கொழும்பிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அருகில் வைத்து, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு பணம் கொடுத்ததாக போதைபொருள் வர்த்தகரான வெலே சுதா என்று அழைக்கப்படும் சமந்த குமார தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் செவ்வாய்கிழமை(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஹெரோய்ன் போதைபொருளை கடத்திய சந்தேகத்தின் பேரில் கடந்த 12ஆம் திகதி வெளிநாடொன்றில் வைத்து வெலே சுதா கைது செய்யப்பட்டார்.
பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெலே சுதாவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெலே சுதா கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து சுமார் 1,000 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோய்ன் போதைபொருளை கடத்தியுள்ளார்.
வெலே சுதாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தான் பணம் வழங்கியதாக தெரிவித்துள்ளார். அதனையடுத்து குறித்த உறுப்பினரின் வங்கி கணக்குகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அவர்களது பெயரில் உள்ள சொத்துகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்படுகின்றன.
விசாரணைகளின் பின்னர் போதை பொருள் வியாபாரம் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தை அரசுடைமையாக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.


0 Comments