ஒருவர் வாய்விட்டுச் சிரிக்கும்போது அவரின் பற்கள் சொத்தையாகவோ, அழகற்றோ இருக்குமானால் அவரின் சிரிப்பே அசிங்கமாகிவிடும். சிரிப்பு மட்டுமல்ல. ஒருவரின் பேச்சு அழகாக இருப்பதற்கும் பற்கள்தான் காரணம். உடலின் எந்தப் பகுதியில் பிரச்சினை என்றாலும் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற ஓடும் நாம்,பல் தொடர்பான எந்தவொரு பிரச்சினைக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் மருத்துவ பரிசோதனையோ, ஆலோசனையோ செய்துகொள்வதில்லை. அலட்சிய மனோபாவம் ஒரு காரணம் என்றால், பற்சிகிச்சைகள் வலி நிறைந்ததாக இருப்பது இன்னொரு காரணம்.
நாள்தோறும் முன்னேறிவரும் பற்சிகிச்சைத் துறையில்,தற்போது ‘டயோட்’ எனப்படும் அதிநவீன சிகிச்சை பிரபலமானதாக விளங்குகிறது.
லேசர் சிகிச்சையின் அடுத்த கட்ட முன்னேற்றமாக வந்திருப்பதே டயோட் லேசர்.இந்தக் கருவி மூலம் வாய் மற்றும் ஈறு பகுதிகளில் உள்ள அனைத்து மென் திசுக்களிலும் அறுவை சிகிச்சை செய்ய முடியும். ரூட்கெனல், பயொப்ஸி, ஈறு, கட்டி,சீழ், வீக்கம் என்று 17 வகையான சிகிச்சைகளுக்கு இந்த டயோட் லேசர் பயன்படுகிறது. முன்பு பல் ஈறு பகுதியில் திசுவை அகற்ற வேண்டும் என்றால்,அதனை அறுத்துத் தைக்க வேண்டும். புதிய லேசர் கருவியின் முனையை, எந்த இடத்தில் திசு அகற்ற வேண்டுமோ அங்கு கொண்டுசென்றாலே போதும். தானாகவே அந்தப் பகுதியை வெட்ட ஆரம்பித்துவிடும். அப்படி வெட் டும்போது ஏற்படும் புண்ணை லேசர் கதிர்கள் விரைவாக ஆறவைத்துவிடும். இதனால், ரத்தக் கசிவும் குறையும்.
டயோட் லேசர் கருவியைப் பயன்படுத்தி, வாய் மற்றும் ஈறு பகுதியில் சிகிச்சை அளிக்கும்போது, நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கத் தேவை இல்லை. ஏனெனில்,இந்த சிகிச்சையில் வலி இல்லை. மிகவும் பயப்படும் ஒரு சிலருக்கு மட்டும் உணர்வு நீக்க மருந்து கொடுக்கிறோம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தையல் போடவும் அவசியம் இல்லை. இதுபோன்ற காரணங்களால், சிகிச்சைக்குப் பின் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளும் குறைகின்றன.
இந்த லேசர் கருவி அதிக அளவு வெப்பத்தை வெளியிடுவது இல்லை என்பதால்,நோயாளிகளுக்கு எந்தப் பக்கவிளைவும் ஏற்படுவது இல்லை.
ஆனால், தகுந்த மருத்துவ நிபுணர்கள் மூலமே இந்த சிகிச்சையைச் செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை இது. அப்படிச் செய்தால்தான் மிகச் சரியாக, பிரச்சினைக்குள்ளான பகுதியை மட்டும் சரிசெய்ய முடியும். இல்லாவிட்டால், வாயின் உட்பகுதியில் தேவையில்லாத காயங்களும் ஏற்படலாம்.
டொக்டர் எம். சதீஷ் குமார் (M.D.S Oral Pathologist and Dental Surgeon)
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments