Subscribe Us

header ads

ஊவா தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு களம் அமைக்கப்பட்டால் அது சமூகத்தின் விடியலுக்கான ஆரம்பம்-ஹசன் அலி

slmc2
முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒரு கூட்டான அமைப்பில் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே சமூகத்துக்கு எதிரான சவால்களுக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போன்று போராட முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரம்  பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்துள்ளார் .

எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் அரசியல்கட்சிகள் கூட்டாக இணைந்து போட்டியிடுவதற்கான எதிர்பார்ப்பு உள்ளதா என வினவப்பட்டபோது மேலும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளதாவது

ஊவா மாகாண சபைத் தேர்தலில் நாம் கூட்டு சேர்ந்து போட்டியிடுவோமா என்று ஒரு முஸ்லிம் அரசியல் கட்சி மற்றுமோர் முஸ்லிம் அரசியல் கட்சியை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தி கொண்டிருந்தால் பல தீர்வு காண முடியாத பிரச்சினைகள் ஏற்படும்.

யார் தலைமை வகிப்பது? வெற்றி பெற்றால் கூட்டமைப்பை யார் வழிநடத்துவது போன்ற வாதங்கள் எழலாம். அதனால் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் சமூகம்தான், முஸ்லிம்கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிட வேண்டுமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

சிவில் சமூகம் பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் பொதுவான அமைப்புகள் கலந்துரையாடி ஒரு தீர்வுக்கு வரமுடியும். தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து செயற்படுவதனாலேயே தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்காக பலமாக போராட முடிகிறது. அரசாங்கமும் தமிழ் சமூகத்தின் விடயங்களில் தீர்வுகள் பெற்றுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையின்மையும், பிளவுபட்ட அரசியலுமே இனவாதிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனைத் தெரிந்துகொண்ட இனவாதிகள் எமது சமூகத்தின் பொருளாதாரத்தை அழிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள்.ஊவா மாகாணத்திலிருந்து முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்புக்கு களம் அமைக்கப்பட்டால் அது சமூகத்தின் விடியலுக்கான ஆரம்பமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments