முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ஜூன் 15,2014 ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனா அமைப்பினால் இனவெறித் தாக்குதல் அளுத்கம,பேருவல,தர்ஹா நகரில் இடம் பெற்றமை யாவரும் அறிந்ததே.
அநியாயக்கார அரசாங்கத்தின் சூழ்ச்சியை முறியடித்து இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்நாட்டின் முஸ்லிம்களின் உள்ளங்களுக்கு ஒரு வகையான மனநிம்மதியை ஜனவரி 9,2014 ஆம் திகதி அல்லாஹ{ ரப்புல் ஆலமீன் கொண்டு வந்து சேர்த்தான். அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிலையில் இந்த வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொண்டாடும் நமது முஸ்லிம் இளைஞர்கள் அல்லாஹ்வை மறந்து அளவு கடந்து செல்வதை காணக்கூடியதாக இருக்கிறது.
குத்பாக்கள்,பயான்கள் என்பவற்றில் எவ்வளவோ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் அதையும் மீறி ஆங்காங்கே பட்டாசுகளை கொழுத்துவதும், இசைக் கச்சேரிகளை வைத்து நடனமாடுவதும், பொது மக்களுக்கு குறிப்பாக அந்நிய பெரும்பான்மை மக்களுக்கு தொந்தரவு தருவதாக நடந்து கொள்வதும், பிரதான வீதிகளில், பாதையோரங்களில் பால்ச் சோறு (கிரிபத்) வழங்கி சிங்கள மக்களுக்கு தமது கொண்டாட்டத்தை வேண்டுமென்றே வெளிப்படுத்திக்காட்டி அவர்களின் மனதில் ஒரு வகையான துவேச உணர்வு உருவாக வாய்ப்புகளை ஏற்படுத்துவதும் வேதனை தரும் விடயங்களாக அமைந்துள்ளது.
இந்நிலை முற்றிப் போய் யாருக்குமே அடங்காதவர்களாக நமது இளைஞர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால் “அல்லாஹ் நமக்களித்த வெற்றி வந்ந வேகத்திலேயே கைமாறிப் போய் விடுமோ” என்ற அச்சம் ஏற்பட்டிருக்கின்றது.
புதிய ஜனாதிபதி அவர்கள் பதவியேற்ற சந்தர்ப்பத்தில் தர்ஹா நகர் வெலிபிடிய என்ற இடத்தில் வாழும் சில முஸ்லிம் இளைஞர்கள் பெரும்பான்மை மக்கள் வாழும் இடத்திற்குப் போய் வேண்டுமென்றே பட்டாசு கொழுத்தி விட்டி ஓடி வந்திருக்கிறார்கள்.
ஒரு சிங்களப் பெண் “நீங்கள் ஏன் இவ்வளவு கொண்டாட்டம் எடுக்கிறீர்கள். புதிய ஜனாதிபதி ஒரு முஸ்லிம் அல்ல. அவர் ஒரு பௌத்தர் என்பதை மறக்க வேண்டாம்” என முஸ்லிம் இளைஞர்களை எச்சரித்துள்ளார்.
இப்படியான விடயங்களையெல்லாம் செவிமடுத்த போது இந்த இளைஞர்களை எப்படியாவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என தர்ஹா நகரில் உள்ள உலமாக்களில் சிலர் நேற்றிரவு அவசர ஆலோசணை செய்து இந்த இளைஞர்களின் அட்டகாசம் நடக்கும் சில இடங்களுக்கு நேரடியாக சென்று விளக்கமளித்தார்கள்.
“இது அல்லாஹ் நமக்களித்த வெற்றி. நாம் அல்லாஹ்வுக்கு பொறுத்தமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தந்த வெற்றியை பிடுங்கி எடுத்துவிடுவான். அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ள வேண்டும். பாட்டு பாடுவது, டான்ஸ் ஆடுவது, பட்டாசு கொளுத்துவது எல்லாம் அல்லாஹ் விரும்பும் காரியமல்ல” போன்ற விடயங்கள் உணர்த்தப்பட்டது.
அந்த இளைஞர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்ய வேண்டும். அவர்களும் உலமாக்களின் வருகைக்கு நன்றி கூறி அவர்களது தவறை ஏற்று உடனடியாக அனைத்தையும் நிறுத்தி விட்டார்கள்.
இப்படியான செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் தர்ஹா நகரில் மட்டுமல்ல எங்கிருந்தாலும் முஸ்லிம் சமூகத்தின் நலனைக் கருத்திற் கொண்டு அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வின் மார்க்கத்துக்காக அவற்றை கை விடுமாறு அன்பாக வேண்டிக் கொள்கிறோம்..
இப்படிக்கு
மவ்லவி நஸ்ரி ஜிப்ரி (ஸலபி)
தாருல் ஹுதா, தர்ஹா நகர்.


0 Comments