். அவர்களுக்கு எந்தவித அலைச்சலுமில்லை. விண்ணப்பங்கள் நிரப்பும் தேவையுமில்லை. அதிகாரிகளைத் தேடித்திரியவும் வேண்டியதில்லை என்றும் இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பாலித ரங்கே பண்டார மேலும் கூறினார்.
புதிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் 100 நாள் துரித வேலைத்திட்டத்தின் கீழ் நூறு தினங்கள் முடிவடைய முன்னர் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சகல பிரதேசங்களுக்கும் மின் சாரம் வழங்கப்படும். அதற்கான பணிகள் ஏற்கனவெ ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நூறு நாள் முடிவடைந்ததும் வடமேல் மாகாணத்தில் மின்சாரம் இல்லாத வீடுகள் இருக்காது. நாம் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை துரித கெதியில் நிறைவேற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வாறு நாம் வழங்கிய வாக்குறுதிகளுள் ஒன்றான எரிபொருள் விலைகள் குறைப்பு நாம் பதவியேற்று இரு வாரங்கள் நிறைவடைய முன்னர் நிறைவேற்றியிருக்கின்றோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் ஒன்றை முதன் முதலில் எனது அமைச்சின் ஊடாகவே நிறைவேற்ற முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இது இத்துடன் நிறைவு பெறாது. எனது அமைச்சின் ஊடாக இன்னும் பல சலுகைகளை மக்களுக்கு வழங்க உள்ளோம். மின் கட்டணங்களைக் குறைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதேவேளை இனிமேல் மின்சார தடங்கல்கள் ஏற்படும் போது அது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள தகவல் வழங்கும் மையத்திற்கு தெரிவித்தால் உடனடியாக அத்தடங்கல் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் இங்கு கூறினார். இதற்கான தொலைபேசி இலக்கத்தினையும் இதன் போது அமைச்சர் வழங்கினார்.
0 Comments