எனது தாய் மண், எனது பிள்ளைகளை நேசிக்கின்றேன் கூறிக்கொண்டிருந்த ராஜபக்ஷ அரசாங்கம் எப்படியான கொடூர ஆட்சியை முன்னெடுத்தது என்பதை தற்போது புரிந்து கொள்ள முடிந்துள்ளதாக மின் வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பெட்றோல் உட்பட எரிபொருட்களுக்காக அறவிடப்பட்ட வரி உட்பட அனைத்து பணமும் ராஜபக்ஷ குடும்பத்தின் பயங்கரமான ஊழலுக்கும் மோசடியான திட்டங்களுக்குமே சென்றுள்ளது.
இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களும் வரிகளை அறவிட்டன. செல்வந்த நிறுவனங்கள், சிகரட், மதுபானம் போன்ற தீங்கு விளைவிக்கும் வர்த்தகங்களிடம் இருந்து அந்த அரசாங்கங்கள் வரியை அறவிட்டன.
எனினும் ராஜபக்ஷ அரசாங்கம் அத்தியாவசிய உணவு பொருட்கள் போன்றவற்றில் இருந்தே வரிகளை அறவிட்டது. இதுவே ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிறப்பு.
எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வெளிப்படையான விலை சூத்திரத்தை நாம் உருவாக்குவோம். அதேபோல் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மின்சாரத்திற்கும் புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்துவோம்.
வறுமையின் கீழ் வாழும் மக்களுக்கு இதன் போது விசேட நிவாரணத்தை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம்.
எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் கடந்த காலங்களில் எரிபொருளை கொள்வனவு செய்யாது தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஒன்றை உருவாக்கி காட்டுகின்றனர்.
ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் உட்பட புதிய அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணத்தை மக்களுக்கு வழங்குமாறு நான் எரிபொருள் நிலைய உரிமையாளர்களிடம் தயவாக கேட்டுக்கொள்கிறேன் எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.


0 Comments