(கலாநிதி மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)
மியன்மாரில் பல்லாயிரக்காணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களை கொன்று குவித்த
சக்திகளுக்குப் பின்னால் இருந்தவர் என சர்வதேச சமூகம் இனம் கண்டுள்ள அஸின்
விராது எமனும் பௌத்த துறவி பொதுபல சேனாவின் ஏற்பாட்டில் இடம்பெறும் சங்க
மாநாட்டிற்கு பிரதம விருந்தினராக அழைக்கப் பட்டு வருகை தந்துள்ளமை இந்த
நாட்டின் குறிப்பாக பெரும்பான்மை சமூகத்தின் மதத்திற்கோ அரசியலுக்கோ எந்த
விதத்திலும் நன்மை பயக்கப் போவதில்லை.
மாறாக சிங்கள பௌத்தர்கள் போற்றும் பௌத்த மதத்திற்கும் தம்முடையது என உரிமை
கோரும் தேசத்திற்கும் சர்வதேச அளவில் அபகீர்த்தியை மாத்திரமே ஏற்படுத்தும்
என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இலங்கை வல்முஸ்லிம்களுக்கு எதிரான மத வெறியர்களின் காடைத்தனங்களை தான் ஒரு
பொழுதும் அங்கீகரிக்கப் போவதில்லை என நியூ யோர்க்கில் இஸ்லாமிய மாநாட்டு
அமைப்பினரிடம் உத்தரவாதமளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவினுடைய வார்த்தைகளை
உடனடியாகவே பொய்ப்பிக்கும் நடவடிக்கையே இதுவாகும்.
இலங்கையில் இருக்கும் நான்கு நிகாயவியானையும் சேர்ந்த தலைமைத் துறவிகள்
இதுவரை காலமும் கட்டிக் காத்து வந்த அகிம்சா வழி மதப் பாரம்பரியங்களை
நகைப்புக்கிடமாக்கும் செயலாகவே அஸின் விராது போன்ற சர்வதேச அளவில்
அபகீர்த்தியடைந்துள்ள கரங்களில் இரத்தக் கரை படிந்த ஒரு துறவியை தமது சமய
மாநாடு ஒன்றுக்கு கொண்டுவந்திருக்கின்றமை கருதப்படல் வேண்டும்.
அடுத்த சமூகங்களை விட எந்த விதத்திலும் குறைவில்லாத இந்த தேசத்தின் சகல
உரிமையும் சமத்துவமும் தேசப்பற்றும் உள்ள பிரஜைகளாகிய நாம் தேசத்திற்கு
அபகீர்த்தியை ஏற்படுத்தும் ,சமாதான சகவாழ்விற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்
எந்தவொரு நடவடிக்கையையும் அங்கீகரிக்கவும் மாட்டோம்..அதேவேளை மதவெறியின்
உச்ச கட்ட மட்டரகமான நடவடிக்கைகள் குறித்து அச்சம் கொள்ளவும் மாட்டோம்.
கால நேரம் கணித்து தேர்தல் ஒன்றை கருத்தில் இனமத வெறி வங்குரோத்து
அரசியலுக்காக முஸ்லிம்களை ஆத்திரமூட்டி - ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும்
எதிர்வினைகளை வரவழைத்து- பலிக்கடாவாக்க எந்தவொரு தரப்பினராவது கனவு
காண்பார்களாயின் அவர்களது அரசியல் ஆரோக்கியமானதும் சாணக்க்கியமானதும் அல்ல
என்பதனை உணர்ந்து கொள்ள அதிக காலம் எடுக்க மாட்டது என்பதே உண்மையாகும்.
குறிப்பிட்ட தேரரின் வருகை குறித்து கவலைப்பட வேண்டியவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்பதனையே நான் வலியுறுத்தி வந்துள்ளேன்.
0 Comments