|
இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான அவர் நாளை சமர்ப்பிக்கவுள்ள வாய்மொழி அறிக்கையின் வரைவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த கால மற்றும் நிகழ்கால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் இதில் வலியுறுத்தியுள்ளார். |
|
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும்
தற்போது இடம்பெறுபவை குறித்து அடிப்படையான மற்றும் பரந்துபட்ட பலாபலன்களை
தரக்கூடிய பொறுப்புக்கூறும் செய்முறை அவசியமானது. கடந்த காலத்தை ஏற்றுக்
கொள்வதற்க்கும், தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதலை முடிவிற்கு கொண்டு
வருவதற்கும், சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும்
சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதற்கும் பொறுப்புக்கூறுதல்
அவசியமானது.
ஐ.நா மனித உரிமை பேரவையால் ஆணை வழங்கப்பட்ட, மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் முழுமையான விசாரணைகளை இந்த விடயத்தில் முக்கியமான பங்களிப்பு வழங்கச் செய்வது குறித்து நான் உறுதியாகவுள்ளேன். இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை நிராகரித்தது மற்றும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது குறித்து நான் ஆழ்ந்த கவலைகொண்டுள்ளேன். இலங்கையின் நீண்ட கால நலன்களை கருத்தில் கொண்டு சர்வதேச விசாரணைக்குழுவுடனும், விசேட அறிக்கையாளர்களுடனும் இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். புனர்வாழ்வு புனரமைப்பு பணிகளில் இலங்கை அரசாங்கம் சிறந்த முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. எனினும், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பூரண விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைக் குழு மேற்கொள்ளும். விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முக்கியமான பங்களிப்பினை வழங்கும். விசாரணை நடத்தும் தரப்பினருடன் இலங்கை அரசாங்கம் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது இலங்கை மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நன்மைகளை ஏற்படுத்தும். தமது நாட்டுக்கு வருமாறு இலங்கை அரசாங்கம் எனக்கு அழைப்பு விடுத்துள்ளது. நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். |


0 Comments