Subscribe Us

எப்போது மாறும் இந்தப் பழக்க வழக்கம்!



(ஜம்ஸித் அஸீஸ்)

மத்திய கொழும்பின் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பகுதி. 
அந்தப் பகுதியிலுள்ள பள்ளிவாசல்களில்தராவீஹ் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
முதியவர்கள், நடுத்தர வயதுடையோர், இளைஞர்கள், சிறுவர்கள்... என பள்ளிவாசல்களின் 75 வீதமான ஸப்களும் நிரம்பி வழிகின்றன.
ரமழானில் மாத்திரம் காணக் கிடைக்கும் பாக்கியங்களில் இதுவும் ஒன்று, புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!

ஆனால், தராவீஹுக்குச் செல்லும் பிரதான பாதையில்,

** வாலிபர்கள் சிலர் உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்... (முஸ்லிம் சமூகம் பந்தாடப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது என்பதைப் புரியாமல்)

** மற்றும் சில வாலிபர்கள் நவீன கையடக்கத் தொலைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்... (முஸ்லிம் சமூகத்திற்கு எதிராய் கேம் அமைக்கப்படுகிறது என்பதைப் புரியாமல்)

** இன்னும் சில இளைஞர்கள் பாதையோரத்தில் கைவாறும் சிரிப்பும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வர்ணனையும் அநாகரிக வார்த்தைகளுமாய் நின்று கொண்டிருக்கிறார்கள்... (அவர்களில் ஒருவர் 'இது ரமழான் மாதமல்லவா? இந்த மாதத்திலாவது நல்லதைப் பேசுடா..' என்கிறார். அதற்கும் ஒரு நக்கல்... மீண்டும் சிரிப்பு...)

** மூத்தவர்கள் சிலரும் பாதையோரம் இருந்து அரசியல் பற்றி அலசிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் பல... முக்கியமானதை மாத்திரம் சுட்டிக் காட்டினேன்.

அவர்களுக்கு அந்த இடத்தில் வைத்து அறிவுரை வழங்க எவருக்கும் துணிவில்லையா? 

அல்லது இதற்கு தீர்வு காண முடியாது என்ற எண்ணத்தில் எல்லோரும் கண்டும் காணாதது போல் சென்று விடுகிறார்களா?

ரமழான் கால நடைமுறை குறித்து பள்ளிவாசல், ஊர், சமூகத் தலைமைகளால் தொடர்ந்தும் அறிவுரைகள் வழங்கப்பட்ட வண்ணமிருக்கின்றன.

ஆனாலும், நடைமுறையில் பாரிய மாற்றம் எதுவும் தென்படுவதாகத் தெரியவில்லை.

எனவே, இது குறித்து இஸ்லாமிய இயக்கங்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, சமூக நிறுவனங்கள், அவ்வப் பகுதி பள்ளிவாசல் நிர்வாக சபையினர், ஊர்த் தலைமைகள் கலந்துரையாடி இதனைக் கையாள்வதற்கான பொறிமுறையொன்றை வகுத்து பல்வேறு வழிமுறைகள் ஊடாக நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவது காலத்தின் தேவை!
Thanks: The Puttalam Times

Post a Comment

0 Comments