புத்தளத்தில் அமைந்துள்ள ‘குவைத் வைத்தியசாலை’யில் கண்ணில் வெள்ளைப் படர்தல் நோயினால் பாதிக்கப்பட்ட 500 நோயாளிகளுக்கான இலவச சத்திர சிகிச்சையும் கண் பரிசோதனையும் 2014.10.25-ம் திகதி முதல் 31-ம் திகதி வரை தொடராக நடைபெறுகின்றது.
“கால தாமதமும் நெருக்கடியும் இல்லாமல் சத்திர சிகிச்சை நடைபெறுவது நல்ல விடயம், அதுவும் இலவசமாக நடத்தப்படுவது பெறுமதிமிக்கது. இவற்றைவிட இதன் மனித நேய நோக்கும் வைத்தியர்கள், ஊழியர்களின் இனிய சுபாவமும் மிகச் சிறப்பானது” எனக் கூறினார் அனுராதபுரம், மஹவைச் சேர்ந்த சந்திரா மாலனீ. இவர் தனது தாய் ஏ.பீ. நீலம்மா (வயது 71) சத்திர சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தார்.
சர்வதேச FIMA (Federation of Islamic Medical Association) ஃபிமா நிறுவனத்தின் வைத்தியர்கள்; வைத்திய தொழிநுட்பவியலாளர் குழு சத்திர சிகிச்சையை மேற்கொள்வதுடன், புத்தளத்தைச் சேர்ந்த வைத்தியர்களான ஏ.எச்.எம். இல்ஹாம், ஏ.ஜீ.எம். பாஹிம் ஆகியோரும் இவ் வைத்திய முகாமில் கடமையாற்றுகின்றனர்.
சத்திர சிகிச்சை தினங்களில் தொண்டர்களாகப் பணியாற்றுவோரின் சேவையை விசேடமாகக் குறிப்பிட்ட எம்.எச்.எம். நதீர் (இணைப்பதிகாரி), “தொண்டர்களாக 36 பேர் (ஆண் 20, பெண் 16) சேவையாற்றுகின்றனர். இவர்கள் ஸ்ரீலங்கா ஜமாதே இஸ்லாமி புத்தளம் கிளையினர், ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பினர் உட்பட மாவனல்லை, கம்பளை, பேருவலை, கின்னியா, மூதூர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்” எனத் தெரிவித்த அவர், “முன்னைய சந்தர்ப்பங்களை விட, பல வாலிபர்கள் தாமாக முன்வந்து தொண்டர்களாகப் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது” எனவும் கூறினார்.
கண்ணில் வெள்ளைப் படர்தலினால் பாதிக்கப்பட்ட வடமேற்கு, மத்திய, தென் மாகாணங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சை நடை-பெறுவதுடன் கிழக்கு, வடக்கு, வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த நோயாளர்களுக்கான பரிசோதனைகள் நடைபெறுகின்றன. இவர்களுக்கான சத்திர சிகிச்சை பிறிதொரு தினத்தில் நடைபெறவுள்ளன.
நன்றி: The Puttalam Times
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice






0 Comments