Subscribe Us

header ads

மைத்திரியின் அரசாங்கத்தில் ரவுப் ஹக்கீமுக்கு கப்பல் துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சு வழங்கப்படும் சாத்தியம்

சில தினங்களுக்குள் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு அவர்கள் விரும்பும் அமைச்சு பொறுப்புகளை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவின் நிர்வாகம் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் இரு அமைச்சு பொறுப்புகளையும் ஒரு பிரதியமைச்சினையும் அல்லது ஓர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பொறுப்புடன் இரண்டு அல்லது மூன்று பிரதியமைச்சர் பொறுப்புகளையும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த விடயத்தில் பஷீர் ஷேகு தாவுதுக்கு அமைச்சர் பொறுப்பு ஒன்றினை வழங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸ் தலைமை கேட்டுக் கொண்டாலும் அவருக்கு அதனை வழங்குவதில் புதிய நிர்வாகம் கரிசனை கொள்ளமாட்டாது எனறு நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமினால் தனக்குரித்தான அதிகாரத்தின் விருப்பத் தன்மையைக் கொண்டு பஷீர் ஷேகு தாவுதுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டுமென்று ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும் அதனை முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட உறுப்பினர்களில் பலர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அந்தக் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி ஹஸன் அலி, ஹரீஸ், திருமலை மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் ஆகிய மூவரில் இருவருக்கு பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ள விடயம் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக உள்ள நிலையில் இரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் என்று வரும் போது இதில் மாற்றம் ஏற்டலாமென தெரிய வருகிறது. ரவுப் ஹக்கீமுக்கு கப்பல் துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அல்லது கல்வித்துறையுடன் தொடர்புள்ள அமைச்சு வழங்கப்படும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் அவரது விருப்பம் பெறப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்டவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு அவர் முன்னர் வகித்த சக்திமிக்க அதே அமைச்சு பொறுப்பை அல்லது அவர் விரும்பும் பிறிதொரு அமைச்சினை வழங்கும் நிலையில் மைத்திரி நிர்வாகம் உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் அமீர் அலிக்கு பிரதியமைச்சர் பதவி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் காத்திரமான பொறுப்புள்ள பிரதியமைச்சு பொறுப்பு அவருக்கு வழங்கப்படவுள்ளது.

முன்னாள் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கும் பதவி வழங்கப்படவுள்ளது.

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

Post a Comment

0 Comments