முள்ளிப்பொத்தானை ஜபருல்லாஹ்
பலரும் பல நல்ல தீய திட்டங்களை ரூம் போட்டு யோசிப்பதாகத்தான் நாம் கேள்விப் பட்டிருப்போம்.ஆனால் அதற்கு மாறாக மக்கள் குறை கேட்டு நிவர்த்தி செய்ய ஒரு நாட்டின் பிரதமர் குடிசை போட்டு அந்த ஊரிலேயே தங்கி இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
என்ன நம்ப முடியவில்லையா?
எப்படி நம்பலாம் நம் நாட்டு அரசியல் தலைமைகள் தேர்தல் காலத்தில் கூட ஒரு ஊருக்கு செல்வதாயின் பூரண பாதுகாப்பும் சகல வசதியுடன் கூடிய சொகுசான இருப்பிடனகளும் தேவைப்படும்.இப்படிப் பழக்கப் பட்ட நமக்கு இதை எப்படியுமே நம்ப முடியாதுதான்.
நான் உண்மையை சொல்கிறேன் நம்பினால் நம்புங்கள். அதுதான் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், நுலுன்பை என்ற பழங்குடியின கிராமத்தில் தனது தலைமை அலுவலகத்தை விட்டுவிட்டு ஒரு வார காலத்துக்கு குடிசைப் போட்டு தங்கியுள்ளார்.
இக்கிராமம் டார்வின் நகரில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
இக்கிராமத்தில் உள்ள மக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு தனது அலுவலகத்தில் இருந்த சகல விதமான தொடர்புச்சாதனங்களையும் ஏற்றிக் கொண்டு குறித்த கிராமத்திற்கு விமானம் மூலம் சென்ற பிரதமர் டோனி அபோட்டை, அங்குள்ள மக்களும் அதிகாரிகளும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
தான் கடந்த வருடம், தேர்தலின் போது அந்த மக்களிடம் அளித்த தேர்தல் வாக்குறுதியாக, ஒருவாரம் அந்த பழங்குடியினரோடு தங்கி இருந்து அவர்களின் குறைகளை கண்டறிந்து தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.அன்று வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவே இன்று வந்துள்ளதாக பிரதமர் டோனி அபோட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஊரை அடித்து உலையில் போடும் நம் அரசியல் தலைமகள் மத்தியில் இவர் எம்மாத்திரம். நம்மவர்கள் இவரிடம் டியூஷன் எடுத்தால் சிறப்பாக இருக்கும்.


0 Comments