- மும்பை ஹோட்டல் உரிமையாளர்களின் முன்மாதிரி -
இந்தியா, மும்பை நகர முஸ்லிம் உணவகம் / ஓய்வுவிடுதி (Hotel / Restaurant) உரிமையாளர்கள் கொகாகோலா (Coca cola), பெப்சி (Pepsi) விற்பனையை முற்றாகப் பகிஷ்கரிக்கின்றனர். காஸா - பலஸ்தீனில் இஸ்ரவேல் இராணுவத்தினால் தினந்தோறும் பொது மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டிக்கும் முகமாக இவ் விற்பனைப் பகிஷ்கரிப்பை மேற்கொள்கின்றனர்.
"நாம், இந்தியாவில் இருந்துகொண்டு இவ்வளவுதான் செய்ய முடியும். அவர்களின் பொருளாதாரத்தைத் தாக்குவதை விட வேறு என்ன சிறந்த வழிமுறை இருக்க முடியும்" என Shalimar Restaurant உரிமையாளர் உமர் ஷெய்க் வினவுகின்றார். "மக்கள் அவர்களுக்கு எதிராக உள்ளனர் என்பதையும் அவர்கள் செய்வது குற்றம் என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்" எனவும் அவர் கூறினார்.
இஸ்ரவேலுக்கு நிதியுதவி வழங்கும் அமெரிக்கா மீதான தமது விசனத்தை வெளிப்படுத்துவதற்காக அமெரிக்க உற்பத்தி மென்பானங்களையும் மும்பை முஸ்லிம்கள் பகிஷ்கரிக்கின்றனர். இதற்கு மாற்றீடாக உள்நாட்டு (இந்திய) உற்பத்திகளை வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுகின்றனர்.
இந்தியாவின் பொருளாதார தலைநகரமான மும்பையில் சுமார் 2000 வரையிலான உணவகங்கள் ஓய்வுவிடுதிகள் உள்ளன. இவற்றில் அதிகமானவை முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை. இவர்கள் கொகாகோலா பெப்ஸி விற்பனையை முற்றாகக் கைவிட்டுள்ளனர்.
"நாம் மகாத்மா காந்தி போதித்த அகிம்சை வழிமுறையைப் பின்பற்றுகின்றோம்" என Persian Darbar உணவகத்தின் உரிமையாளரும் அனைத்திந்திய உணவகங்களின் கூட்டமைப்பின் (All India Restaurant Association) உறுப்பினருமான ஜாவித் கோத்வால் கூறுகின்றார்.
"நாங்கள் எவரையும் நிர்ப்பந்திப்பதில்லை. எமது வாடிக்கையாளர்களுக்கு இவற்றைப் பரிமாறுவதை நிறுத்திவிட்டோம். அதற்கு மாற்றீடாக உள்நாட்டு உற்பத்திகளை அறிமுகப்படுத்துகிறோம்" என்றும் அவர் கூறினார்.
மும்பை முஸ்லிம் ஹோட்டல் உரிமையாளர்களின் கொகாகோலா பெப்ஸி விற்பனைப் பகிஷ்கரிப்பினால், சராசரி ஒரு நாளைக்கு சுமார் 14 மில்லியன் இந்திய ரூபா (US$ 230,000) இம் மென்பான உற்பத்தி கம்பனிகள் நட்டம் அடைவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
மூலம்: OnIslam.net
தமிழில்: Hisham Hussain, Puttalam
நன்றி: The Puttalam Times


0 Comments