நூறு நாள் வேலைத்திட்டத்தில் சேறு பூசுவதை தவிர்த்து வாக்களித்த மக்கள் நலனுக்கு முன்னுரிமை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
நூறு நாள் வேலைத்திட்டம் எனும் அடிப்படையில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது நிகழ்ச்சி நிரலை செவ்வனே செய்து வருகின்றமை பாராட்டுக்குரியதாகும்.
அந்தவகையில், ஜனாதிபதி அண்மையில் பொலநறுவையில் சிறுநீரக நோயாளர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் வழங்கி அத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தமை நூறு நாள் வேலைத்திட்டத்தில் செய்யப்பட்ட மிகச் சிறந்த செயற்பாடாக நான் கருதுகிறேன்.
இதுபோல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது தனிப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டத்தின் நிகழ்ச்சி நிரலை பொது மக்கள் நலன், அபிவிருத்தி நடவடிக்கையின் பால் செயற்படுத்தி வருகிறார்.
இதைவிடுத்து, இந்த அரசின் ஏனைய ஒரு சில அமைச்சர்களும்,முக்கியஸ்தர்களும் நூறு நாள் வேலைத்திட்டம் எனும் போர்வையில் ஒவ்வொரு நாளும் ஊடக சந்திப்புகளை வைத்து கடந்த அரசாங்கத்தின் மீது சேறு பூசிக் கொண்டிருப்பது காலம் கடத்தும் ஒரு செயலாகவே அமையும்.
மைத்திரி யுகத்தில் முதலில் ஆரம்பிக்கபட்டிருக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தை நூறு வருடங்களுக்கு இழுத்தடிக்கும் கண் துடைப்பு நாடகமாகவே இதனை பொது மக்கள் அவதானிக்கத் தொடங்கி விட்டனர்.
வெளிவரும் லஞ்சம்,ஊழல்,மோசடிகளை செய்தவர்களுக்கு வெறுமனே இந்த நூறு நாட்களில் தண்டனை பெற்றுக் கொடுக்க முடியாது. எப்படியாயினும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தகுந்த தண்டனை பெற வேண்டும். இதில் மாற்றுக் கருத்தில்லை.
மாற்றம் ஒன்றை எதிர்பார்த்த மக்களுக்கு கிடைத்த மாற்றம் ஆரோக்கியமானதாக அமைய வேண்டுமே தவிர, அடுத்தவர் குறை காண்பதில் அந்த மாற்றத்தை பயன்படுத்துவது உகந்ததல்ல.
கடைசி நேரத்தில் கட்சி மாறியவர்கள் புனிதர்களுமல்ல. கடைசிவரை கட்சியில் இருப்பவர்கள் மோசமானவர்களுமல்ல என்பதை சேறு பூசும், அவதூறு சொல்லும் நபர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், இந்த அரசாங்கத்தில் பரவலாக எங்குமே பழிவாங்கும் படலம் ஆரம்பித்திருக்கிறது. தனி நபர்களை அச்சுறுத்தி பதவி நிலைகளில் இருந்து தானாக விலகிச் செல்லுமாறும் கோரப்படுகிறது. இவைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
எனவே, இவ்வாறான பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு இந்த அரசு மௌன அங்கீகாரம் வழங்கி விட்டதா..? இவைகள் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் மேற்பார்வையிலா அல்லது அரசில் இருக்கும் ஏனைய அரசியல்வாதிகளின் தூண்டுதல்களின் பேரில் நடைபெறுகிறதா என்பதை அனைவரும் நன்கு சிந்திக்க வேண்டும்.
நூறு வேலைத்திட்டத்தில் முஸ்லிம்களின் எவ்வளவோ பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். அதற்கான எந்தவித நகர்வுகளையும் எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுவரை செய்யாதது வேதனைக்குரியதாகும்.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் 87 ஆவது நாளில் மிருகவதைக்கு எதிரான ஒரு சட்டத்தை இந்த அரசு அமுல்படுத்துமென நான் அப்போது சொன்னேன். அது நமது குர்பான்,உழ்கிய்யா போன்ற கடமைகளுக்கு இடைஞ்சலாக அமையலாம்.
இருந்த போதிலும், அந்த திட்டத்தின் ஊடாக முஸ்லிம்களின் குர்பான் கொடுத்தல் போன்ற மதக் கடமைகளுக்கு எந்தவித எதிர் வினைகளும் ஏற்படாது என சிரேஸ்ட சட்டத்தரணி சுஹைர் அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார். அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
அன்று பொதுபல சேனா அமைப்பை தண்டிக்க வேண்டும். கூண்டில் ஏற்ற வேண்டும் என்றெல்லாம் உணர்ச்சி ததும்ப பேசிய முஸ்லிம் அரசியல்வாதிகள், இன்று அதிகாரம் கையில் கிடைத்த போது வாய் மூடி மௌனிகளாக இருப்பது ஏன்?
பேருவளை-தர்ஹா நகர் கலவரத்தில் இரண்டு உயிர்களை பறித்த சூத்திரதாரிகள் யார்? அவர்களை ஏன் இன்னும் இந்த அரசாவது சட்டத்தின் முன் கொண்டு வரவில்லை. அதற்கான அழுத்தங்கள் இன்னும் பிரயோகிக்கப்பட வில்லையா?
அமுலில் இருக்கும் இந்த நூறு நாள் திட்டத்தில் அதற்கான அழுத்தங்களை,நெருக்குதல்களை இந்த அரசுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்னும் கொடுப்பதாயில்லை. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
பேருவளை-தர்ஹா நகர் அட்டூழியம் செய்த பொது பல சேனா எனும் அந்த கடும் போக்கு எதிராக இன்னும் யாரும் போர்க் கொடி தூக்க வில்லை.
கடும்போக்கு இனவாதிகள் ஒவ்வொரு வாரங்களிலும் ஊடக சந்திப்புகளை நடாத்தி இன்றும் சுதந்திரமாக இனவாதம் பேசுகிறார்கள். அவற்றை இன்னும் யாரும் தட்டிக் கேட்கவில்லை.
பேருவளை-தர்ஹா நகரில் நடந்த கொடிய வன்முறைகளை ஐ.நா.சபைக்கு ஆதாரங்களுடன் வழங்கியிருப்பதாக முஸ்லிம் தலைவர் ஒருவர் சொன்னார்.
ஆதாரங்கள்,சாட்சியங்கள் கையில் இருக்கும் போது ஏன் இந்த நூறு நாள் திட்டத்தில் இந்த அரசு கடும்போக்காளர்களை தண்டிக்கவில்லை..? இது பற்றி முஸ்லிம் அரசியல்வாதிகள் எமக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இப்போதும் அதிகாரம் இல்லை, பலம் இல்லை,ஏனைய உரிமைகள் இல்லை எனும் பழைய பல்லவியை முஸ்லிம் அரசியல்வாதிகள் கை விட்டு முஸ்லிம்களின் நீதியான உரிமைகளை பெற்றுத் தர முன் வர வேண்டும்
எனவே, முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் வீர வசனங்களை அள்ளியெறியாமல் ஏனைய காலங்களிலும் தூர நோக்குடன் சிந்தித்து தமது சமூகத்திற்கான நலன்கள் குறித்து உடனடி தீர்வு காணுதல் அவசியமாகும்.
-அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா-

0 Comments