பாவா உட்டோ உட்டோ' ரமழான் மாதங்களில், அதிகாலைக்கு முந்திய சாமத்தில், உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவர்களைத் துயிலெழுப்பிய குரலோசையைக் கேட்டவர் எவரும், இன்று எம் மத்தியில் இருப்பது சந்தேகம்.
இற்றைக்கு சுமார் நூறு வருடங்களுக்கு முன், அலாரம் இல்லாத அக் காலத்தில், ஸஹர் வேளைகளில், ரபான் மேளத்தைக் கொட்டியவளாக, 'பாவா உட்டோ உட்டோ' (ஜயா எழும்புங்கள் எழும்புங்கள்) என்று தன் தாய்மொழியில் கூவி, ஸஹருக்குரிய நேரத்தை அறிவித்த அப்கானிஸ்தான் வம்சாவளிப் பெண்ணொருத்தியைப் பற்றி புத்தளம் நகரைச் சேர்ந்த முதியவர்கள் கூறக் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
அடுத்து வந்த அரை நூறாண்டு, பக்கீர் இஸ்மாயீல் பாவாவின் வென்கலக் குரல் கேட்டு புத்தளத்தில் சேவல் கூவிய காலம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் பக்கீர் பைத் பாடி இந்தியா, மலோசியா நாட்டவர்களையும் கவர்ந்த காந்தக் குரலின் உரிமையாளன்.
இஸ்மாயில் பக்கீர் பாவாவின் காலப் பகுதியில், புத்தளம் நகர வீதிகளில் வீதி விளக்குகள் மிகக் குறைவு. அரிக்கன் விளக்கை ஏந்துவதற்காகவும் தெரு நாய்களை விரட்டுவதற்காகவும் தனது அன்னன் மகனையும் அழைத்துக்கொள்வார். இஸ்மாயில் பாவா பைக்கீர் பைத்துக்களையும் நாகூர் ஈ.எம். ஹனிபாவின் பாடல்களையும் ரபான் மேளத்தைத் தட்டிக்கொண்டு பாடுவார். அன்று சிறு பையனாக தனது சித்தப்பாவிடம் குருகுலம் பயின்ற நைனா முஹம்மத் பக்கீர் பாவா அன்மைக் காலம் வரை இப் பணியை மேற்கொண்டார்.
ஸஹர் வேளையை அறிவிக்கும் பக்கீர் பாவாக்களின் சேவையும் தேவையும் அருகிப்போனதில் மேசை அலாரம் முதல் கைப்பேசி அலாரம் வரை பல்வேறு அலார வகைகளின் வருகை மட்டும் காரணம் அல்ல. பாராட்டப்பட வேண்டிய இவர்களின் அறப்பணியை, அற்பப் பணியாக நோக்கச் செய்த சமகால சிந்தனைப் பிரழ்வு அகக் காரணியாக அமைந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும்.
மனிதரின் சிந்தனையை ஊடகங்களும் அவரது தேவைகளை விளம்பரங்களும் தீர்மானிக்கும் இன்றைய காலப் பிரிவில் கூட, தன்னந் தனியாளாக தனியொரு மனிதன் ரபான் மேளத்துடன் பாடல்களை பாடிக்கொண்டு ஸஹர் வேளைகளில் புத்தளம் நகரின் வீதிகளில் உலா வருகின்றான். 'அவன் ஏன் இப்படி அல்லல்படுகின்றான்? அவனுடைய தேவைகள்தான் என்ன?'.... இன்று ஸஹருக்காவது கேட்போமா?
ஹிஷாம் ஹுஸைன், புத்தளம்.
நன்றி: The Puttalam Times
0 Comments