ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், அமைச்சருமான மர்ஹூம்
எம். எச். எம். அஷ்ரஃப் இன் 14ஆவது ஞாபகார்த்த தினத்தையொட்டிய இன்றைய
தினம் 16 ஆம் திகதி தலைவர் தினமாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
சட்டத்தரணி எச். எம். எம். ஹரீஸ் பிரகடனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற உறுப்பினரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
அதற்கமைய 15 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஒரு வார காலத்திற்கு
கல்முனை தொகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தலைவர் ஞாபகார்த்த தினத்தை நினைவுகூருமுகமாக 16 ஆம் திகதி காலை கல்முனை
தொகுதியிலுள்ள 30 இடங்களில் ஞாபகார்த்த நினைவு தின நிகழ்வுகளும்,
ஞாபகார்த்த உரைகள், மர நடுகை என்பனவும் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் கத்தமுல் குர்ஆன் தமாம்
வைபவமும் துஆப் பிரார்த்தனையும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அங்கு தெரிவித்தார். மேலும் அன்னாரின்
வாழ்க்கை வரலாறு அடங்கிய குறுந்திரைப்படமும் காண்பிக்கப்படவுள்ளது.
இன்று 16 ஆம் திகதி சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில்
விளையாட்டு மைதான அபிவிருத்தி, பிரதான வீதி மின் விளக்கு திட்டம் திறந்து
வைத்தல். பாடசாலை அபிவிருத்திப் பணிகள். புதிய மையவாடி அபிவிருத்தி, உள்ளக
வீதிகள் நிர்மாணம் என்பனவும் இடம் பெறவுள்ளன.
தலைவர் ஞாபகார்த்த தினத்தை நினைவு கூருமுகமாக முதல் தடவையாக கல்முனை
தொகுதியிலுள்ள தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திக்கு 70 இலட்சம் ரூபா நிதியை
ஒதுக்கி அந்த பிரதேசங்களிலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் ஆரம்பித்து
வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.
மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரஃப் :
அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் முடிசூடா மன்னனும், ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் காவிய நாயகனுமான மொஹமட் ஹூசைன் முஹமட் அஷ்ரஃப் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகர்த்தாவான காத்தான்குடியைச் சேர்ந்த அகமத்
லெப்பையுடன் கூட்டாக செப்டெம்பர் 1981 இல் கட்சியை நிறுவினார். என்றாலும்
1986 இல் கட்சியின் தலைமைத்துவத்தை உரிய வகையில் பொறுப்பேற்ற பின்னர்,
எம்.எச்.எம். அஷ்ரஃப் முஸ்லிம் காங்கிரஸிற்கு புதிய தொலைநோக்கையும், புதிய
பாதையையும் கொடுத்தார்.
15 வருடங்களாக அஷ்ரப் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில்
அவரின் இலட்சிய வீறும், சாதிக்கும் ஆற்றலும் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் பற்பல சாதனைகளைக் கண்டது.
வாழ்வின் உச்சக் கட்டத்தில், இலங்கையின் அரசியல் வானில் பிரகாசித்துக் கொண்டிருந்த இவர் மர்மமான ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார்.
2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி கேகாலை மாவட்டத்தில்
அரநாயக்க பகுதியில் உரக்கந்த மலைத்தொடர்மேல் இலங்கை விமானப்படையின் எம்.ஐ-
17 ரக ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளாகியதில் எம். எச். எம். அஷ்ரஃப் தனது
51ஆவது வயதில் மரணமானார். இவருடன், விமான ஊழியர், பாதுகாப்பு
உத்தியோகத்தர்கள், தனிப்பட்ட ஊழியர்கள், அரசியல் ஆதரவாளர்கள் என 14 பேர்
கொல்லப்பட்டனர். (ஸ)
நன்றி:Daily Ceylon
-AsM-


0 Comments