Subscribe Us

header ads

எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.05 மணிக்கு எதிரணிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்றுக்  ண்டிருக்கின்றது.

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற மத ஆசீர்வாதம் இடம்பெறுகின்ற இந்நிகழ்வில் சரத் பொன்சேகா, சந்திரிகா பண்டாரநாயக்க, ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, மாதுளுவாவே சோபித தேரர்,  எம்.கே.எஸ். குணவர்தன , அர்ஜூன ரணதுங்க, ராஜித சேனாரத்ன, மனோகணேசன், நிர்மால் ரஞ்சித் தேவசிறி அத்துரலிய ரதன தேரர் ஆகியோர் உட்பட பலர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

சரத் பொன்சேகா உரை! 

மஹிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சியில் நாடு ஊழலின் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. இவ்வாறு இடம்பெற்று கொண்டிருக்கும் அரசாங்கத்தின் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டில் 80 வீதமான மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

எமது நோக்கம், பயணம் மற்றும் இலக்கு என்பன ஒன்றாக உள்ளதால் நாம் இந்த தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உரை:

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளோம். நாட்டில் ஊழல், இலஞ்சம்,கொள்ளை, கொலை, வெள்ளை வான் கடத்தல் என பல குற்றச் செயல்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. எனவே இவற்றை இல்லாதொழித்து நாட்டை பரிசுத்தமாக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. மக்களுக்காக செயற்பட வேண்டிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.

இதேவேளை சுதந்திரக் கட்சியில் இருந்து இன்னும் பலர் எம்மோடு வந்த இணையவுள்ளனர். இது சவாலான போராட்டம் என்றாலும் எமது உயிரை பணயம் வைத்து இந்நாட்டின் மக்களின் உயிரை காப்பாற்ற களமிறங்கியுள்ளோம்.

9 வருடங்கள் நான் அரசியலிலிருந்து விலகி இருந்தேன். நாடு அழிவுப் பாதைக்குச் செல்வதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் எமது நாட்டு பிள்ளைகளை அழிவிலிருந்து பாதுகாக்க சவாலான போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். என்றார்

மைத்திரிபால சிறிசேன உரை!

இலங்கையர் என்ற வகையில் சவால்களை எதிர்கொள்ளும் இந்நேரத்தில் பேதங்களை தவிர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை நான் மதிக்கிறேன். அதனை நான் நிறைவேற்றுவேன் என்றும் உறுதியளிக்கின்றேன்.

ரணில் விக்கிரமசிங்கவின் உரை!

அழிவடைந்து கொண்டிருக்கும் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப வேண்டும். பொதுமக்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டு கொண்டிருக்கின்றன. திறைச்சேரி பணம் ராஜபக்சவின் குடும்பத்தினால் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.

எனவே ராஜபக்ச குடும்பத்தை தோற்கடிப்பதை எமது நோக்கமாக கொண்டு புதிய அரசியல் முறைமையை ஏற்படுத்துவோம் என்றார்.

அசாத் சாலி உரை!

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்நாட்டு முஸ்லிம் மக்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவர். எனவே இந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவது நிச்சயமாகும்.

மனோ கணேசன் உரை!

வரலாற்று முக்கியதுவமிக்க நாள் இது. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் முழுமையாக உள்வாங்காவிட்டாலும் சிங்கள சகோதர்களுடன் இணைந்து எமது பயணத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

சோபித தேரர் உரை!

உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத ஜனாதிபதி பதவி எமது நாட்டில் இருக்கின்றது. இன்று பொலிஸ் திணைக்களத்தில் கூட நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அது அரசியல் ரீதியாக செயற்படுகின்றது.

ஜனாதிபதி தன்னிடம் பைல்கள் உள்ளதாக சொல்கிறார். அந்த பைல்கள் அவரிடம் பாதுகாப்பாக வைத்திருக்க கொடுக்கப்படவில்லை. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கொடுத்து விசாரணை செய்யவே கொடுக்கப்படுகின்றது. இன்று நீதித்துறை செயலிழந்துள்ளது. அதை ஜனாதிபதியே இயக்குகின்றார்.

 ஒப்பந்தங்கள் மற்றும் உடனடி குறிக்கோள்கள்

1.  நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை 100 நாட்களுக்குள் இல்லாதொழித்தல்.

2.  மக்களுக்கு பொறுப்பு கூறும் புதிய பாராளுமன்ற முறைமையை ஏற்படுத்தல்

3.  ஜனாதிபதி நாட்டின் தேசிய தலைவராக இருப்பதோடு தேவைக்கு ஏற்ப அதிகாரங்களும் பொறுப்புகளும் வழங்கப்படும்

4.  ஜனாதிபதி பதவியை நாட்டின் சின்னமாக பிரகடனம் படுத்தல்

5.  அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தை இல்லாதொழித்தல்

6.  நீதி சேவை, பொலிஸ் சேவை, தேர்தல் முறைமைகள் மற்றும் கணக்காய்வாளர் நிர்வாகம் ஆகியன சுயாதீனமாக செயற்பட வழிவகுத்தல்

7.  விகிதாசார தேர்தல் முறைமையை இல்லாதொழித்து ஒவ்வொரு பிரதேச மக்களும் தமக்கென ஓர் பாராமன்ற பிரதிநிதியை தெரிவு செய்யும் வகையில் பழைய பாராளுமன்ற தேர்தல் முறைமையை ஏற்படுத்தல்.

சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித்பிரேமதாஸ, ரவி கருநாணாயக்க, முசம்மில், சரத் பொன்சேகா, ஹேமகுமார நாணயக்கார, ராஜித சேனாரட்ன, திஸ்ஸ அத்தனாயக்க, அர்ஜுணா ரணதுங்க, மனோ கணேசன், மங்கள சமரவீர, டி.எம். சுவாமிநாதன் உட்பட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.




கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments