ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. ஜெயலலிதாவின் வருகையையொட்டி நீதிமன்ற வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
தீர்ப்பு வழங்கப்படும் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகம் மற்றும் தமிழக-கர்நாடக எல்லையில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சுமார் 11 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கென சென்னையில் இருந்து 10 மணிக்கு தனி விமானத்தில் பெங்களூரு புறப்படும் ஜெயலலிதா, 10.35-க்கு அங்கு சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், தீர்ப்பு வழங்கப்படும் நீதிமன்ற வளாகத்திற்கு அவர் செல்கிறார். ஜெயலலிதாவுடன் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் பெங்களூரு செல்கிறார்கள்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி தமிழக-கர்நாடக எல்லை மற்றும் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிடுகிறார்.
தீர்ப்பைக் கேட்க தமிழகத்திலிருந்து ஏராளமானோர் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பெங்களூரு காவல்துறை ஆணையர் எம்.என் ரெட்டி தெரிவித்துள்ளார்.
144 தடை உத்தரவு
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவிருப்பதை முன்னிட்டு, பரப்பன அக்ரஹார பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று இரவு முதல் 48 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும் என பெங்களூரு மாநகர காவல் ஆணையர் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு செல்லும் முதலமைச்சர் ஜெயலலிதா, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ள பரப்பன அக்ரஹார பகுதிக்கு செல்வார் எனத் தெரிகிறது. இதற்காக நீதிமன்ற வளாகம் அருகே ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டால், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து காரில் நீதிமன்ற வளாகம் செல்லவும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி, சாலையின் இருமருங்கிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு அருகே ஊடகங்களுக்கான இடம் வரையறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தீர்ப்பையொட்டி, அதிமுகவினர் அதிகளவில் பெங்களூருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழக- கர்நாடக எல்லையான ஓசூரில் போக்குவரத்து தணிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி : புதிய தலைமுறை
JAH/
0 Comments